வியாழன், 4 செப்டம்பர், 2014

வெகுதூரம் செல்லாதே - பாப்லோ நெருடா (2)

வெகுதூரம் செல்லாதே, ஒரே ஒரு நாள் கூட,
ஏனெனில்-ஏனெனில்
எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை;
ஒரு நாள் என்பது நீண்டது
அதுவுமில்லாமல் நான் உனக்காகக் காத்திருப்பேன்
காலியான இரயில் நிலையத்தில்
வண்டிகள் எல்லாம் வேறெங்காவது நிறுத்தப்பட்டு
தூங்கிக் கொண்டிருக்கையில்.

என்னைத் தனியாக விடாதே, ஒரு மணி நேரம் கூட,
ஏனெனில்
சின்னத் துளிகளாய் என் வேதனைகள் யாவும்
சேர்ந்து வழியும்.
இருப்பிடம் தேடியலைகிற புகையோ
என்னுள் இறங்கி
நான் இழந்து விட்ட இதயத்தை அடைக்கும்.

ஓ, உன் கருவடிவ நிழலுருவம்
கடற்கரையில் கரைந்திடாது இருக்கட்டுமாக;
உன்  கண்ணிமைகள் வெற்றிடம் நோக்கி
படபடக்காது இருக்கட்டுமாக;
என்னை ஒரு நொடி கூடப் பிரியாதே, என் அன்பே,

ஏனெனில் அந்தக் கணத்தில் நீ வெகு தூரம் சென்றிருப்பாய்
நானோ திக்குத் தெரியாமல் உலகெங்கும் சுற்றித் திரிவேன்,
நீ திரும்பி வருவாயா?
இல்லை இங்கேயே என்னை சாகவிட்டு விடுவாயா? எனக் கேட்டபடி.
**


மூலம்:
Don't Go Far Off
by Pablo Neruda (in Spanish)

ஆங்கிலத்தினூடாகத் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி.
மலைகள் 56_வது இதழில் வெளியான கவிதை.  

14 கருத்துகள்:

  1. வணக்கம்

    மனதின் ஏக்கம் கவிதையில் தெரிகிறது.நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. முதலில் ,ஒருநாள் ,பிறகு ஒரு மணி நேரம்.அதன் பிறகு ஒரு நொடிகூட பிரியாதே என்று சொல்லும் காதலனின் உணர்வு ..பாப்லோ நெருடாவின் கைவண்ணத்தில் காலம் கடந்து நிற்கிறது !
    த ம +1

    பதிலளிநீக்கு
  3. பாப்லோ நெருடாவின் கவிதைக்கு ஒரு தனிக்கவர்ச்சி உண்டு. மொழிபெயர்ப்பே இப்படி எனில், ஸ்பானிஷ் ஒரிஜனல் தூள் பறக்கும் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி
    -ஏகாந்தன்

    பதிலளிநீக்கு