ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மகிழ்ச்சியும் துயரமும் - கலீல் ஜிப்ரான் (1)

உங்கள் மகிழ்ச்சி, முகமூடியைக் கழற்றிய உங்கள் வருத்தமே.
உங்கள் சிரிப்பு கிளம்பிய அதே கிணறுதான் நிரப்பப்படுகிறது அடிக்கடி உங்கள் கண்ணீராலும்.
வேறெந்த விதமாய் இருக்க முடியும்?
எத்தனை ஆழமாக அந்தத் துயரால் நீங்கள் செதுக்கப்படுகிறீர்களோ, அத்தனை அதிகமாய் மகிழ்ச்சி உங்களுள் நிறைகிறது.

உங்கள் திராட்சை இரசத்தை ஏந்தும் அதே கோப்பை, குயவனின் அடுப்பில் சுட்டெடுக்கப் படவில்லை?
உங்கள் ஆன்மாவை வருடி ஆறுதலளிக்கும் யாழ்.. அதன் மரம், கத்திகளால் குடையப்படவில்லை?

நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கும்போது, உங்கள் இதயத்தை உற்று நோக்குங்கள், உங்களுக்குத் துயரைக் கொடுத்த இதயமே இப்போது மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என அறிய வருவீர்கள்.
நீங்கள் வருத்தமாக இருக்கும்போது மீண்டும் இதயத்தைப் பாருங்கள், உங்களுக்குக் குதூகலத்தைத் தந்த ஒன்றிற்காகவே இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறீர்கள் எனும் உண்மை புரியவரும்.

உங்களில் சிலர் சொல்வீர்கள், “துயரை விட மகிழ்ச்சி உயர்ந்தது,” என, மற்ற சிலர், “இல்லை, துயரே உயர்ந்தது” என.
ஆனால் நான் உங்களுக்கு சொல்வேன், அவை பிரிக்க இயலாதவை.
சேர்ந்தே அவை வரும், ஒன்று தனியாக உங்கள் அருகே இருக்கையில் அமரும் போது, இன்னொன்று உங்கள் படுக்கை மேல் உறங்கிக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சொல்லப்போனால் ஒரு தராசாகத் தொங்குகின்றீர்கள் உங்கள் மகிழ்ச்சிக்கும் உங்கள் துயருக்கும் மத்தியில்.
காலியாக இருக்கும் போது மட்டுமே நிலையாகவும் சமனாகவும் இருக்கிறீர்கள்.
பொக்கிஷ அதிகாரி தன் தங்கத்தையும் வெள்ளியையும் அளக்க உங்களைத் தூக்கும் போது, நிகழ்ந்தே தீருகிறது உங்கள் மகிழ்ச்சியோ வருத்தமோ உயர்வதும் தாழ்வதும்.
***

மூலம்: On Joy and Sorrow from “The Prophet
By Kahlil Gibran (1883 – 1931)

லெபனானில் பிறந்தவர். குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர, அங்கே கலைப்பிரிவில் சேர்ந்து பயின்று எழுத்தாளராகவே வாழ்க்கையைத் தொடங்கினார்.  ஆங்கிலம், அரபு இரண்டு மொழிகளிலும் எழுதி வந்தார்.  அரபு நாடுகளில் இவர் எழுத்தாளராக மட்டுமின்றி ஆட்சி எதிர்ப்பாளராகவும் அறியப்பட்டார். லெபனானில் இவரையே தலைசிறந்த இலக்கியவாதியென இன்றளவிலும் கொண்டாடுகிறார்கள்.

1923-ல் ஆங்கிலத்தில் வசன கவிதையாக இவர் எழுதிய “The Prophet” புனைவு
உலகை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே விற்பனையிலும் சாதனை படைத்தது. ஷேக்ஸ்பியர், Laozi ஆகியோருக்குப் பிறகு மூன்றாம் இடத்தில் இருக்கின்றன உலகளாவிய விற்பனையில் இவரது புத்தகங்கள். கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி மட்டுமின்றி சிறந்த சிற்பியும் ஓவியருமாவார் கலீல் ஜிப்ரான்.
***


24 கருத்துகள்:

  1. கலீல் ஜிப்ரானின் கவிதை...
    அழகான மொழிபெயர்ப்பு...
    அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
  2. கலீல் ஜிப்ரான் கவிதையை அருமையான மொழிபெயர்ப்பு செய்து தந்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
    படம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  3. அருமை. நல்ல பகிர்வு. இரண்டுமுறை ஆழ்ந்து படித்தேன். துன்பம், இன்பம் இரண்டையும் சம அளவில் பார்க்கத் தெரிந்தவனே ஞானியாகிறான். இன்பமும் அவனே, துன்பமும் அவனே.

    பதிலளிநீக்கு
  4. உண்மை... இன்பமும் துன்பமும் சரி பாதி... கலீல் ஜிப்ரான் அவர்களின் தகவல்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை
    மனதின் சம நிலையை அதிகம்
    வலியுறுத்திப்பொகும் நம் இந்திய
    மனோபாவத்தை இந்தக் கவிதையில்
    உணர முடிந்தது
    அருமையான மொழி மாற்றம்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான கவிதை! அழகிய மொழிபெயர்ப்பு!

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை. அழகான மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. இரவும் பகலும்
    மகிழ்ச்சியும் துக்கமும்

    மாறி மாறி வந்தாலே வாழ்க்கை.
    வெகு அழகாக மொழிபெயர்த்துள்ளீர்கள் ராமலக்ஷ்மி.
    கலீல் கிப்ரான் வார்த்தைகளைப் புரிந்து ஆக்கம் செய்வது கடினம். மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  9. அருமை!
    மனித மனதினுள்ளே புதைந்திருக்கும் மெய்களுக்கு மொழி கொடுத்தவர் ஜிப்ரான் . அதற்கு தமிழ் கொடுத்தவர் நீங்கள் . அவரது ஒவ்வொரு கவிதையும் ஒரு நல்ல புத்தகத்திற்கு சமம்

    பதிலளிநீக்கு
  10. இன்பமும் துன்பமும் இரட்டைப்பிள்ளைகள்தாம் என்பதை எவ்வளவு அழகாக மனம் தொடும் விதத்தில் தெளிவிக்கிறார் கவிஞர். அற்புதமான கவிதைப்பகிர்வுக்கும் சிறப்பான மொழிபெயர்ப்புக்கும் நன்றியும் பாராட்டும் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  11. மொழிபெயர்ப்பில் மொழி மட்டுமின்றி உணர்வுகளும் முழுமையான் அளவு பெயர்க்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதே ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  12. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா, படத்துக்கான பாராட்டுக்கும்.

    பதிலளிநீக்கு
  13. @ஸ்ரீராம்.,

    ஆம், ஆழ்ந்து படிக்க வேண்டியவை கலீல் ஜிப்ரானின் படைப்புகள். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு