செவ்வாய், 2 ஜூலை, 2013

ஒரு நிழற்படம் - ஷிர்லி டெளல்ஸன் ஆங்கிலக் கவிதை - அதீதத்தில்..


அந்த நிழற்படம் காண்பித்தது எப்படி இருந்ததென
மாமன் மகள்கள் இருவரின் அலைகளுடனான விளையாட்டை.
ஆளுக்கொன்றாகப் பற்றிக் கொண்டிருந்தார்கள்
என் அம்மாவின் கைகளை,
அவர்களில் பெரிய சிறுமியான அவளுக்கு
இருக்கலாம் ஒரு பனிரெண்டு வயது.
மூன்று பேரும் அசையாது நின்றிருந்தார்கள்
தங்கள் நீண்ட கூந்தலின் வழியே சிரித்தபடி,
மாமாவின் நிழற்படக் கருவி முன்.
அந்த இன்முகம், என் அம்மாவினுடையது,
நான் பிறப்பதற்கு முன்பானது.
அதிக மாற்றங்களைச் சந்தித்திராதக் கடல்
நனைத்துக் கொண்டிருந்தது நிலையற்ற அவர்களது கால்களை.

சுமார் இருபது - முப்பது - வருடங்களுக்குப் பிறகு
அந்த நிழற்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பாள் அம்மா,
“பார் ரமாவையும் உமாவையும்” எனக் காட்டி, “கடற்கரைக்குச் செல்ல
எங்களுக்கு எப்படி உடை அணிவித்திருக்கிறார்கள்!”

கடற்கரை விடுமுறை அவளது கடந்த காலம்,
எனக்கு அவளது சிரிப்பு.
இரு இழப்புகளுமே உலர்ந்த நினைவுகளாக,
எளிதாய் எடுத்துக் கொள்ளக் கடினமானதாக.
அவள் இறந்து ஆகிவிட்டன இப்போது ஆண்டுகள்,
அந்தப் படத்தில் இருக்கும் சிறுமியின் வயதளவு.
இந்தச் சூழலில் எதுவும் சொல்வதற்கில்லை.
இதன் மெளனம் என்னை மெளனமாக்குகிறது.
***

மூலம்:“A Photograph”
By Shirley Toulson

அதீதம் ஜூலை இரண்டாம் இதழுக்காக  தமிழாக்கம் செய்த கவிதை.
படம் நன்றி: இணையம்

18 கருத்துகள்:

  1. இனிய நினைவுகளாய் ஆரம்பித்து, முடிவில் சொல்ல முடியாத மௌனம்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை. மொழிப்பெயர்ப்பில் இன்னும் சிரத்தை எடுக்கலாம்..

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. பழைய பல புகைப்படங்கள் எல்லோர் மனதிலும் இப்படித்தான் பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டு விடுகின்றன. அருமை.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான மொழியாக்கம்..
    சுகமான நினைவு கடைசியில் சொல்லொணா துக்கத்தை தருகிறது.

    பதிலளிநீக்கு
  6. @நிரஞ்சன் தம்பி,

    அக்கறை எடுத்து சிரத்தையுடன்தான் செய்திருக்கிறேன். ஆகட்டும்:)! இன்னும் கவனம் எடுக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நிழற்படம் சொல்லும் கதைகள் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு.சில இன்பம் அளிக்கலாம், சில துன்பம் அளிக்கலாம்.
    இதில் மகிழ்ச்சியும் துன்பமும் வருகிறது.

    பதிலளிநீக்கு