புதன், 17 பிப்ரவரி, 2016

“இயற்கையைப் படமாக்குவது தியானம்..” நேர்காணல்.. தமிழ் யுவர்ஸ்டோரி.காமில்..

இன்று 17 பிப்ரவரி 2016, தமிழ் யுவர் ஸ்டோரி.காமில் எனது நேர்காணல்.

நன்றி யெஸ். பாலபாரதி !

ணையம் பயன்படுத்தும் தமிழ்வாசகர்களிடம் மிகவும் அறிமுகமான பெயர் ராமலக்ஷ்மி. இவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட எழுத்தாளர். எழுத்தாளராகவும், நல்ல வாசகியாகவும் இருப்பது அவரது மொழியாளுமையைக் காட்டுகிறது என்றால் ஒரு புகைப்படக் கலைஞராக அவர் உருவாக்கும் படைப்புகள் அவரது காட்சி சார்ந்த நுன்ணுர்வைக் காட்டுகிறது. தான் கடந்துவந்த பாதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.


“..... இலக்கை நோக்கிய பயணமாக இல்லாமல் இயன்றவரை சிறப்பாகச் செய்யும் நோக்கத்துடன் பயணிக்கிறேன். ..." 

குழந்தைப்பருவம்

 “சிறுவயது அனுபவங்களால் கிடைக்கிற பக்குவம் வாழ்நாள் முழுவதும் துணை வருவதாக நம்புகிறேன். பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி சிந்துபூந்துறையில். உறவுகள் சூழ்ந்த கூட்டுக் குடும்பத்து நினைவுகள் அனைத்துமே பொக்கிஷங்கள். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், தம்பி, இரண்டு தங்கைகள். எனக்கு ஒன்பது வயதாக இருக்கையில் அப்பா விபத்தில் காலமாகி விட தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தோம். நான் கல்லூரி நுழைந்த சமயம், தாத்தா காலமானார். அதே வருடம் அண்ணனும் தவறியது ஆறாத ரணம். அதிலிருந்து அம்மா மீண்டு வர அவரது பெற்றோர் வசித்த பகுதிக்கு, எங்கள் கல்லூரிக்கு சற்று அருகே குடி பெயர்ந்தோம். பெண் பிள்ளைகளுக்கு படிப்பு எதற்கு, அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்து விடலாமே என உறவினர்கள் பலர் சொன்னபோது, உறுதியாக இருந்து எங்கள் மூவரையும் முதுகலைப் பட்டம் வாங்க வைத்தார் அம்மா.

 “உறவுகள் சூழ்ந்த கூட்டுக் குடும்பத்து நினைவுகள் அனைத்துமே பொக்கிஷங்கள். ”
பொருளாதார ரீதியான பிரச்சனைகள் பெரிதாக இருக்கவில்லை என்றாலும் அப்பாவின் மறைவுக்குப் பிறகு, எதிலும் அதிக ஆசை கூடாதெனச் சொல்லி வளர்த்தார் அம்மா. அதன்படி நாங்கள் நடந்து கொண்டதே தனக்குப் பெரிய பலமாக அமைந்ததென்று இப்போது அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே எந்த உயர்வுகளையும் இயல்பாக எடுத்துக் கொண்டு தற்போது நாங்கள் கடந்து செல்வதாகவும் சொல்வார். எந்த பிரச்சனையும் பாஸிட்டிவாக அணுகவும் அவரிடமே கற்றோம்.

கல்லூரி மற்றும் திருமணம்

செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் என்னைப் போன்ற பல்லாயிரம் மாணவியரைச் செதுக்கிய கோவில். எழுபது மற்றும் எண்பதின் தொடக்கத்தில் என் பள்ளிக்காலம். கண்டிப்பான ஆசிரியர்கள். சின்னச் சின்ன விஷயங்களிலும் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வைத்து, தவறும் போது கடுமையாகத் தண்டித்து நெறிப்படுத்தி உலகை எதிர்கொள்ள எங்களைத் தயார் செய்தார்கள். அன்றைக்கு அந்தக் கண்டிப்பு கசப்பானதாய் இருந்தது. பெற்றோருக்கு இணையான அக்கறை அது என்பதை நன்றியுடன் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. நடுநிலைப் பள்ளியில் நாடகம், நடனம் என மேடையேறிய அனுபவங்கள் நிறைய.

 என் ஆரம்பகால எழுத்துக்கு அடித்தளம் இட்டதில் சாரா டக்கர் கல்லூரிக்குப் பெரும் பங்கு உண்டு. கல்லூரி இலக்கியப் போட்டிகள்,கவியரங்கங்கள், அடிக்கடி அவர்கள் அழைத்து சென்று கலந்து கொள்ள வைத்த இன்டர் காலேஜ் போட்டிகள், அதில் கிடைத்த வெற்றிகள் எல்லாம் மறக்க முடியாதவை. என் தமிழ் பேராசிரியர் திருமதி. விமலா சாமுவேல் தந்த ஊக்கத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இங்கே எம்.ஏ ஆங்கிலம் முடித்த பின், மதுரை காமாராஜர் பல்கலைக் கழகத்தின் நெல்லை மையத்தில் (எம்.ஃபில்) ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்றேன்.

1988, நான் படிப்பை முடித்த வருடத்தில் திருமணம். தாத்தாவின் ஆத்ம நண்பரான எங்கள் குடும்ப மருத்துவரின், இளைய மகனே கணவரானார். இரண்டு வருடங்கள் மும்பைக்கு அருகே உள்ள தானே நகரில் வாசம். பின்னர் இடம்பெயர்ந்து 1991லிருந்து பெங்களூரில் வசிக்கிறோம். 
கணவர் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் வைஸ் பிரஸிடெண்ட் பொறுப்பில் இருக்கிறார். அவரைப் பற்றி பெருமையும் அதே நேரம் நான் பொறாமையும் கொள்கிற விஷயம் அவருடைய வாசிப்பு. இடைவிடாத அலுவலகப் பணியால் நேரம் கிடைப்பது அரிதாக இருந்தாலும் வாரயிறுதி அல்லது தினசரி பயண நேரத்தில் என வாங்கும் நூல்களைப் படித்து விடுவார். எங்களுக்கு ஒரே மகன். பி.இ முடித்து ஒருவருடம் பணி செய்த பின், பெயர் பெற்ற கல்லூரியில் இடம் கிடைத்து வட மாநிலத்தில் எம். பி. ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் திறமைசாலி. குறிப்பாக செஸ், ஃபுட்பால் மற்றும் ஓட்டம். பள்ளி காலத்திலிருந்து இப்போதைய கல்லூரி வரைக்குமாக வாங்கிய, பெற்ற தந்த பதக்கங்கள் ஏராளம்.

புகைப்படக்கலையின் மீது ஆர்வம்

அப்பா எடுத்த எங்கள் சிறுவயதுப் படங்களே எனக்கு இன்ஸ்பிரேஷன். அப்பாவின் சகோதர சகோதரிகளும் புகைப்பட ஆர்வலர்கள். அப்பாவின் யாஷிகா-டி கேமராவில் நானும் அண்ணனும் படம் எடுக்கக் கற்றுக் கொண்டோம். அதைத் தொடர்ந்து எனக்கென பள்ளி காலத்தில் க்ளிக் ஃபோர் கேமராவும், கல்லூரி படிக்கையில் ஹாட் ஷாட் கேமராவும் வாங்கப்பட்டன. திருமணத்துக்குப் பிறகும் என் ஆர்வம் தொடர்ந்ததைப் பார்த்து, வீடியோ கேமரா, டிஜிட்டல் பாயிண்ட் & ஷூட், DSLR, அதற்கான லென்ஸுகள் என என் கணவரும் வரிசையாக கால மாற்றத்துக்கேற்ப வாங்கித் தந்தபடி இருக்கிறார்.

எப்படி உங்களால் தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்க முடிகிறது, அதற்கு நடுவே எழுத்திலும் செயல்பட முடிகிறது என்பது பலரும் என்னைக் கேட்கிற கேள்விகள். மகன் பத்தாவது வகுப்பு முடிக்கும் வரையில் குடும்பம், வீடு இதைச் சுற்றியே என் முழுக் கவனமும் இருந்து வந்தது. அவன் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் பருவம் வந்துவிட, எனக்கு நேரம் நிறையக் கிடைத்தது. எனக்கென அப்போது தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்தப் பாதையில் பயணிக்க, இன்று வரை ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறார்கள் கணவரும், மகனும்.

சுற்றுலா, கண்காட்சிகள், பொது இடங்களில் நான் படம் எடுத்து முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருப்பார்கள். விரும்பும் இடங்களுக்கு உடன் வருவார்கள். அதேப் போல நெல்லை செல்லும் போது தம்பியும் என்னை புகைப்படம் எடுப்பதற்காகவே அழைத்துச் செல்வதுண்டு.

சில வருடங்களுக்கு முன் செய்து கொண்ட ஒரு அறுவை சிகிச்சையின் பின் விளைவால் ஏற்பட்டன பல உடல் உபாதைகள். அதிக எடை தூக்க முடியாத நிலை.  கூடுதலாக, கணினி நேரங்களால் ஏற்பட்ட சர்விகல் ஸ்பான்டிலிடிஸ். அதனால் ஏற்படும் கழுத்து வலி.இவற்றுக்கு நடுவே என்னை உற்சாகமாக உணர வைப்பது புகைப்படக் கலையே. அதிகப்படியான லென்ஸுகளை எடுத்துச் செல்வதில், கழுத்தை வளைத்து நிமிர்த்திக் கோணம் பார்ப்பதில் சிரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்து வருகிறேன். எவ்வளவு எடை தூக்கலாமோ அதற்குள்ளாகவே என் கேமரா உபகரணங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.


தொடரும் பயணம்

இரண்டாயிரம் படங்களைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் என் ஃப்ளிக்கர் பக்கத்தில் தினசரி ஒன்று அல்லது இரண்டு படங்களைப் பகிர்ந்து விடுவேன். ஆனால் அதற்காக தினமும் கேமராவைக் கையில் எடுப்பதில்லை. அவ்வப்போது எடுத்து வைத்ததில் இருந்தே பகிருகிறேன்.

புகைப்படக் கலையில் தீவிரமாக இறங்கிய பிறகு எழுத்தில் ஒரு தேக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மனதில் உருவாகி எழுத்தில் வடிக்காது விட்ட கதைகள் நிறைய. ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பின் மீட்டெடுத்த எழுத்தை விட்டு விடக்கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறேன். எழுத்துக்கும் வாசிப்புக்கும் இன்னும் அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை எப்படியேனும் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை எழுதியவற்றைத் தொகுத்து வைக்கலாம் என்றே 2008இல் 'முத்துச்சரம்’வலைப்பூவைத் தொடங்கினேன். தமிழ்மணம் திரட்டியை மையமாகக் கொண்டு இயங்கி வந்த பதிவுலகமே என் எழுத்து மீண்டும் துளிர்த்ததற்கும், புகைப்படக் கலையில் தீவிரமாக இறங்குவதற்கும் காரணியாக இருந்தது.

"தமிழில் புகைப்படக்கலை" அதாவது Photography in Tamil எனும் தளம் அறிமுகமானதும் அப்போதுதான்.

இன்று ஒன்பது இலட்சம் பக்கப் பார்வைகளை தாண்டி பலருக்கும் பயனளித்துக் கொண்டிருக்கும் PiT, 2007ஆம் ஆண்டு ஓசைச் செல்லா, ஜீவ்ஸ் எனும் ஐயப்பன் கிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

Learn-teach-learn எனும் நோக்கத்துடன், தாம் கற்பதை மற்றவருக்குப் பகிரும் ஒருமித்த எண்ணம் கொண்டவர்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு மாதாந்திரப் போட்டிகளையும் நடத்தியும் PiT வந்தது. ஒரு முறை போட்டிக்கு guest நடுவராக இயங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குழுவிலே இணையக் கேட்டுக் கொண்டார்கள். என் அனுபவங்களையும் பாடங்களாகப் பகிர்ந்து வந்திருப்பதோடு அத்தளத்தை நிர்வகித்தும் வருகிறேன்.

பணிச்சுமை காரணமாக ஆரம்பத்தில் செயலாற்றி வந்த உறுப்பினர்களில் சிலர் விலகிக் கொள்ள, அவ்வப்போது புதியவர்களை இணைத்துக் கொண்டு ஒன்பது ஆண்டுகளாக இயங்கி வருகிற தளத்தில், பழைய பாடங்களைத் தேடிப் படிக்கவே தினம் பலநூறு பேர் வருகிறார்கள். அவர்கள் வசதிக்காக பதிவுகளை வகைப்படுத்தும் பணியையும் நேரம் கிடைக்கும் போது செய்து கொண்டிருக்கிறேன்.

மறக்கமுடியா தருணங்களும் படங்களும்

எடுத்த படங்களில் பாராட்டப்பட்டவை பலதும் இருந்தாலும் 2010இல் கருங்குளம் குன்றின் மேல் எடுத்த பெரியவர் படமும், 2011இல் பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் எடுத்த கடலை விற்கும் முதிய பெண்மணியின் படமும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை. மைசூர் தசரா ஊர்வலத்தைப் பதிவு செய்ததும் மறக்க முடியாதது.

ஓரிரு மணிகளில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான படங்களை எடுக்கும் போது, உடலை விட மூளை களைப்படைந்து விடுவதுண்டு. ஆனால் நல்ல படங்களை எடுத்த திருப்தியில் எந்த சிரமங்களும் மறந்தும் மறைந்தும் போய் விடுகின்றன!

புகைப்படக்கலை என்பது தொடர்ந்த கற்றலை வேண்டுகிற கலை. கற்பதும், கற்பவற்றைப் பரீட்சித்துப் பார்ப்பதும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. இலக்கை நோக்கிய பயணமாக இல்லாமல் இயன்றவரை சிறப்பாகச் செய்யும் நோக்கத்துடன் பயணிக்கிறேன். என் பார்வையில் இயற்கையைப் படமாக்குவது தியானம்.
ஆர்க்கிடெக்சர், சிற்பங்கள் ரசனைக்கு விருந்து. உள் அரங்குப் படங்கள் சவாலானவை. பறவை, விலங்குகளின் உலகம் ஆச்சரியம். மழலைகள் மனதை மலரச் செய்கிறார்கள். மனிதர்களின் விதவிதமான முகங்கள், அவை பிரதிபலிக்கும் உணர்வுகள், கனவுகள், வேறுபட்ட அவர்களது வாழ்க்கைச் சூழல், அவை சொல்லும் கதைகள் என, நாம் வாழும் காலத்தை வருங்கால சமுதாயத்துக்கு ஆவணப்படுத்தும் ஊடகமாகவும் இக்கலையைப் பார்க்கிறேன், என்று சொல்லும் போதே அவரது விழிகளில் குறைவில்லாத ஆர்வம் மின்னுகிறது.

சுற்றுலா மற்றும் விளம்பர நிறுவனங்கள் ராமலக்ஷ்மி எடுத்த படங்களை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். பதிப்பகத்தார் அட்டைப் படங்களுக்கு நாடுகிறார்கள். பத்திரிகைகள் பலவற்றில் இவர் எடுத்த படங்களும், இத்துறையில் கொண்டிருக்கும் ஈடுபாடு குறித்த நேர்காணல்களும் வெளியாகியுள்ளன.


கவிதை, கதை, நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு, பயணக் குறிப்பு, படத் தொகுப்பு என இவரது பயணம் தொடந்துகொண்டிருக்கிறது. இதுவரை ‘அடை மழை’ (சிறுகதை); 'இலைகள் பழுக்காத உலகம்' (கவிதை) ஆகிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது பயணம் இன்னும் உச்சம் தொட தமிழ் யுவர்ஸ்டோரி வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறது.

ராமலக்ஷ்மியின் எழுத்துக்கள் அடங்கிய தளம்

இவரது புகைப்படங்களை அடங்கிய பக்கம்

***


வளர்ப்பு, படிப்பு,  குடும்பம், திருமணம், புகைப்பட ஆர்வம், எழுத்து, PiT- தமிழில் புகைப்படக் கலை தளம், அதிக பாராட்டைப் பெற்ற படம், சிரமப்பட்டு எடுத்தப் படம் எனப் பல விஷயங்களைக் குறித்து என் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பாக அமைந்த இக்கட்டுரையை இங்கேயும் வாசிக்கலாம்:

எழுத்தாளர், புகைப்படக்கலைஞர் என பன்முகம் கொண்ட ராமலக்ஷ்மி ராஜன்

நன்றி யுவர் ஸ்டோரி.காம்!
****

**


யுவர் ஸ்டோரி.காம் ஃபேஸ்புக் பகிர்வில் வாழ்த்திய நண்பர்களுக்கும் இங்கு என் நன்றி.

10 கருத்துகள்:

  1. உங்கள் ஆஸ்தான ஹீரோ (சகோதரர் மகன்) படம் ஒன்றையும் அங்கு கொடுத்திருக்கக் கூடாதோ! உங்கள் குடும்பப் படம் முதல் முறை பார்க்கிறேன்! உங்களைப் பற்றிய விவரங்களைப் படித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்திருக்கலாம்தான்:). நன்றி ஸ்ரீராம், யுவர் ஸ்டோரி பக்கத்தில் பதிந்த கருத்துக்கும்:)!

      நீக்கு
  2. அருமையான பகிர்வு. நேர்காணலை தமிழ் யுவர்ஸ்டோரி தளத்தில் முழுவதுமாக படித்தேன். உங்கள் படம் எடுக்கும் திறனும் ஆர்வமும் எங்களுக்கும் ஒரு வழிகாட்டி......

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. முதல் முறையாக தங்களின் குடும்பம் பற்றி விரிவாக அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி.
    நேர்காணல் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பம் பற்றியும் இத்தனைத் திறமைகளின் பின்னணி பற்றியும் அழகாகச் சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. இப்போதான் படித்தேன் ராமலக்ஷ்மி . உங்கள் குடும்பம் பற்றி முழுதாக அறிய வாய்ப்புக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு