திங்கள் தோறும் பெளர்ணமி வந்தாலும் சித்திரைமாத முழுத்திங்களை மட்டும்தானே ‘சித்ரா பெளர்ணமி’ என்றழைத்துக் கொண்டாடுகிறோம். இந்த பெளர்ணமிக்கு முன் தினம் எங்கள் குடியிருப்பில் நாங்கள் இருக்கும் கட்டிடத்திலுள்ள 15 குடும்பங்கள் போல மொட்டை மாடியில் குழுமியிருந்தோம். இரவு உணவும் அங்கேயே. பல வருடங்களுக்குப் பின்னான நிலாச் சாப்பாடு பால்ய கால நிலாச் சோறு நினைவுகளைக் கிளப்பி விட்டது. 7 மணிக்கு ஆரம்பித்து நான்கு மணி நேரம் நடந்த சந்திப்பில் பெரும்பாலான நேரம் என் கண்கள் நிலாவையும் அதைச் சுற்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்த மேகக் கூட்டங்களையும் பருகியபடியே இருந்தன. அப்போதே ஆசை துளிர்ந்து விட்டது முகிலோடு சேர்த்து நிலவைப் பிடித்து விட வேண்டுமெனெ.
சென்ற மாதம் போலன்றி சற்று முன் நேரத்தில் ஏழரை மணி போல மொட்டை மாடிக்குச் சென்று விட்டேன்.
அபூர்வ நிலாவைப் பிடித்த அனுபவத்தில் இரண்டு க்ளிக்குகளில் நிலாப் பெண் ஓரளவு திருப்திகரமாகக் கிடைத்து விட்டாள்.
1. சித்திரைப் பெண்

அடுத்து மேகங்களுடன் எடுக்க முனைந்தால் நிலவின் துல்லிய விவரங்கள் மறைந்து ‘வெள்ளித் தட்டு’தான் கிடைத்தது:)! பரவாயில்லையென ISO அதிகரித்து முயன்றதில்,
நிலவு ஒளியூட்ட.., அழகிய முகில்களின் ஊர்வலங்களைப் பதிய முடிந்தது. வல்லுநர்கள் பார்வையில் இவை எப்படிப்பட்ட படங்களோ தெரியாது. ஆனால் ஆர்வ மிகுதியில் பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன் அவற்றை இங்கு:
2. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..

3. சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம்போகும்..
சித்திரா பெளர்ணமியன்று குமரி முனையில் மாலை ஆறுமணிக்கு கிழக்கே நிலா உதிக்க அதே கணத்தில் மேற்கே மெல்ல மெல்ல சூரியன் அஸ்தமிக்கும் அற்புதக் காட்சியை காண வாருங்கள் என நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கண்ணன் J நாயர் Buzz-ல் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இக்காட்சியை எப்போதேனும் பார்த்தவர் இருந்தால் பகிர்ந்திடுங்கள் தங்கள் அனுபவத்தை.
கடலோரம் மட்டுமின்றி உறவினர்கள் நண்பர்கள் நதிக்கரைகளில் இந்நாளில் ஒன்றுகூடி உரையாடியபடி உண்பதும் பழங்காலத்தைய வழக்கம். சித்திரை மாதம் தகிக்கின்ற கோடையின் உஷ்ணத்தைத் தணித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட பழக்கமாகத் தெரிகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளால் தொலைந்து போகின்றவற்றில் ஒன்றாக இப்போது இதுவும்.
சிவபெருமான் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட சித்திர புத்திர நாயனார் எனப்படும் சித்திர குப்தன் அவதரித்த நாளும் இதுவே. மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை கண்ணிலே எண்ணெய் விட்டுப் பார்த்தபடி எழுதிக் குறிப்பார் எனும் புராணக்கதையை சின்னவயதில் அம்மாவுக்கு அவர் பாட்டி, பாட்டிக்கு அவர் அம்மா என சொல்லப்பட்டு எங்களையும் வந்தடைந்தன. விளையாட்டுக்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளின் போது [கிரிக்கெட்டில் வரும் LBW சர்ச்சை சந்தேகம் போல] ஒருவரையொருவர் ‘சித்திர புத்திர நாயனார் பார்த்துக் கொண்டே இருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டிக் கொண்டது நினைவில் உள்ளது:)!
மனசாட்சியைக் கழற்றி வைத்து விட்டு கணக்கற்ற பொய்களுடன், சுமக்கிற பாவமூட்டைகளைப் பற்றிய மனக்கிலேசம் ஏதுமின்றி நடமாடும் பெரிய மனிதர்கள் நிறைந்த இவ்வுலகம் மறந்தபோன ஒரு கடவுளாகி விட்டாரோ இன்று சித்திர புத்திர நாயனார்?
நிலாச் சோறு நினைவுகள்:சின்ன வயதில் நாங்கள் வசித்த
திண்ணை வீட்டில், மாடியின் தளத்தில் இருக்கும் திறந்தவெளியை கீழ் தட்டட்டி என்றும், மாடியறைக்கு மேல் அமைந்த தளத்தை மேல்தட்டட்டி என்றும் அழைப்போம். வடக்கு வீடு, தெற்கு வீடு இரண்டு பக்கத்திலிருந்தும் மேல் தட்டட்டிக்கு செல்ல ஏணி போன்றதான மரப்படிகள் இருக்கும். பரந்த மேல்தட்டட்டியின் ஒருபக்கம் மாடியறைகள் குளுமையாய் இருக்க வேயப்பட்ட ஓடுகளுடனான சுவரும் கூரைக்கு நடுவே அந்தப்பக்கம் செல்ல படிக்கட்டுகளும் அமைந்திருக்கும். [படம்:4]
பெளர்ணமி அன்று நிலாச் சோறு என்றால் மாலையிலேயே முடிவாகி விடும். வீட்டு வேலையாள் காசி என்பவர் இருட்டும் முன்னர் இடத்தைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு வந்து விடுவார். இருட்டத் தொடங்கியதுமே குழந்தைகள் அனைவரும் முதலில் சென்று ஆஜராகி விடுவோம். வெள்ளைத் துணியில் வெட்டிவேர் கட்டிப்போட்ட மண்பானையிலிருந்து குளிர்ந்த நீர் மூக்குக்கு மூடி கொண்ட எவர்சில்வர் ஜக் இரண்டில் நிரப்பிக் கொடுக்கப்பட, அண்ணன்மார்கள் இருவரும் அதை துளி சிந்தாமல் இலாவகமாய்க் கொண்டு சேர்ப்பார்கள். அக்கா ட்ரான்ஸிஸ்டருடன் பாய்களை, நான் தட்டுகளை, தங்கைகள் தம்ளர், கரண்டிகளை என அவரவர் பங்குக்கு எடுத்துச் செல்வோம்.
சுருட்டி உருட்டிய அம்மாவின் சேலையுடன் கீழ் படியில் நிற்கும் தம்பியை யாரேனும் கவனமாகக் கூட்டி வருவோம். [அந்த குறிப்பிட்ட சேலை இரவானால் அவனுக்கு தினம் வேண்டும். யாரும் அதை மடித்து விடக் கூடாது. துவைத்த பின்னரும் அதே வடிவில் உருட்டி சுருட்டி வைக்காவிட்டால் போச்சு!]. பாயிலே அச்சேலையை அணைத்துப் படுத்தபடி சமர்த்தாக நிலவில் தெரியும் முயலோடு பேசிக் கொண்டிருப்பான். நிலா காய்ந்தாலும் சின்னப் பிள்ளைகள் இருக்குமிடத்தில் பூச்சி செட்டு ஏதேனும் வந்திடக் கூடாதென, இரண்டு அரிக்கேன் விளக்குகளை குறைந்த திரியில் ஒளிர விட்டு ஒரு ஓரமாய் வைத்துவிட்டுப் போவார் காசி.
ஆளாளுக்கு ஏதேனும் பாட்டுப் பாடி கதை பேசிக் களித்திருப்போம். சற்று நேரம் அக்கா ட்ரான்ஸிஸ்டரில் இனிய பாட்டுகளை கசிய விடுவாள். நேருக்கு நேர் பரந்து விரிந்து நிற்கும் பிள்ளையார் கோவில் அரச மரத்திலிருந்து எண்ணற்ற பறவைகள் குறிப்பாக வெண்ணிற நாரைகள் உறங்காமல் நிலவொளியில் எமைப் பார்த்திருக்கும்.
4. கூரைப்படி

இதோ இந்தக் கூரைப் படிகளில், (பெரிய போட்டியே நடக்குமாகையால்) ஆளாளுக்கு முறைவைத்து நிலாபார்த்து சாய்ந்து படுத்திருப்போம். ஆனால் இந்தப் படம் உச்சி வெயிலில் எடுத்தது. அண்ணன்மார் மேல்படிகளில், தங்கைமார் கீழ்படிகளில் நடுவிலே நான் என வயதுப்படி:)!
அம்மாவும் பெரியம்மாவும் பெரிய சட்டியில் ‘கொழுக்க கொழுக்க’ தயிர்சாதம் பிசைந்து, மதிய சாம்பார் அவியலை சுண்டவைத்து செய்த பழங்கறியுடன் உருட்டிப் போடப் போட குளுமையாக அவை தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும்.
பின்னாளில் கல்லூரி பக்கமாய் வீடு மாறி வசித்த போது, தூத்துக்குடியிலிருந்து கோடை விடுமுறைக்கு வரும் சித்தி குழந்தைகளோடு சித்திரா பெளர்ணமி சாப்பாடு தொடர்ந்தது, அவர்களுக்கு மிகப் பிடித்த எங்கள் அம்மாவின் கைமணத்தில் தயாராகும் கூட்டாஞ்சோறு மற்றும் பொரித்த அப்பளம் கூழ் வற்றலோடு.
நானும் தங்கைகளும் பந்தயங்களை முன்னின்று நடத்த, நிலவொளியில் தவக்களைகளாகவும் முயல்களாகவும் மாறி என் தம்பியுடன் தாவிக் குதித்தோடி, சிரித்துக் களைத்துப் பசியோடு நிலாச் சோற்றை ஒருபிடிபிடித்த நினைவுகளை இப்போதும் சந்திக்கும் போதெல்லாம் பகிர்ந்திடத் தவறுவதில்லை சித்தி பிள்ளைகள்.
அது ஒரு அழகிய கனாக் காலம்! அவசர உலகில் நாம் இழந்தவை ஏராளம்.
இனிய நிலாச் சோறு நினைவுகளை விருப்பமானவர்கள் தொடருங்களேன்!
அப்படியே முகிலோடு விளையாடும் நிலவின் மேல் சில வார்த்தைகள்...:)!
*** *** ***