வெள்ளி, 27 அக்டோபர், 2017

குண்டுக் கரிச்சான்.. வண்ணாத்திக் குருவி.. ( Oriental magpie-robin ) - பறவை பார்ப்போம் (பாகம் 20)

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 24)
#1
ஆங்கிலப் பெயர்: Oriental magpie-robin
குண்டுக் கரிச்சான் குருவி என அறியப்படும் oriental magpie-robin நான் பாகம் 15_ல் பகிர்ந்திருந்த ’வெண்புருவ வாலாட்டி'யின் அளவிலும் தோற்றத்திலும் இருந்தாலும் இவற்றுக்கு முகத்திலும் வாலிலும் வெண்ணிறக் கோடுகள் இருக்காது. கிளைகளைப் பற்றிக் கொண்டு அமரும் பாசரைன் வகைப் பறவையான இது ஒரு காலத்தில் பாடும் பறவைகளோடு வகைப்படுத்தப் பட்டிருந்தாலும், தற்போது  Old World flycatchers பூச்சிப் பிடிப்பான்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

#2

உயிரியல் பெயர்: Copsychus saularis

இவை தனித்துவமான கருப்பு-வெள்ளை நிறத்தில் இருக்கும். நீண்ட வாலை கீழுள்ள படத்தில் இருப்பது போல் உயர்த்திக் கொண்டு நிலத்தில் பூச்சிகளைத் தேடும்.

#3


வாலுடன் சேர்த்து ஏழரை அங்குல நீளம் இருக்கும் இக்குருவிகள்.  ஆண் பறவைகளின்  மேல்பகுதி, தலை மற்றும் தொண்டைப் பகுதிகள் நல்ல கரிய நிறத்தில் இருக்கும். தோள் பகுதியில் மட்டும் வெள்ளை நிறக் கோடுகள் கொண்டிருக்கும். உடலின் கீழ் பகுதியும் வாலின் இரு பக்கங்களும் வெண்ணிறமாக இருக்கும்.

#4
பெண் பறவைகள் சாம்பல் கலந்த கருப்பும், சாம்பல் கலந்த வெள்ளை நிறமுமாக இருக்கும். குஞ்சுகளின் மேல்பகுதியும் தலையும் சற்றே பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.

#5

அந்தமான் தீவுகளில் காணப்படும் பெண் குண்டுக் கரிச்சான் குருவிகள் ஆழ் கருப்பு நிறத்தில், கனத்த உறுதியான அலகுகளையும் குட்டையான வால்களையும் கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஆண் பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலவே காணப்படுகின்றன.

குண்டுக் கரிச்சான் குருவிகளின் இனப்பெருக்கக் காலம் இந்தியாவில் மார்ச் முதல் ஜூலை வரையில். மற்ற தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் ஜனவரி முதல் ஜூன் வரையில். பெண் பறவைகளை ஈர்க்க ஆண் பறவைகள் உயர்ந்த மரக் கிளைகளில் அமர்ந்து பாடும். இறக்கைகளைச் சிலிர்த்துக் கொண்டு அலகினை உயர்த்தி வால்களை ஆட்டும்.

#6



மரப் பொந்துகளிலும் சுவர் விளிம்புகளிலும் கட்டிட உச்சிகளிலும் கூடுகளை அமைக்கும் ஆயினும் மக்கள் அமைத்துக் கொடுக்கும் மரக் கூண்டுகளையும் பயன்படுத்திக் கொள்ளும். முட்டையிடுவதற்கு ஒரு வாரம் முன்னர் பெண் பறவையே கூடு கட்டுவதன் பெரும்பாலான வேலைகளை ஏற்றுக் கட்டி முடிக்கும். 24 மணி நேரத்தில் நான்கு அல்லது ஐந்து முட்டைகளை சில மணி இடைவெளிகளில் இட்டு முடிக்கும். முட்டைகள் நீள் வட்ட வடிவில் வெளிறிய நீலம், பச்சையில் வைக்கோல்களின் வண்ணத்தோடு ஒத்துப் போகும் வகையில்  பழுப்புப் புள்ளிகளுடன் இருக்கும். குஞ்சுகள் வெளியில் வர 7 முதல் 14 நாட்கள் ஆகும். பெண் பறவைகள் மட்டுமே முட்டைகளை அடை காக்கும். கூட்டைக் கட்டுவதிலும் அடை காப்பதிலும் குஞ்சுகள் பிறந்ததும் உணவு அளிப்பதிலும் பெண் பறவையின் பங்கே அதிகமாய் இருப்பதனால் அவற்றுக்கு “வண்ணாத்திக் குருவி” என்ற பெயர் வந்திருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருக்கிறார் திரு.கல்பட்டு நடராஜன் இந்தப் பறவை குறித்த பகிர்வில்.

ஆண் பறவைகள் முதலில் தன் இணையை வேறு ஆண்பறவைகள் நெருங்கிடாதிருக்கவும், பின்னர் கட்டப் பட்டக் கூட்டைக் காக்கவும் ஆக்ரோஷமாகப் போராடுவதிலேயே பெரும்பாலான  நேரத்தைக் கழிக்கும். விரோதிகளை விரட்ட எப்போதும் துடிதுடிப்பாய் அமைதியற்று இருக்கும் ஆண் பறவைகள் சமயங்களில் தம் நிழலைப் பார்த்தே கோபம் கொள்ளுமாம்.

கீழ் வரும் இரு தகவல்களும் நான் நேரிலும் கண்டறிந்த உண்மைகள்:

1. இருள் சூழும் மாலை நேரத்தில்தான் மிக சுறுசுறுப்பாக இருக்கும்.

ஆம். மாலை ஆறரை, ஏழு மணி வரையிலும் கூட புல்வெளியில் வாலை உயரத் தூக்கிப் பீடு நடை போட்டு உலாவும். தத்தித் தாவி புழுப்பூச்சிகளைத் தேடித் தேடி உண்ணும்.

2. சில நேரங்களில் மரத்தின் இலைகளில் தேங்கும் சிறு அளவு மழைநீரிலும் குளிக்கும்.

அட, ஆமாம். சிறு கிண்ணம் அளவு தண்ணீரே போதும், இது உருண்டு பிரண்டு தன்னை நனைத்துக் குளித்துக் கொள்ள:). தோட்டத்துக் கல்லில் தேங்கியிருந்த மழை நீரில் அப்படிக் குளித்து முடித்தக் காட்சி படங்களாக இங்கே:

#7

#8

#9


ந்தியத் துணைக் கண்டங்களிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் குண்டுக் கரிச்சான்கள் பரவலாக வசிக்கின்றன. நகர்ப்புறத் தோட்டங்களிலும் வனங்களிலும் சர்வ சாதாராணமாகத் தென்படுகின்றன.  இந்தியாவில் இவற்றின் பாடும் மற்றும் சண்டையிடும் திறனுக்காகக் கூண்டுப் பறவைகளாக ஒரு காலத்தில் அதிகம் வளர்க்கப் பட்டிருக்கின்றன. இப்போதும் தென் கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் செல்லப் பறவைகளாக விற்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் இப்பறவைகளை மங்களகரமானவையாகக் கொண்டாடுகிறார்கள். வசந்த காலத்தில் இவை எழுப்பும் கீச்சொலி நற்செய்திகளைக் கொண்டு வருவதாக நம்புகிறார்கள். நிலவும் நாட்டுப் புறக் கதை ஒன்றின் தொடர்ச்சியாக, காதலர்களை இணைக்க ஆயிரம் குண்டுக்கரிச்சான்கள் சேர்ந்து கட்டியதாக நம்பப்படும் பாலத்திற்கு ச்சியே சியாவ் (குண்டுக் கரிச்சான் குருவிப் பாலம்) என்றே பெயரிட்டிருக்கின்றனர். இந்தப் பெயரைத் திருமணத் தகவல் மையங்கள் இப்போதும் பயன்படுத்தி வருகின்றன.

பங்களாதேஷின் தேசியப் பறவை குண்டுக் கரிச்சான். அங்கே டோயல் என அழைக்கப்படுகிறது. பல இடங்களில் இதைச் சின்னமாகப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். நோட்டுப் பணத்திலும் சின்னமாக இடம் பெற்றுள்ளது. தலைநகரான டாக்காவில் ஒரு முக்கிய இடம் “டோயல் சத்வார்” (டோயல் சதுரம்) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
***

தகவல்கள்: விக்கிப்பீடியா உட்பட  இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.



18 கருத்துகள்:

  1. குண்டு கரிச்சான் குருவி. இதுக்கு வேற பேரு சொல்வாங்க. படங்களும், விவரங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பெயரையும் தெரிவித்தால் பதிவில் சேர்த்து விடலாமே.

      நன்றி ராஜி.

      நீக்கு
  2. குண்டு கரிச்சான் குருவி அழகு.
    அதன் படங்கள் வெகு அழகு.
    விவரங்கள் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் வீட்டுத்தோட்டத்தில். ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
  5. படங்களுடன் குண்டு கரிச்சான் பற்றி தகவல்களை அறிந்து கொண்டேன் அருமை

    பதிலளிநீக்கு
  6. படங்களும் தகவல்களும் அற்புதம் சகோதரி
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. உடல்மொழி, சப்தங்கள், சமிக்ஞை வழியாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் குறித்து வாசிக்கும்போது சுவாரஸ்யமாக உள்ளது. இந்த சிறு உயிரினங்களும் தனக்குரியவற்றை விட்டுக்கொடுக்கக்கூடாது என்னும் உணர்வுகொண்டு போராடும் இயல்பே இயற்கையின் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  8. வண்ணாத்திக் குருவி...ரொம்ப அழகு ..தகவல்களும் மிக அருமை...

    வால்களை உயர்த்தி ..இரை தேடும் பாங்கு வெகு அழகு.....

    பதிலளிநீக்கு