வியாழன், 13 பிப்ரவரி, 2014

சோழமண்டல மீனவர்கள் - சரோஜினி நாயுடு கவிதை (2)

விழித்தெழுங்கள், சகோதரர்களே, விழித்தெழுங்கள்;  விழித்தெழும் வானம் காலைக் கதிரவனிடம் பிரார்த்திக்கிறது,
இரவெல்லாம் அழுது களைத்தக் குழந்தையைப் போல் உறங்குகிறது காற்று, விடியலின் கைகளிலே.
வாருங்கள், கரையில் கிடைக்கும் நம் வலைகளைச் சேகரித்துக் கொண்டு கட்டுமரங்களை அவிழ்த்து விடுவோம்,
நாமே கடலின் அரசர்கள், ஏறியிறங்கும் அலைகளிடத்துத் துள்ளும் செழிப்பைக் கைப்பற்றுவோம்!

தாமதிக்க வேண்டாம், கடற்பறவைகளின் அழைப்பை வழித் தடமாகக் கொண்டு விரைவோம்,
கடல் நம் அன்னை, மேகம் நம் சகோதரன், அலைகள் நம் தோழர்கள்.
அந்திப் பொழுதில் நாம் அலைக்கழிய நேரினும், கடல் தெய்வம் நம்மைக் கைவிடுவதில்லை,
புயலைத் தன் கூந்தலில் கட்டி நிறுத்தி, நம் உயிர்களைத் தன் நெஞ்சுக்குள் மறைத்து.

இனிமையானவை தென்னைகளின் நிழலும், மாந்தோப்பின் மணமும்,
இனிமையானவை நிலவில் காயும் கடற்கரையும் அதில் நிரம்பியிருக்கும் நம் நேசத்துக்குரியவர் குரல்களும்
ஆனால் அதனினும் இனிமையானவை, சகோதர்களே,  நீர்த்திவலைகளின் முத்தமும், கட்டுக்கடங்காதக் கடல் நுரையின் களிப்பும்;
செலுத்துங்கள் படகை, சகோதரர்களே, கீழ்வானம் கடலோடும் கூடும் முனை வரைக்கும். 
**

மூலம்: Coromandel Fishers
By Sarojini Naidu



இன்று கவிக்குயிலின் பிறந்த தினம்!
*** 

11 கருத்துகள்:

  1. உற்சாகமூட்டும் ஊக்கம் தரும் வரிகள்...

    சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நானெனது பள்ளியில் படிக்கையில் மிகவும் ரசித்த கவிதை.எங்கள் ஆசிரியர் மிக அருமையாக விவரணை செய்தார்.harizon என்பதன் பொருளை இந்த கவிதையின் மூலம் தான் முதன் முதலில் தெரிந்து கொண்டேன்.

    உங்களின் தமிழாக்கம் அருமை.கடைசி இரு வரிகள் என்னை வெகுவாக கவர்ந்தவை.
    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. உற்சாகம் தரும் வரிகள். விழிமின், எழுமின் போல..!

    பதிலளிநீக்கு
  4. கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு அவரின் கவிதையை பகிர்ந்தது அருமை.
    தமிழாக்கத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எல்லோரின் நினைவிலும் நாளை வரவிருக்கும் காதலர்தினம் நிழலாடிக் கொண்டிருக்க... நீங்கள் தந்திருப்பதோ அழகான கவிக்குயிலின் கவிதையுடன் அவரது நிழற்படம்! அங்கதான் நிக்கறீங்க நீங்க1 செலுத்துங்கள் படகை சகோதரர்களே, கீழ்வானம் கடலோடு முட்டும் வரைக்கும் &இந்த வரிகள் என்ன அழகாய் தன்னம்பிக்கையை விதைக்கின்றன...! அருமை!

    பதிலளிநீக்கு
  6. கவிக்குயிலின் பிறந்த நாள் அன்று பொருத்தமாய் அவரது கவிதை மொழிபெயர்ப்பு......

    மிகச் சிறப்பான பகிர்வுக்கு நன்றி. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு