Saturday, December 31, 2011

2011-ல் முத்துச்சரம்



ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நேசம் அமைப்பு பற்றி அறிந்திட இங்கே செல்லக் கேட்டுக் கொள்கிறேன்.


சென்ற வருடம் இதே நாளில் நண்பர்கள் அழைத்ததன் பேரில் 2010-ல் முத்துச்சரம் [தீராத ஆர்வம்.. பேனாவும் காமிராவும்] எழுதினேன். ‘2011-ம் நானும்’ எனத் தொடர் பதிவுகள் பதிவுலகில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் முத்துச்சரம் பற்றிய ஒரு பார்வை, சுய அலசலாக அடுத்த ஆண்டை எதிர்நோக்க வைக்கும் என்பதால் இந்தப் பகிர்வு. எனக்கான ஒரு டைரிக் குறிப்பாகவும் கொள்கிறேன்.

வலையுலகில் முதல் மூன்று வருடங்களுமே மாதம் மூன்று எப்போதேனும் நான்கு என்ற அளவிலேயே பதிவிட்டு வந்த நான் இந்த வருடம் சராசரியாக மாதம் 10 பதிவுகள் தந்திருப்பதற்கு நண்பரின் ஊக்கம் காரணம் என்பதை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

இந்த வருடச் சிறப்பாக அமைந்திருந்தன வலைச்சர வாரமும், தமிழ்மணம் நட்சத்திர வாரமும்.

வலைச்சர வாரத்தில் நண்பர்கள் பலரின் சிறந்த பதிவுகளை அறிமுகப்படுத்த முடிந்த மகிழ்ச்சியுடன் அங்கு ஒன்றும், அறிவிப்பாக முத்துச்சரத்தில் ஒன்றுமாக வழக்கத்துக்கு மாறாக 14 பதிவுகள் இட்டது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் மீள்பதிவுகள் இன்றித் தரமுடிந்த 16 பதிவுகள். நட்சத்திர வாரத்தில் தமிழ்மணம் வெளியிடும் வாராந்திர ‘டாப் 20’ பட்டியலில் முத்துச்சரத்துக்கு முதலிடம் கிடைத்தது.

இரண்டு வாரங்களிலும் நண்பர்கள் தந்த ஊக்கம் நெகிழ்வானது.

எழுத்துக்கும் புகைப்படப் பயணத்துக்குமான அங்கீகாரங்களாக அமைந்து ஊக்கம் தந்தன கீழ்வரும் வெளியீடுகள்:

பத்திரிகைகள்:

  • தினமணி கதிரில் மூன்று சிறுகதைகள். அதிலொன்று நட்சத்திரவாரத்தில் பிடித்த ஓவியர் ராமுவின் சித்திரத்துடன்..

  • வடக்குவாசல் இலக்கிய இதழில் 3 கவிதைகள்
  • நவீன விருட்சம் 89-90வது இதழில் கவிதை

இணைய இதழ்கள்:


  • உயிரோசையில் 3 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
  • கீற்றினில் 5 கவிதைகள்; 2 புத்தக விமர்சனங்கள்
  • திண்ணையில் 4 கவிதைகள்; 4 புத்தக விமர்சனங்கள்; 1 சிறுகதை
  • நவீனவிருட்சத்தில் 11 கவிதைகள்
  • வல்லமையில் 2 புத்தக விமர்சனங்கள், 1 கவிதை
  • பண்புடனில் 1 கவிதை; 1 புகைப்படத் தொகுப்பு
  • அதீதத்தில் 3 புத்தக விமர்சனங்கள்; 1 மொழிபெயர்ப்புக் கவிதை

வெளியிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.


க்ளிக் க்ளிக்


புகைப்படங்களைப் பொறுத்தவரை ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பதிவுக்கு தமிழ்மணம் விருது 2010-ன் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது: 2009-லும் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் என்பதில் இது தொடர் வெற்றியாயிற்று.

DSLR-ன் பயன்பாடுகளைக் கற்றுத் தேறிட வேண்டுமென்பதில் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. இருப்பினும் அதில் எடுத்த படங்களுடனான பதிவுகள் பல நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. PiT பதிவுகள் போக குடியரசு மற்றும் சுதந்திர தின மலர்கண்காட்சிகள், நிலவைப் பிடித்த கதைகள்(சூப்பர் மூன், சித்திரா பெளர்ணமி, சந்திரக் கிரகணம்), அதிவேகத்தில் எடுத்த இயற்கைக் காட்சிகள், பக் பக் பறவைகள், பெங்களூர் சிவாலயம் மற்றும் சிங்கப்பூர் பயணப் படங்கள் ஆகியன அவற்றில் சில.

மே மாதம் PiT குழுமத்தில் உறுப்பினராக இணைந்தது இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டுமென்கிற பொறுப்புணர்வைத் தந்தது.

29 நவம்பர், ஃப்ளிக்கர் எக்ஸ்போளரரில் அன்றைய சிறந்த படங்களில் ஒன்றாக என் படம் இடம் பெற்றது:

ஜூலையிலிருந்து அதீதம் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாக. அதன் ‘வலையோசை’ மற்றும் ‘ஃபோட்டோ கார்னர்’ பகுதிகளுக்கு முழுப் பொறுப்பு எடுத்து நல்ல வலைப்பக்கங்களையும் சிறந்த நிழற்படங்களையும் அறிமுகப்படுத்த முடிவதில் திருப்தி கிடைக்கிறது.

அதீதம் புத்தாண்டு இதழில்..அதீதத்தில் இந்த வருடம் மாதம் ஒரு சிறப்பாசிரியரை அறிமுகம் செய்வதை நடைமுறைப்படுத்தி உள்ளோம். புத்தாண்டு இதழுக்கு யார் ஆசிரியர் என அறிய இங்கே செல்லுங்கள். வலையோசையைக் காண இங்கே செல்லலாம். ஃபோட்டோ கார்னரில் புத்தாண்டை வரவேற்று ஆடும் அழகு மயில்களை எடுத்தவர் யார் என்பதைக் காண வேண்டாமா?

டந்த வருடம் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடாக வாசிப்பை அதிகப்படுத்த வேண்டுமென எடுத்தத் தீர்மானம் ஓரளவு நிறைவேறியிருப்பதைப் புத்தக விமர்சனங்களின் எண்ணிக்கை காட்டுகிறது. சிறுகதைகள் அதிகம் எழுத வேண்டுமென எடுத்த தீர்மானம் காற்றில் பறந்தது. பல கரு மனதில் இருந்தும் வடிவம் கொடுக்காத சோம்பேறித்தனம் வரும் ஆண்டிலாவது மாறுமா தெரியவில்லை. கவிதைகள் தோன்றும் பொழுது மட்டுமே எழுதுவதால் எந்தத் தீர்மானமும் எடுத்திருக்கவில்லை.

ஆக, செயல்படுத்த முடிந்த புகைப்பட நுணுக்கங்கள் கற்பது, வாசிப்பு இதற்கே வரும் வருடத்திலும் அதிக நேரம் செலவிட வேண்டுமென்பது சுலபமான நிலைப்பாடாகத் தோன்றுகிறது:)! பதிவுகளைப் பொறுத்த வரையில் வாரம் இத்தனை எனும் திட்டமிடல் ஏதுமின்றி இயலும்போது பதியலாம் என்றிருக்கிறேன். எண்ணிக்கை இவ்வருடம் போல் அமைவது சிரமமே.

2012_ல் வேண்டுவது இயற்கையின் ஆசி, உலகில் அமைதி, அனைத்துதரப்பு மக்கள் வாழ்விலும் சுபிட்சம், ஆரோக்கியம். இயற்கையிடம் நன்றியுடன் இருப்போம். இயன்றவரை பிறருக்கு உதவுவோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***

Friday, December 30, 2011

நைட் சஃபாரி - சிங்கப்பூர் பயணம் (9) - நிறைவுப் பாகம்

# 1. நீரைக் குடித்து நெருப்பாய்க் கக்கு
காணும் கனவைக் காரியம் ஆக்கு


ருட்டத் தொடங்கும் ஏழுமணிக்கே ஆரம்பமாகிறது காட்டுக்குள் பயணம். அதற்கொரு அரை மணி முன்னதாகவே ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றத் தொடங்கி விடுகிறார்கள். காத்திருக்கும் வேளையில் மீன் தொட்டிகளுக்குள் கால்களைக் கொடுத்து ஃபிஷ் ஸ்பா செய்தபடி சிலர், சுற்றியிருக்கும் கடைகளில் நினைவுப் பொருட்கள் வாங்கியபடி சிலர், மலைப்பாம்புகளை வாங்கிக் கழுத்தில் இட்டுப் படமெடுத்தபடி சிலர் எனக் கலகலப்பாக இருக்கிறது இடம். பாம்புகளைத் தோளில் போட்டுக் கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமென்கிற நம்பிக்கை அங்கே உள்ளது. ஜூராங் பூங்கா, மக்கள் நடமாட்டமுள்ள மெர்லயன் என எல்லா இடங்களிலுமே இதற்கென்றே பாம்புகளை வைத்திருந்தது குறித்து பாகம் இரண்டில் படங்களுடன் பகிர்ந்திருந்தேன். கையிலெடுக்க நடுக்கம், ஆனால் வேண்டும் அதிர்ஷ்டம் என்போருக்கு இங்கே அட்டை வீரன் பாம்பை ஏந்திக் காத்திருக்கிறான். முகத்தை உள்ளே விட்டுப் படமெடுத்துக் கொண்டு திருப்தியாக நடையைக் கட்டுகிறார்கள் வரப்போகும் அதிர்ஷ்டத்தை எண்ணிக் கனவு கண்டபடி.

# 2. முகப்பில் வரவேற்கும் பழங்குடியினர் சிலைகள்

# 3. பக்கத்தில் (சிரித்த முகத்துடன்?)‘நல்வரவு’ எனக் கூவும் முதலைசமீபத்தில் தன் அமெரிக்கப் பயணத்தில் அச்சு அசல் இதே போன்ற ஒரு முதலைச் சிலையின் வாயினுள் தன் ஒற்றைக் காலைக் கொடுத்து இரண்டு கைகளையும் தூக்கி அலறுவது போன்ற முகபாவத்துடன் ஒரு தோழி தன் படத்தைப் பகிர்ந்திருந்தார்:)! யோசனையும் ரசனையும் இணைந்த காட்சியாக இருந்தது அது.

# 4. நிகழ்வு மேடைஇரவு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் வரை தைரியசாலிகள் பாம்புமாலை அணிந்து காட்சி கொடுத்தபடி இருந்த மேடை.

# 5. தீப்பந்தங்கள்

# 6. அந்தநாள் உணர்வுக்கு.. மின்விளக்காய் லாந்தர்

# 7. ஃபிஷ் ஸ்பா

# 8. ‘இன்னும் 2 நிமிடத்தில் ட்ராம் வந்திடுமாம்’காத்திருப்பைக் கலகலப்பாக்கிய குழந்தைகளில் இவரும் ஒருவர்.

ஜுராங் பார்க் போலவே இங்கும் மூன்று நிறுத்தங்களில் நிற்கிற ட்ராமில் பயணம். படத்தாலன்றி எழுத்தால் விலங்குகளைக் காட்டப் போகிறேன் என்பதையும் சொல்லி விடுகிறேன். இருளில் ஃப்ளாஷ் மட்டுமின்றி சிறுபுள்ளி கேமரா வெளிச்சமும் விலங்குகளை மருள வைக்குமெனப் படம் எடுக்கத் தடை விதிக்கிறார்கள். ஆயிரம் வன விலங்குகளை, எட்டு வெவ்வேறு விதமான பூகோளப் பகுதிகளாகப் பிரித்துப் பரமாரித்து வருகிறார்கள். நைட் சஃபாரியை அடுத்துதான் மிருகக்காட்சி சாலை உள்ளது. நேரக் குறைவு.., ஏதேனும் ஒன்றிற்கே செல்ல இயலுமெனில் ஜூவை உங்கள் திட்டத்திலிருந்து பேனாவால் ‘சரக்’ என அடித்து விடப் பரிந்துரைக்கிறேன். அந்த நேரத்தை நைட் சஃபாரிக்கே வழங்குங்கள். காலைநேரத்தில் மிருகங்களை பெங்களூர் பனர்கட்டா, மைசூர் ஜூ போன்ற பல இடங்களில் நான் பார்த்திருப்பது போலவே நீங்களும் எங்கேனும் பார்த்திருக்கக் கூடுமே. இங்கே இருண்ட வானம் குடை பிடிக்க, நிலவொளியை ஒத்ததான விளக்குகளின் வெளிச்சத்தில், அடர்ந்த மழைக்காட்டுக்குள், மிருகங்களை அவற்றின் இயல்பான சூழலில் காண்பது நிச்சயம் வித்தியாசமான சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும்.

அதுவும் நிறுத்தங்களில் இறங்கி வரைபட உதவியோடு நடந்து மிக அருகாமையில் கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்பக்கத்தில் மரக்கிளைகளில் அரைகுறைத் தூக்கத்திலிருந்து விழித்து நம்மைப் பார்க்கும் சிறுத்தைகள், தொட்டு விடும் தொலைவில் முள்ளம்பன்றிகள், சலசலக்கும் சிற்றோடையில் துள்ளிக் குதித்து மீன் பிடிக்கிற ஃபிஷிங் பூனைகள்.. எவற்றையெனப் பட்டியலிட? காட்டுக்குள் நிலவொளி விளக்கில் நிச்சலனமாக விரிந்து கிடந்த ஏரியை விட்டு நகர மனமில்லை. எனினும் அடுத்த நிறுத்தத்துக்கு செல்ல வேண்டுமே. பார்த்தவற்றில் மனதில் பதிந்த சிலவற்றைப் பகிர்கிறேன்.

ட்ராமில் செல்லுகையில் இருபதடி தொலைவிலிருக்கும் மேடுகளில் நரிக் கூட்டம், அச்சுறுத்தும் ஹயனாக்கள், ஓநாய்கள், கம்பீரமாக உலாத்தும் புலிகள், சொகுசாய் தூங்கும் காட்டுராஜாக்கள், விழித்துக் காவலிருக்கும் பெண்சிங்கங்கள், நமைப் பார்த்து உறுமும் கரடிகள், காட்டெருமைகள், மான்கள், நீர்யானைகள், காண்டாமிருகம் முத்தாய்ப்பாக மூச்சை அடக்கிப் பார்த்த அழகுக்காட்சியாக ட்ராமின் வலப்பக்கம் கம்பீரமாக நின்றிருந்த முப்பது வயது ஆண்யானை. இடப்பக்கம் பத்து பனிரெண்டு வயது நிரம்பிய மூன்று பெண் யானைகள். சின்னக்குட்டி ஒன்று மல்லாக்கப் படுத்துக் கிடந்தது ஸோ ஸ்வீட்டாக. ஒரு பெண் யானை கால்மாற்றி மாற்றி ஒரே ரிதத்தில் நடனமாடிக் கொண்டிருந்தது. அங்கே இந்தக் காட்சிகளை ரசிக்கவென்றே சில நிமிடங்கள் நிறுத்திப் போட்டிருந்தார்கள். திடீரென புலி, ஹயனா போன்ற மிருகங்கள் பாய்ந்து வந்து விடுமோ எனும் கிலியான தோற்றத்தைத் தந்தாலும், கூர்ந்து கவனித்ததில் மேடுகளுக்கும் ட்ராம் ஓடும் பாதைக்கும் நடுவே, எளிதில் நம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் செங்குத்தான அகழிகள் இருப்பது புரிந்தது.

மிருகங்கள் இயற்கையான சூழலில் தம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்கின்றன என்பதைப் பற்றிய காட்சியும் உண்டு. ஜூராங் பூங்காவில் சென்றது போலவே இங்கும் காட்டுக்குள் நடந்து விலங்குகளைப் பார்ப்பதிலேயே விருப்பம் அதிகமாக இருந்தது. அதனால் அந்த நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை. அப்படியும் முழுக்காட்டையும் சுற்றிவர நேரம் போதவில்லை. ஜுராங் பூங்கா, சஃபாரி எல்லா இடங்களிலுமே பல கிலோ மீட்டர் நடைக்குத் தயாராக இருந்து கொள்ள வேண்டும். நைட் சஃபாரியின் ஹைலைட்டாகக் கருதப்படும் பழங்குடியினர் நடனமும், நெருப்பை ஊதும் விளையாட்டும் பிரமிப்பைத் தரக்கூடியவை. அவற்றைத் தவறவிடவில்லை. முதல் படம் போக மேலும் சில பார்வைக்கு:

# 9. ஊதி ஊதி.. தீ.. தீ..

# 10. திகு திகு

ரு பகுதியில் பல்லாண்டுகளுக்கு முன் பயன்பாடிலிருந்த பழம்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். வெளியேறும் சமயத்தில் P&S-ல் அவசரமாக க்ளிக்கிய சிலவும் பார்வைக்கு:

# 11. பழம் பொருட்கள்

# 12. மெகா சக்கரம்

# 13. துருவேறினாலும் பொக்கிஷமாய்..

# 14. கண் அகலக் கவனித்ததுமைக்ரோஸ்கோப், பூதக்கண்ணாடி, நீண்ட குடுவையுடனான சிம்னி, டிரங்குப் பெட்டி போன்ற பலவற்றில் நான் கண் அகலக் கவனித்தது எதை என்பதைச் சொல்லவே வேண்டாம்தானே?


# 15. மழைக்காடு

மொத்தத்தில் இப்பயண அனுபவத்தில்.., மழைக்காட்டின் அடர்ந்த மரங்களும், சென்டோசா தீவின் கடல்வாழ் உயிரினங்களும், வன விலங்குகளும், வகைவகையான பறவைகளும் எல்லோருக்குமானதாகிய உலகினை மனிதன் எப்படி ஆக்ரமித்தும் அழித்தும் வருகிறான் என்பதை உணர்த்தின. ஒரு சுழற்சியாய் இயற்கையும்,பிற உயிரினங்களும் வாழ்ந்து தழைத்தாலே மனிதனின் வாழ்வும் சிறக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லின. இப்படிப் பராமரிக்கப்படும் இடங்களில் மட்டுமே அவை உயிர் பிழைத்துக் கிடப்பனவாக அவை ஆகிவிடக் கூடாதென மனம் வேண்டிக் கொண்டது.
***

(தொடர் நிறைவுறுகிறது.)

பி.கு: கூடவே பொறுமையாக வந்த அனைவருக்கும் நன்றி!



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Monday, December 26, 2011

சீனக் கோவில், ஒரு சித்திரக் கூடம் - சிங்கப்பூர் பயணம் (பாகம் 8)



லகின் எந்தப் பாகமானாலும் இறையும் கலையும் இணைந்தே இருப்பதொரு அற்புதம். சிங்கப்பூரின் முக்கியமான, மிகப் பழமை வாய்ந்த வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான தியான் ஹாக் கெங் (‘சொர்கத்தின் மகிழ்ச்சி’ என்பது பொருளாம்) சீனக்கோவிலிலும் அதைக் காண முடிந்தது. இந்தக் கோவில் தெற்குச் சீனப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் வழி வந்தது.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இக்கோவில் கடற்கரையில் இருந்ததென்றால் நம்புவது கடினமே. இப்போது சிங்கப்பூரின் வியாபார மையத்தில் வான் தொடும் கட்டிடங்கள் சூழ பொலிவுடன் திகழ்கிறது.

# 2.
1821-ல் (ஜாஸ் ஹவுஸ்) மரத்தாலான வழிபாட்டுக் கூடமாக எழும்பியது. 1830-ல் சீனர்களின் நிதியுதவியுடன் தரமான மரங்கள், கிரானைட் கற்களுடன் கைதேர்ந்த வல்லுநர்களும் சீனாவிலிருந்தே வரவழைக்கப்பட்டனர். விளைவாக உருவானது தெற்குச் சீனப் பாரம்பரியக் கட்டிடக் கலையை உலகுக்கு காட்டும் விதமாக அமைந்த அழகுக் கோவில்.

# 3. வாயிற்கூரை அகலத் திரையில்..[நுழையும் போதும் திரும்பும் போதும் இரண்டு பக்கமும் வாகனங்கள் நின்றபடியே இருந்ததால் முழுக்கோவிலைத் தனியாக எடுக்க இயலவில்லை.]

# 4. முற்றத்தில் பத்தி மாடம்
சொந்த நாட்டை விட்டு இங்கு குடியேறிவிட்ட சீனர்கள் நன்றியுடன் இங்கு பத்திகளை ஏற்றி வழிபடுகிறார்கள்.

# 5. முற்றம் தாண்டி உள்ளிருக்கும் பிரதானக் கூடத்தின் கூரை இரண்டடுக்குகளில்..
ட்ராகன், ஃபொனிக்ஸ் பறவை கூரைகளில் இடம் பெற, மரச்சட்டம், டைல்கள், நுண்ணிய வேலைப்பாடுகள், சிற்பங்கள், நிமிர்ந்த தூண்கள் என எங்கும் எதிலுமே ஆணிகள் பயன்படுத்தப் படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

கூடத்திலிருந்த மூன்று சன்னதிகளும் முதல் படத்தில்.

நடுநாயகமாக..

# 6. மீனவர்களின் காவல் தெய்வம் மாஜூ மாதா


# 7. இடப்பக்கம் கருணை பொங்கும் முகத்துடன் இன்னொரு சீனத் தெய்வம்


[பயணக்கட்டுரை எழுதும் எண்ணமும் அப்போது இருக்கவில்லை. இருந்திருப்பின் சரியான பெயர்களைக் குறித்துக் கொண்டு வந்திருக்கலாம்.]

# 8. வலப்பக்கம்
கடுகடுவென இருக்கிறார். நமது ஊர் காவல் தெய்வங்களைப் போல் தீய சக்திகளுக்கு சிம்ம சொப்பனமோ?

# 9. உத்திரத்தில் மெகா மத்தளம்


இந்தக் கோவிலுக்குச் சிறுவர்களை அழைத்து வந்து வணங்க வைத்தால் அவர்களுக்குக் கல்வி அறிவு சிறக்குமென்றொரு நம்பிக்கை இருக்கிறதாம். நாங்கள் வெளியேறும் சமயத்தில் ஆறேழு வயதான சிறுவனுக்கு அவன் தந்தை பத்திகள் ஏற்ற உதவிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

# 10. ‘இந்தப் பரிச்சையில நல்ல மார்க் வாங்கணும்..’
துதிப்பதோடு படிக்கவும் செய்யணும்!


முற்றத்தின் இடப்பக்கமிருக்கு ஒரு வாயில் வழியாக கோவிலின் இன்னொரு பகுதியைச் சென்றடையலாம். இங்கு சீனத் தெய்வம், போதித்துவக் கொள்கையினைப் பரப்பிய அரசர் மற்றும் புத்தரின் சன்னதிகள் உள்ளன.

# 11. சீனத் தெய்வம் பரிவாரங்களுடன்


# 12.போதித்வர்
இவரைப் பற்றி அங்கிருந்த குறிப்புகளை வாசிக்கையில் நம்ம ஊர் அசோக மன்னரைப் போல் எனத் தோன்றியது. இங்கும் ஒரு பெரிய பத்தி மாடம் உள்ளது.

இவர் முன்னும் பத்திகள் ஏற்ற ஒரு மாடம் உள்ளது.

# 13. அழகு மாடம்


# 14. புத்தம் சரணம்

சிட்டி டூரின் போது சென்றிருந்த ஒரு சித்திரக் கூடம் (Art Centre) இது. இதன் பெயரையும் குறித்திருக்கவில்லை. தெரிந்தவர் தெரிவிக்கலாம்.

# 15. சித்திரக் கூடம்
ஒரேயொரு கூடத்தில் மட்டுமே படமெடுக்க அனுமதி இருந்தது. இன்னும் சில அறைகள் இருந்தன. சிறியபடங்களின் விலை சில ஆயிரங்களில் எனில் பெரிய அளவிலானவை சுமார் ஐம்பது ஆயிரத்திலிந்து ஒன்றரை இலட்சம் வரையில். மாதிரிக்கு இரண்டு இங்கே பார்வைக்கு:

# 16. இரு பறவைகள்

# 17. அழகு மயில்


உள்ளே நுழையும் போதே கீழ்தளத்தில் வரவேற்ற இக்கற்களைக் கொண்டே இத்தனை நுண்ணிய வேலைப்பாடுடைய கைவினைச் சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

# 18.‘எங்கள வச்சுதான் எல்லாமே..’



சீனக் கட்டிடக் கலை பரவலாக அவர்கள் வசிக்குமிடங்களிலும் விரவி இருப்பதைக் காண முடிந்தது.

# 19. லிட்டில் இண்டியா பகுதியில் பல வீடுகளின் மாடிசன்னல்கள் வரிசையாக இந்த அமைப்பில் இருந்தன:
‘ஆதவன் எழுந்து விட்டான்’
அறிவிக்கிறது திறந்த கதவு
மூடிய கதவுகளுக்கு.
***

# 20. திறந்திருந்த வீடு. வெளிச்சம் காற்று வேண்டி அமைந்த சன்னல்கள். நடுவில் ஃப்ரென்ச் வின்டோ போன்ற அமைப்புடன்:


# 21. இரவில் ஒளியில் குளிக்கும் கதவுகள்
***


(அடுத்த பாகத்துடன் நிறைவுறும்)



தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

Wednesday, December 21, 2011

மூக்கும் முழியுமா.. கிளிகள் இத்தனை விதமா..?- ஜூராங் பறவைப் பூங்கா - சிங்கப்பூர் (பாகம் 7)

# 1. ரோசாப்பூக் கழுத்துக்காரி / Galah


Galah என ஆஸ்திரேலியாவிலும், Rose-breasted cockatoo-ஆகப் பிற பிரதேசங்களிலும் அறியப்படுகிற இவை எல்லா காக்கட்டூ கிளிகளையும் போலப் பல்லாண்டு வாழக் கூடிய ஆரோக்கியமான பறவைகள். நன்கு பராமரிக்கப்பட்டால் 50 வயது வரை வாழுமாம்.

Blue-and-yellow Macaw (Ara ararauna):

# 2. மூக்கும் முழியுமாய்..
Blue-and-Gold Macaw என்றும் அதன் தங்க வண்ணம் கொண்டு அழைக்கப்படுபவை. இதன் அலகு நல்ல கருப்பு நிறத்தில் ‘நறுக் முறுக்’ என கொட்டைகளைக் கடித்துச் சாப்பிடும் பலம் பொருந்தியவை. கருப்பு வரிகள் ஓடும் வெள்ளை முகம் ‘காச் மூச்’ எனக் கத்துகையில் சிலநேரம் பிங்க் ஆகி விடுவதுண்டாம்.

# 3. அன்பிற்கும் உண்டோ..
நீல உடல், வால்; ஆழ்நீலத் தாடை, தகதகக்கும் தங்க அடிப்பாகம், பச்சை நெற்றியென இதன் கவர்ச்சியான தோற்றத்தால் வளர்க்க ஆசைப்படுபவர் அதிகம். ஆனால் கிட்டத்தட்ட 3 அடி உயரமும் அதற்கேற்றபடி சுமார் 4 கிலோ எடையுமாய் வளர்ந்து நிற்குமாகையால் பெரிய கூண்டில் வைத்து பராமரிப்பது சிரமம் என ஒதுங்குபவரும் உண்டாம். 15 மீட்டர் அதாவது 50 அடி அகலத்துக்குக் குறைவான கூண்டில் இவற்றை வளர்க்கக் கூடாதென சட்டமே போடுகிறது World Parrot Trust. இந்தப் பூங்காவில் இடப் பிரச்சனையின்றி சுதந்திரமாகக் காட்டிலிருப்பது போலக் கொஞ்சிக் குலாவி வாழ்கின்றன.


# 4. என்ன பார்வை.. / The Red-and-green Macaw (Ara chloropterus)


இதை Scarlet Macaw (Ara macao)-வுடன் குழப்பிக் கொள்பவர் உண்டு. ஸ்கார்லட் மக்காவில் இதன் பச்சைப் பகுதி நல்ல மஞ்சளாக இருக்கும். இன்னொரு வித்தியாசம் இவற்றில் பிரத்தியேகமாகக் கண்ணைச் சுற்றி வரிவரியாகக் காணப்படும் சிகப்பு வரிகள். மிக மெல்லிய சிறகினலால் ஆனவை. படத்தில் அது நன்கு தெரிகிறது கவனிக்க. ஸ்கார்லட் மக்கா கிளிகளுக்கு இந்த வரிகள் இல்லாமல் முழு வெள்ளையாகவே இருக்கும். சட்டென வித்தியாசம் காண உதவும் ஒரு விஷயம் இது. சிகப்புப் பச்சை மக்காவின் அலகு மிக வலிமை வாய்ந்ததென்றும் 2000 psi வரை அழுத்தம் தர வல்லதென்றும் சொல்லுகிறார்கள். எத்தனை கெட்டியான கொட்டைகளையும் உடைத்துச் சாப்பிட்டு விடக் கூடியவை.

# 5. பாராமுகம்
மூன்றே காலடி உயரமுள்ள இப்பறவை (wing span) நான்கடி அகலத்துக்குச் சிறகை விரிக்கின்றன.
“சிறகை விரித்து இதயம் காட்டியும்
பாராமுகமேன் சொல்லடி கிளியே..?”

Red-fronted Macaw (Ara rubrogenys):

# 6. ‘என்ன சொல்லி விட்டேன்..?’
இரண்டடி உயரத்தில் பெரும்பாலான உடற்பகுதி பச்சையாக, சிகப்பு நெற்றி, சிகப்பிலிருந்து ஆரஞ்சாக முடியும் இறக்கைகள், கொஞ்சம் நீலம், கொஞ்சம் மஞ்சள் என பஞ்சவர்ணமெனச் சொல்லலாமோ என நினைக்க வைக்கும் கிளி.

# 7. ‘ஏன் தலை குனிந்தாயோ..?’
இதை வேகமாக அழிந்து வரும் கிளிவகையில் ஒன்றாகச் சொல்லுகிறார்கள். காட்டுப் பகுதிகளில் சுமார் 150 எனும் எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றனவாம். பிடித்து பராமரிக்கப்பட்டு வருபவை ஆரோக்கியமாகவே வாழ்கின்றனவாம்.
Moluccan or Salmon-crested Cockatoos:
# 8. ‘கணீர்’ கண்ணம்மா
அழகு, அதிபுத்திசாலித்தனம், கணீர் சத்தம் கொண்ட இக்கிளிகளை எளிதில் பழக்கப் படுத்தவும் முடிவதால் காட்சிகளுக்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

# 9. “விண்ணைத் தாண்டி வருவாயா?”
இவற்றை வளர்க்க மிகப் பெரிய கூண்டுகள் தேவைப்படும்.

# 10 எலக்டஸ்/Electus:


ஆண் கிளியும் பெண் கிளியும் முற்றிலுமாக வேறு வேறு வண்ணங்களில் தோன்றுவது இந்த வகையில் மட்டுமே.

Joseph Forshaw எழுதிய Parrots of the World-ல் முதன் முறையாக இந்த வகையினைப் பார்த்த ஐரோப்பிய பறவை ஆய்வாளர்கள் இரண்டும் வேறுவேறு வகையைச் சார்ந்தவை என்றே எண்ணியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

# 11. பெண் கிளி/ Electus (female)



# 12. ஆண் கிளி / Electus (Male)


# 13. “சுத்தீ சுத்தீ வந்தீக”/ Electus Pair



# 14. Sun Parakeet or Sun Conure (Aratinga solstitialis)
இந்தப் பொற்கிளிகள் நடுத்தர அளவில் அதாவது ஓரடி உயரத்தில் பளிச் மஞ்சளில் ஆரஞ்சு கலந்து காணப்படுகின்றன. ஆலிவ் பச்சை வால்கள் நீல வண்ணத்தில் முடிகின்றன. அதிக அடுக்குகளில் இறக்கைகள் கிடையாது.

#15. சின்னத் தம்பி பெரிய தம்பி / Juvenile Scarlet with Red-and-green Macaw

மஞ்சள் கலந்த ஸ்கார்லட் மக்காவுடன் சிகப்புப் பச்சை மக்கா.


# 16. மெட்டி ஒலி
இங்குள்ள எல்லாப் பறவைகளுக்கும் மெட்டி போலக் கால்களில் ரேடியோ காலர்கள் மாட்டி விட்டுள்ளார்கள். இவை பூங்காவினுள் பறவையின் அசைவுகளைக் கண்காணிக்க உதவுகின்றன.

# 17. நட்பாய் பழகவும் நன்கு பேசவும் கூடிய புத்திசாலிகள் Blue-and-yellow Macaw


பூவோ, விலங்கோ, பறவையோ எதுவானாலும் ஃப்ளிக்கரில் பதியும் பொழுது அந்த வகையின் சரியான பெயர்களைத் தேடி, அவசியப்பட்டால் விவரங்களுடன் பதிவது வழக்கமாகி விட்டது எங்களில் பலருக்கும். சிலவகைகளுக்குப் பெயர் இணையத்தில் தேடியும் கிடைக்காவிட்டால் படத்தைப் பதிந்து என்னபெயர் எனக் கேள்வியையும் முன் வைத்து விட்டால் பிட் க்ரூப்/பூல் நண்பர்கள் ஒருசில நிமிடங்களில் உதவிடுவார்கள். இது ஆரோக்கியமாகத் தொடர்வதில் பல விஷயங்களை அறிந்திட முடிகிறது. இங்கே நான் எடுத்த சில கிளி வகைகளை அடையாளம் காண உதவிய விஜயாலயனுக்கு நன்றி. அதேபோல் முதலில் பயணத்திட்டத்தில் இல்லாதிருந்த ஜூராங் பூங்காவின் சிறப்பை எடுத்துச் சொல்லி போக வைத்த முத்துலெட்சுமிக்கும் நன்றி:)!

# 18. விடை கொடுக்கிறது ஜூராங்


(தொடரும்)
***

பி.கு:. பயப்பட வேண்டாம், இன்னும் இரண்டு பாகத்தில் பயணத் தொடரை முடித்து விடுவேன்:)!


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:




Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin