ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

உன்னை நேசிக்கிறேன் மனிதாபிமானமே.. – இ. இ. கமிங்ஸ் ஆங்கிலக் கவிதை

மனிதாபிமானமே உன்னை நேசிக்கிறேன்
ஏனெனில், வெற்றியாளனின் காலணிகளைப் பளபளப்பாக்குவதையே
அதிகம் விரும்புகிற நீ, அவனது கடிகாரச் சங்கலியில் ஊசலாடும்
ஆன்மாக்கள் குறித்துக் கவலை கொள்வதில்லை.
இதைச் சொல்ல முற்பட்டால் தர்மசங்கடம் இருவருக்குமே.

கொண்டாட்டங்கள்,  ஏனெனில்
பலமாகப் புகழப்படுகிறாய்
பெரும் அரங்கில் இசைக்கப்படும் பாடல்களில்
தேசம், தாயகம், அன்னை ஆகிய வார்த்தைகளைக் கொண்டு.

மனிதாபிமானமே உன்னை நேசிக்கிறேன்
ஏனெனில், கடினமான காலங்களில்
ஒரு குடுவை மதுவை வாங்க
உன் அறிவை அடமானம் வைக்கிறாய்.
இறுமார்ந்த நேரங்களிலோ
கர்வம் தடுக்க
வட்டிக்கடைப் பக்கம் செல்லாதிருக்கிறாய்.
ஏதேனும் உபத்திரவம் செய்தபடியே இருக்கிறாய்
குறிப்பாக உன் வீட்டில்.

மனிதாபிமானமே உன்னை நேசிக்கிறேன்
ஏனெனில், நீ நிரந்தரமாக வாழ்வின் இரகசியத்தை
உன் கால்சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு
அது அங்கிருப்பதையே மறந்து
அதன் மேலேயே அமர்ந்து கொள்கிறாய்.
அத்தோடன்றி
இயற்றிக் கொண்டேயிருக்கிறாய்
காலாகாலத்துக்கும் கவிதைகளை..
மரணத்தின் மடியில்.

மனிதாபிமானமே,
நான் உன்னை வெறுக்கிறேன்.
***
படங்கள் நன்றி: இணையம்...

அதீதம் 2013 ஆகஸ்ட் முதலாம் இதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை.

மூலம்: Humanity i love you
by E.E. Cummings

எட்வர்ட் எஸ்ட்லின் (இ.இ) கமிங்ஸ் அமெரிக்கக் கவிஞர். எழுத்தாளர், கட்டுரையாளர், ஓவியக் கலைஞர் மற்றும் நாடக ஆசிரியர் எனப் பல துறைகளிலும் பரிமளித்தவர். இவரது மொத்த எழுத்துகளிலுமாக ஏறத்தாழ 2900 கவிதைகளைப் படைத்துள்ளார். நிறுத்தக் குறியீடுகள், கேப்பிடல் எழுத்துக்கள் உபயோகிக்காமல், இலக்கணத்திலிருந்து விலகித் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர்.

காதல், இயற்கை ஆகியவற்றின் மீது பல கவிதைகள் எழுதியிருந்தாலும், பெரும்பாலான கவிதைகள் மக்களோடும் உலகோடும் ஆன தனிமனிதனின் உறவைச் சொல்வதாக அமைந்தவை. சமுதாயச் சீர்கேடுகளை அங்கதம் மிகச் சொல்லுபவை. பொருளின் பின்னும் போரின் பின்னும் செல்லும் மனிதரைச் சாடுபவை. புரட்சிக்கு நேரடியாகத் தூண்டுகின்றனவாக அன்றி தீர்ப்புகளை வாசகரிடமே விடுகின்றனவாக அமைந்தவை.

 [ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு நிறைஞர் பட்டத்துக்கு நான் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது இவரது படைப்புகளையே என்பதையும் கூடுதல் தகவலாகப் பகிர்ந்து கொள்கிறேன்.]    

18 கருத்துகள்:

  1. தமிழாக்கம் அருமை.

    முதலில் உடலில் தெம்பு இருக்கும்போது நேசித்தல்.

    மரணம் நெருங்கும்போது வெறுத்தல்.

    உண்மை தான்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கவிதை...

    எழுத்தாளர் பற்றிய விவரங்களை தந்தது கூடுதல் சிறப்பு.....

    த.ம. 2

    பதிலளிநீக்கு
  3. @வை.கோபாலகிருஷ்ணன்,

    இங்கு நேசிப்பதும் வெறுப்பதும் வேறு பொருளில் அமைந்துள்ளன. மனிதாபிமானத்தைக் கொண்டாடியபடி மனிதத்தை மறந்து செயல்படும் சமூகத்தை, போற்றுவது போல் கேலி(satire)யாகச் சாடியுள்ளார் கவிஞர். வருகைக்கு நன்றி vgk sir.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான கவிதையை தமிழாக்கம் செய்து தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு குடுவை மதுவுக்கு அடமானம் அறிவு. அருமை. நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அருமை. மனிதாபிமானத்தின் பல்வேறு அழகில்லாத கோணங்கள். பகிர்வுக்கு மிக நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. மனிதாபிமானத்தை நேசித்து பின்பு வெறுத்து, அருமையான மொழியாக்கம் ரசித்தேன்...!

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான கவிதை. நல்லதொரு மொழிபெயர்ப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. அழகான கவிதைக்கு அருமையாய் மொழியாக்கம்...
    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு