வியாழன், 31 மார்ச், 2011

ஆனந்த விகடனில் சுகாவின் ‘மூங்கில் மூச்சு’ - ஒரு பகிர்வு

லகமெங்கும் விரவி ஊரின் நினைவோடு வாழும் திருநெல்வேலிக்காரர்கள் அனைவரும் கடந்த 12 வாரங்களாக ஆனந்த விகடன் கைக்குக் கிடைத்ததுமே முதலில் வாசிப்பது ‘மூங்கில் மூச்சாகவே’ இருக்கக் கூடும் என்பது என் அனுமானம்.

சில அத்தியாயங்கள் அப்படியே நம்மை எண்பதுகளின் காலக் கட்டதுக்குக் கொண்டு செல்லுபவையாக இருக்க, அதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அறிந்தவர்களாகவோ அல்லது அறிந்தவர்களுடன் தொன்னூறு சதவிகிதம் ஒப்பிடும்படியாகவோ சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்.ஹை லைட்டாக அமைந்து தொடரை மேலும் நெருக்கமாக உணரச் செய்கிறது நெல்லைப் பேச்சுத் தமிழ்.

இழையோடும் நகைச்சுவையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் வாசிக்கையில் அடக்க முடியாமல் சிரிப்பார் கணவர். அவருக்கும் நெல்லைதான். அப்படி என்னதான் என அடுத்து வாசிக்கையில் அடக்க முடியாது எனக்கும் சிரிப்பை!

தொடர் நிறைவுற்றுத் தொகுப்பாக வெளிவரக் காத்திருக்கிறேன்..

தவறவிட்டவர்கள் இனித் தொடருங்கள் ஆனந்த விகடனில்..

ழுத்தாளர் சுகாவுக்கு ஒரு வலைப்பூவும் இருப்பது சமீபத்தில் நண்பர்களின் buzz மூலமாக அறிய வந்தேன். வேணுவனம் அதன் பெயர். இதுவும் நெல்லைக்காரர்களுக்காக மட்டுமின்றி எல்லோருக்குமான தகவல்:)!

திங்கள், 28 மார்ச், 2011

‘அவனும் இவனும்’-ஷைலஜாவின் சிறுகதைத் தொகுப்பு-ஒரு பார்வை : கீற்றினில்..

ழுத்தாளரின் முதல் பத்திரிகைப் பிரவேசம் எந்தப் பத்திரிகையில் எந்த வயதில் என்பது சுவாரஸ்யம். பத்து வயதில், ஆனந்த விகடனில். இன்று இவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வுக்கும் சேர்த்து பிள்ளையார் சுழியை இட்டது விகடன், இவரது நகைச்சுவை துணுக்கைப் பிரசுரித்து. பிறகு பதின்மங்களில் பள்ளியில் நடத்தப்பட்ட நாடகங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் தொடர்ந்த எழுத்து, கல்லூரி வயதில் மறுபடி விகடனில் கட்டுரையாகக் கால் பதித்து எம்பிப் புறப்பட்டு, இன்று வரையிலும், இவர் எழுத்துக்கள் வெளிவராத பத்திரிகைகளே இல்லையென சொல்லக்கூடிய வகையில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது 230-க்கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள்,கட்டுரைகள், 12 வானொலி நாடகங்கள், 2 தொலைக்காட்சி நாடகங்கள், சில கவிதைகள் என இடைவெளி என்பதே இல்லாமல் இருபத்து ஐந்து ஆண்டுகளாய்.

1996-ல் விகடனின் பவழவிழா ஆண்டில் நடந்த போட்டியில் இவரது படக்கதை நாவலுக்கு ரூ.30,000 பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

லில்லி தேவசிகாமணியின் ‘பெண் எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு’; எழுத்தாளர் உத்தமசோழன் தயாரித்த ‘மழைசார்ந்தவீடு’; மகரம் தயாரித்த ‘வானதி சிறப்பு சிறுகதைகள்’ ஆகிய மூன்று தொகுப்புகளில் பிற எழுத்தாளர்களின் கதைகளுடன் இவரது கதைகள் இடம்பெற்றிருப்பினும், இவரது தனிக் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு 2001-ல் திருமகள் நிலையம் வெளியிட்ட, 14 சிறந்த கதைகளை உள்ளடக்கிய ‘திரும்பத் திரும்ப’ என்பதாகும். பிறகு வெளிவந்த நல்ல கதைகளை இசைக்கவி ரமணன் அவர்கள் ஊக்கம் தந்து எடுத்த முயற்சியில், திரிசக்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டு கௌரவித்திருந்தது சென்ற ஆண்டில். அதுவே நம் கைகளில் தவழ்கிறது “அவனும் இவனும்” ஆக.

பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் கலைமகள் ஆசிரியரின் அணிந்துரைகளோடு, கதாசிரியரின் ‘என்னுரை’யும் பதிப்பகத்தாரின் முன்னுரையும் சிறப்பு சேர்க்கின்றன நூலுக்கு. தொகுப்பில் இருக்கும் பதினாறு சிறுகதைகளும் பத்திரிகைகளில் வெளிவந்தவை. கலைமகள், கல்கி, அமுதசுரபி, கணையாழி, தினமலர், தினமணி கதிர், இலக்கிய பீடம் என நீள்கிறது பட்டியல்.

இவரது கதைகள் மானுடத்திற்கு பெருமதிப்பு அளிப்பவையாகவும், குடும்பம் சார்ந்தவையாகவும், முதியோர்களின் மனவலியைப் பிரதிபலிப்பவையாகவும் அமைந்திருப்பதை உணர முடிகிறது. சமீபமாக இணையத்தில் பெண் எழுத்தைப் பற்றி தொடர் சங்கலியாகப் பலரும் எழுதி வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பெண் எழுத்து பேசப்படவேண்டும் பலராலும் அறியப்படவேண்டும் எனும் ஆசையிலும் அக்கறையிலும் ஷைலஜாவின் இத்தொகுப்பினைப் பாராட்டி, சிறப்பானதொரு பெண் எழுத்தை அற்புதமாய் அடையாளப்படுத்தி அங்கீகாரம் தந்திருக்கும் திரிசக்தி பதிப்பகத்தாருக்கும் நன்றி சொல்லி, தொகுப்புக்குள் செல்கின்றேன்.

வனும் இவனும்’ தலைப்புச் சிறுகதையை கலைமகளில் வெளியான போதே, சம்பவங்களை அழகாகக் கோர்த்திருந்த விதம் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறேன். நாயகன் அமெரிக்காவில். குடும்பமே இவன் ஒருவனை நம்பியிருக்க, தன் வேலை போய்விட்டதை சொல்ல இயலா தவிப்புடன் இருக்கையில் கிடைக்கிறது தந்தையின் மறைவைப் பற்றிய தகவல். மூன்றாம் நாள் ஊர் போய் சேருகிறவன் ஒருவருக்கும் உண்மையை சொல்லாமல் இருப்பதும், அண்ணனின் மகள் இவன் வாங்கிக் வ்ந்திருந்த க்ரேயான் பென்சில்களை சிலாகித்தபடி இருப்பதும், காரியம் செய்ய வந்த இளைஞன் வேறு வழியில்லாமல் அத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாக இவனிடம் வெளிநாட்டு வேலை கேட்பதும், ‘இருட்டு அறையில் எல்லா வர்ணங்களும் ஒன்றுதான்’ என அக்கணத்தில் தான் பெற்ற தெளிவையே சொல்லி அண்ணன் மகளின் சந்தேகத்தை தீர்ப்பதுமாக, ஆரம்பித்த புள்ளிக்கே கொண்டு வந்து முடித்து அழகான கோலத்தை இட்டிருக்கிறார் இக்கதையில்.

ஸ்ரீரங்கத்தை சொந்த ஊராகக் கொண்டவர்கள் ‘அரங்கபவன்’ கதையோடு அதிகமாக ஒன்றிட இயலும். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை முகத்தில் அடித்த மாதிரி நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் புரிய வைக்கிற இக்கதை இலக்கியபீடம் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றதாகும்.

தவழ்ந்து வளர்ந்த, பிறந்த வீட்டின் மீது கல்லால் மண்ணால் ஆன கட்டிடம் என்பதை மீறி தீராத ஒரு பாசம் வைத்திருப்போர் எத்தனையோ பேர் இந்த உலகினில். ‘மனிதரை நேசியுங்கள். உயிரற்ற உடமைகள் மேல் வைக்காதீர் அநாவசிய ஒட்டுதல்கள்.’ ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமென்றாலும், நம் உணர்வுகளால் உயிர் கொடுத்து விடுகிறோம் அவற்றிற்கு என்பதே உண்மை. ‘காத்திருக்கிறேன்’ கதையில் தன் மேல் கசிந்துருகி அன்பு வைத்திருக்கும் வசந்தாவுக்காக, அவளது கொலுசுச் சத்தத்தை ஒரே ஒரு முறையேனும் கேட்பதற்காக, மண்ணோடு போகும் கடைசி நிமிடம் வரை பரிதவித்துக் காத்திருப்பது.. ஆம் வீடேதான். அது பேசுவதாகவே கதையை அமைத்திருப்பது வித்தியாசம், உணர்வுப் பூர்வம்.

கல்லூரி மாணவியர் உயிரோடு பேருந்தில் கொளுத்தப்பட்ட அநியாயம், ஈவ் டீஸிங் தொல்லையால் சிலர் உயிரை விட்ட அவலம் போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டு கொந்தளித்த தன் உணர்வுகளை, படிப்பறிவில்லாத சின்னசாமியின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ‘தப்புப் பண்ணியவர்கள்’ தினமலர் போட்டிக் கதையில்.

நடுத்தர வர்க்கத்திலிருந்து அமெரிக்கா சென்று, ஒருவர் கொண்டு வரும் டாலர்கள் எப்படி சில குடும்பங்களில் அன்பை பாசத்தை மறக்க வைத்து, பகட்டுக்கும் போலித்தனத்துக்கும் வழிவகுத்து, சம்பாதிப்பவரை ஒரு பணங்காய்ச்சி மரமாகப் பார்க்கவும் வைக்கிறது என்பதைச் சொல்லுகிறது ‘பாரத சமுதாயம் வாழ்கவே’.

நம் கலாச்சாரத்தில் குடும்ப உறவுகளின் பின்னல், பிணைப்பு ஒரு காலத்தில் மற்ற நாடுகளால் வியந்து பார்க்கப்பட்டு வந்தது. இப்போது எங்கெங்கும் முளைத்து நிற்கின்றன முதியோர் இல்லங்கள். வளர்த்து ஆளாக்கியவர்களை எப்படி கைகழுவத் துடிக்கிறது இன்றைய இளைய சமுதாயம் என்பதைப் பேசுகிறது ‘மானுடம் வெல்லும்’.

தன்னலமற்ற மனிதநேயம் மரித்துப் போகவில்லை என நம்பிக்கை தருகிறது ‘புதிய உறவு’. கோவிலின் கருவறைக்குள் சென்று இறைவனை பூஜிக்க பிறப்பு முக்கியமன்று, நல்ல மனதும் ஆத்ம சுத்தியுமே போதுமெனக் கூறி உயர்ந்து நிற்கிற ‘மனம் நிறைந்தது’ கதையுடன் நிறைவடைகிறது தொகுப்பு. நிறைந்து போகிறது மனமும்.
***

விலை ரூ:70. பக்கங்கள்: 120. வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்
*** ***

25 மார்ச் 2011 கீற்று இதழில்..
, நன்றி கீற்று!

ஞாயிறு, 20 மார்ச், 2011

என்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON

1. அபூர்வ நிலா

துதான் பதினெட்டு ஆண்டுகளுக்கு பின் தெரிந்த அபூர்வ நிலா. சூப்பர்மூன் என உலகமே உற்றுப் பார்த்த உச்சி நிலா. பூமிக்கு வெகு அருகாமையில் வந்து வழக்கத்தை விட 10% பெரிய அளவிலும், 30% அதிக பிரகாசத்துடனும் ஒளிர்ந்த நிலா. இதற்கு முந்தைய சூப்பர் நிலாக்கள் 1955,1974, 1992 and 2005 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகில் வந்து ‘ஹலோ’ சொல்லி கவனம் பெற்றிருந்தன.

நேற்று இந்நிலாவைப் பதிய பரபரப்புடன் தயாரானார்கள் பதிவுலக நண்பர்களும் புகைப்பட ஆர்வலர்களும். ஏற்கனவே நான்கு மாதங்களாக நிலவைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நான் சூப்பர்நிலவைத் தவற விடுவேனா:)? எம் குடியிருப்பின் எட்டாவது தளத்தில் அமைந்த மொட்டை மாடியிலிருந்து காட்சிப் படுத்தியாயிற்று கண் கொள்ளா பிரகாசத்துடன் மிளிர்ந்த வெண்ணிலவை. முன்னிரவில் கிழக்கே உதிக்கும் போதே எடுத்தவர்களுக்கு ‘மெகா நிலா’வாகப் பதிய முடிந்திருக்கிறது. இரவு பதினொரு மணியளவில் நான் பதிந்தது மேலே.

தேய்வதும் பின்னர் வளர்வதுமாய் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தியும், கோடியில் புரளும் கோமானுக்கும், வீதியில் வாழும் இல்லாதவனுக்கும் எந்த பாகுபாடும் காட்டாமல் பாசம் பாராட்டும் அன்னையைப் போல் பாலாய் பொழியும் நிலவின் மேல்தான் எத்தனை பாடல்கள்? மனதோடு ஒன்றி விடுகின்றன நிலவுப் பாட்டுகளும்.

பதிவுலகம் வந்த புதிதில் PiT மூலமாக இணையத்தில் நிபுணர்கள் எடுக்கும் படங்கள் காணக் கிடைத்ததுடன், புகைப்படத் தளங்களும் அறிமுகமாயின. ஒரு முறை நந்துவின் நிலாவை [அவர் பொண்ணைச் சொல்லவில்லை:)] பார்க்க நேர்ந்த போது அதுபோல எடுக்க ஆசை வந்து zoom செய்தால் ஒரு வெள்ளிப் பொட்டு கிடைத்தது:)! பின்னரே அறிந்தேன் அதற்கு SLR அல்லது அதிக optical zoom வேண்டுமென. அதிக optical zoom-க்கு மாற நேர்ந்த போதும் [குறைந்த பட்சம் 8X optical zoom அவசியமாம் P&S-ல் நிலவை முயற்சிக்க-தகவல் நன்றி ஜீவ்ஸ்] வெள்ளிப் பொட்டு வெள்ளித் தட்டாகக் கிடைத்து வந்ததே தவிர நிலவுக்குள்ளே வடை சுடும் பாட்டியும், காதுகளை உசத்தி அமர்திருக்கும் மொசலும் மாட்டவே இல்லை!

2. வெள்ளித் தட்டு


வம்பர் இறுதியில் SLR வாங்கும் போதே 55-200mm lens, tripod-ம் வாங்கி விட்டேன் நிலவைப் பிடிக்கவே. வீட்டின் பால்கனிகள் மேற்கு பார்த்தவை என்பதால் அஸ்தமன நிலவே கண்ணுக்குக் கிடைத்தது, இம்மாதம் தவிர்த்து. உதய நிலா பிடிக்க மொட்டை மாடிக்குதான் செல்ல வேண்டும். அதுவும் கொஞ்சம் உயரம் வந்த பிறகே காணக் கிடைக்கும். கீழ்வானம் தெரிவதில்லை. உதய நிலாவில்தான் விவரங்கள் தெளிவாகக் கிடைக்குமென சொல்லுகிறார்கள் நிபுணர்கள். போகட்டுமெனப் பிடித்த மேற்கு நிலாக்கள் இங்கே வரிசையாக:

3. மார்கழித் திங்கள் அல்லவா..?
மதி கொஞ்சும் நாள் அல்லவா..?


4. தைத்திங்கள் திருநாளில்..


முதலிரண்டு மாதமும் எந்த mode-ல் வைத்து எடுத்தால் நன்றாக வருமெனும் வித்தை பிடிபடவில்லை. ஆனாலும் காமிரா அதுபாட்டுக்குப் பிடித்து, ஃப்ளிக்கரில் தவறாமல் போட்டு தன் கடமையை செவ்வனே ஆற்றி வந்தது:)! மாசியும் வந்தது.

5. மாசி நிலா


இருபத்தைந்து நிமிட இடைவெளியில்..
6. வெள்ளி நிலா தங்கமாய்..
இந்த தங்க நிலா, காலைத் தேநீர் தயாரித்துவிட்டு வந்த பத்தே நிமிட அவகாசத்தில் கீழ்வானைத் தொட்டு பெரிய சைஸில் ‘தகதகதக தகதகதக என ஆடவா?’ எனக் கேட்க காமிராவை கோணம் வைப்பதற்குள் ஒருசில நொடியிலேயே ‘ஓடவா?’ என ஓடி விட்டது!! மஞ்சள் நிலாவுக்கு ஒரே அவசரம்..!


ற்றுக் குட்டி முயற்சிகள்தாம்.

இருப்பினும் இம்மாத(பங்குனி) முழுநிலாவுக்கு என்னைத் தயார் செய்து கொள்ள சென்ற வாரம் வெண்ணிலா வானில் வரும் வேளையில்... விழித்திருந்து, அடுத்தடுத்த நாட்கள் எடுத்தவை கீழே. இவை நள்ளிரவிலேயே மேற்கு வான் உச்சிக்கு வந்தவை.


7. அரை நிலா ஆகாசத்திலே..



சற்றே படம் ஆட்டம் கண்டிருக்க மறுநாளே முயன்றதில்...

8. வளர் நிலா வானிலே..



இப்படியாக எடுத்த பயிற்சி நேற்று கைகொடுத்தது என்றே சொல்ல வேண்டும். ஓரளவு திருப்தியாக அமைந்து விட்டது அபூர்வ நிலா[படம் 1]. ஃப்ளிக்கர் தளத்திலும் கிடைத்தது நல்ல வரவேற்பு: "Rare" Super Moon/View from Bangalore.

இதுதான்...

அந்த நிலாவை நான்.. காமிராவில் புடிச்ச கத:)!
*****


நிலவை எடுத்த விதத்தைப் பற்றிய இதே அனுபவப் பகிர்வு விளக்கங்களுடன் PiT தளத்தில்: அபெச்சர் மோட்.. ஓர் அதிசயம் - அவ்வ்வ்... டு வாவ் ரசசியம்

சனி, 19 மார்ச், 2011

திறந்திடு ஸீஸேம்.. கதவுகள்.. படங்கள்- மார்ச் PiT போட்டி

1.‘குயிலப் புடிச்சு.. கூண்டில் அடைச்சு..
கூவச் சொல்லுகிற உலகம்..’
எதிர்காலம் நோக்கி
இன்றைய தலைமுறையை இட்டுச் செல்லும் முறை???

2.கண்ணாடிக் கதவுகளின் வழியே..
காட்சி தரும் கதவுகளும்.. தாமரைக் குளமும்..
ரூம் போட்டு யோசிக்க.. உகந்த இடம்.

3. சாளரக் கதவுகள் திறந்திருக்க
அதன்
நிழல்கள் நீரில் தத்தளிக்க


4.எத்தனை கதவுகள் எண்ணுங்கள்
கதையையும் கொஞ்சம் கேளுங்கள்

குமரகத்தின் வேம்பநாடு ஏரிக்கரையில் 1881-ல் இந்த இரண்டடுக்கு விக்டோரியன் கட்டிடம் ஆல்ஃப்ரட் ஜார்ஜ் பேக்கர் என்பவரால் பெரிய பெரிய தேக்கு மரக்கட்டைகளால் இழைத்து இழைத்துக் கட்டப்பட்டது. இப்போது தாஜ் க்ரூப்பின் சுற்றுலா விடுதியின் உணவகமாக செயல் பட்டு வருகிறது.

5.அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி..

அருகிலேயே அமைந்த பறவைகள் சரணாலயம், அழகான ஏரி இவை அடுத்தடுத்து துரையின் நான்கு தலைமுறைகளை இங்கேயே உல்லாசமாக வாழ வைத்திருந்தது. இதைக் கட்டப் பயன்படுத்தபட்ட நம் மக்களின் கடின உழைப்பு காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாக.., இன்றும்
திறந்திருக்கும் கதவுகளின் உள்ளே உறைந்திருக்கிறது மெளனமாக.

6. நூலகத்தின் சாளரங்கள்
பெங்களூரு மைய நூலகம். உள்ளிருக்கும் புத்தகங்களின் அறிவு மூச்சு கசிகிறதோ திறந்திருக்கும் ஒற்றை சன்னல் வழியே..?

7.மங்களூரில் ஒரு பிரிட்டிஷ் கட்டிடம்சிகப்பில் சுவர் இருந்தால் பச்சையில்தான் கதவுகள் இருக்கணுமோ#டவுட்டு

8. தியானக் கதவுகள்
மைசூருக்கு அருகிலிருக்கும் பைலாக்குப்பேயில் திபத்தியர் கட்டியிருக்கும் பெளத மத தங்கக் கோவிலின் பிரதான தியான மண்டபம். தன்னை உணர, ஞானம் பெற, புத்தரை அடைய, புத்தராக மாற உதவுகிறது தியானம் என வரவேற்கின்றன இதன் கதவுகள்.

9.கம்பளமும் கதவுகளும்


10.கதவிலே கையூன்றி..
கதவிலே கையூன்றி நிற்கலாம் கம்பீரமாய் காவலாளி!
கையூட்டு கேட்டுதான் தன்மானம் இழந்து
தலைகுனியக் கூடாது அரசின் தொழிலாளி!

11.கதவுகளின் இருபுறமும்..
ஆஞ்சநேயரின் திருவுருவம்!!

12. கதவைத் தட்டும் கஜேந்திரர்



நினைவோ ஒரு பறவை.. விரிக்கும் அது சிறகை..

13.அறிவுக்கண்களைத் திறந்த கதவுகள்
அ ஆ அறிவித்த ஆரம்பப் பள்ளி
***
14. ஞானக் கதவுகள்
உருவாக்கிய கல்விக் கூடம்
***
15.தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
[பள்ளி தேவாலயம் அப்படியே மாறாமல்..]
கேட்டிருக்கிறோமே ஒவ்வொரு பரீட்சைக்கும்:)!
கொடுக்கப்பட்ட வரங்களின் நினைவாகவே இப்படம்:)!
சில மாதம் முன்னர் செய்த பள்ளி விஜயம் பற்றிய பதிவு இங்கே: ‘தாயுமானவராய்’!
***

16.கதவைத் தட்டாமல் நினைவைத் தட்டி..
நானும் தங்கைகளும் ஒரே சமயத்தில் கல்லூரியில் இருந்த சமயம். அதன் அருகேயே இருந்தால் சென்று வர எளிதாக இருக்குமென்ற அம்மாவின் முடிவால் சில வருடங்கள் தங்கியிருந்த வீடு. யாரையும் தொந்திரவு செய்யாமல் அதன் வழியே சென்று நினைவுகளை மீட்ட வேளையில்.. பதிந்த படம் :)!
***



17. உச்சி வெயிலில் பச்சப் புள்ளைகள்
நெல்லையப்பர் கோவில், பூட்டிய தாமிர சபை முன்னபாக..

18. திறக்கப் பயந்த கதவுகள்

கோடை வெயில் கண்டும்..
கொட்டிடுமோ தேனீ என்றும்..
***


19. சாமியறைக் கதவுகள்




திறந்திடு ஸீஸேம்!

குரல் கொடுப்போமே நம் உள்ளக் கதவுகளைத் தட்டி..

பாராட்டாகட்டும் வாழ்த்தாகட்டும் நன்றியாகட்டும்
மனம் திறந்து.. மனம் நிறைந்து..
பாராட்டுவோம் வாழ்த்துவோம் நன்றி சொல்வோம்

குகையின் கடும்பாறைக் கதவுகளைப் போல் மனதை இறுக மூடி வைத்திருந்தால் குறுகித்தான் போகும் அது.

அன்பு

தொகுப்பாய் பல படங்களைப் பதிந்து, எதைக் கொடுக்க எதைக் கொடுக்க என நானும் குழப்பமாகி, உங்களையும் கேள்வி கேட்டு சிரமப் படுத்தி.., இதெல்லாம் செய்யாம ஒண்ணே ஒண்ணு, போய் வாம்மா கண்ணே கண்ணுன்னு சென்றமாத போட்டிக்கு அனுப்பி வைத்த இப்படம் தளிர் நடை போட்டு சென்று வீர நடையுடன் வெளிவந்திருக்கிறது இறுதிச் சுற்றில் மூன்றாம் இடத்தைப் பெற்று:)! நன்றி PiT!

அதீதம்
எனது இப்படத்தை (மார்ச் 1-15) அதீதம் இணைய இதழ்,' புகைப்படங்கள்' பிரிவில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. நன்றி அதீதம்!

இரண்டையும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

கேட்க மறந்து விட்டேனே!
போட்டிக்கு எதைக் கொடுக்க:)?
அல்லது
எந்தப் படம் உங்கள் ரசனைக் கதவைத் திறந்தது:)?
*** *** ***

புதன், 16 மார்ச், 2011

தொடர்பு எல்லைக்கு அப்பால்..


முகந்தழுவிச் சென்ற கடற்காற்றின்
சில்லிப்பை அனுபவித்திருக்கையில்,
சோளத்தைக் காட்டிச்
சிணுங்கியது மழலை

அதன் விரல்பிடித்து நடந்து
மினுங்கும் தணலில்
மஞ்சள்முத்துக்கள்
வேகக் காத்திருந்து
வாங்கித் திரும்பும் வழியில்

சந்தித்தான் எதிர்பாராமல்
ஆருயிர் நண்பனை
ஆண்டுகள் பலகழிந்து.

பரவசமாய் பிணைந்து கொண்ட
கரங்கள் நான்கின் கதகதப்புக்குள்
களிப்பாய் துள்ளியது நட்பு

கிடைத்தசில நிமிடத்துள்
நீந்தித் திளைத்தார்கள்
மலரும் நினைவுகளில்

"அந்த நாட்கள் எத்தனை சுகமானது"
அவன் சொல்ல
"வாய்க்குமா இனி அது போல"
இவன் மருக

சுட்ட சோளத்தைச்
சுவைத்துக் கொண்டிருந்த
இவன் குழந்தையின் கன்னந்தட்டி
பெயர் கேட்கத் தோன்றாத அவனும்

பச்சைநிற பலூனைத் தக்கவைக்கக்
காற்றோடு போராடிக் கொண்டிருந்த
அவன் குழந்தையின் கேசங்கலைத்து
'என்ன படிக்கறாய்?'
தெரிந்திட ஆர்வம் காட்டாத இவனும்

மின்னஞ்சல் முகவரி
அலைபேசி எண் பரிமாறி
"தொடர்பில் இருப்போம்" உறுதிகூறி
விடைபெற்று நகர்ந்தார்கள்
காலடியில் மிதிபட்டுக்
கலைந்து கொண்டிருந்த
அழகிய சிறு மணல் வீடுகள்
பற்றியக் கவனமின்றி..
சந்தித்த அவ்வினிய தருணத்தின்
அருமை பற்றிய பிரஞ்ஞையுமின்றி.

வீசிக் கொண்டிருந்தது சில்லிப்பாய்
தொடர்ந்து கடற்காற்று.
***

படம்: இணையத்திலிருந்து...

27 டிசம்பர் 2010 திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. நன்றி திண்ணை!

ஞாயிறு, 13 மார்ச், 2011

ஜனாதிபதி அப்துல்கலாமும்.. அன்பான ஏழைத்தாயும்..


  • இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்” சொன்ன ஏழைத் தாயைக் கண்டு கண்கலங்கியவர்.
யார்?

  • இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் இந்தியத் திருநாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள அவர்களை நினைவு கூர்ந்தவர்.
யார்?

  • ‘வாழும் கடவுள்’ எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை, உலகெங்கும் அமைதி நிலவ விரும்பி மகனுக்குப் பெயர் வைத்தவர்.
யார்?

  • திரு. சீனா அவர்கள், முத்துலெட்சுமி ஆகியோருடன்..

தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா, ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் , சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன், மோகன் குமார்

இவர்களுக்கும் நன்றி!


படம் நன்றி:‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ பதிவு.


பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



நிறைவுப் பதிவில் நிற்க வருகிறார்கள் அனுபவத்திலும் வயதிலும் நம்மில் மூத்த இப்பதிவர்கள்:

ஜெய்வாபாய் ஈசுவரன்

இந்திய அளவில் 7300 மாணவிகள் படிக்கும் மாபெரும் பள்ளியாக, பல்வேறு சாதனைகளைப் படைத்து, பெண்கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வரும் “திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்” விஸ்வரூப வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு அசாத்தியமானது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வலராக இப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்ததினத்தை ‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ எனப் பதிவிட்டவரின் இடுகையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு சம்பவம் மிகவும் நெகிழ்வுக்குரியது: “இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்

இந்த ஏழைப் பெண்ணின் தாய்மைக்கு எது ஈடாகும்? முழு விவரம் அறிய பதிவுக்கே செல்லுங்கள்.


அமைதி அப்பா
நாட்டிலும் உலகிலும் அமைதியே நிலவ வேண்டும் என விரும்பிப் பெயர் வைத்த இவரது மகன் ‘அமைதி விரும்பி’ சட்டம் படித்து வருகிறார். சமூக அக்கறையுடனான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

வாழும் கடவுள்...! எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை:“செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!, அக்கறையுடன் வழங்குகிறார் ஆலோசனைகளை.
‘வெடிவால்’ சகாதேவன்
நேரிலோ இணையத்திலோ பார்த்தது, ரசித்தது, மற்றவருக்குப் பயனாகும் தகவல்கள் என அனைத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருபவர். வரலாற்றை நினைவு கூர்ந்து இடும் பதிவுகளும் சிறப்பானவை ஹே ராம்;

பொது வாழ்க்கை அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம்’:“அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது;

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?: “ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்...அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.

இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் நாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அணில் சுமந்த கற்களாய்..
வரவர் வாசிப்பில், நினைவில் நின்ற பதிவுகளைப் பகிர்வதன் மூலமாக சிறந்த இடுகைகள் ஆவணப்படுத்தப் படுகிற ஒரு தளமாகவும், அதைப் படைத்தவர்களை அறியாதவர் அறிந்திட உதவும் ஒரு பாலமாகவும் திகழ்ந்து வருகிறது வலைச்சரம். தினம் தினம் நீளும் அப்பாலத்துக்கு, இராமருக்கு உதவிய அணிலைப் போல ஏழுகற்களை எடுத்து வைத்துள்ளேன்.

என் வலைவாசிப்பில் ரசித்தவரின் பட்டியலில் வெகுசிலரை மட்டுமே சொல்ல இயன்றதற்கு நேரமின்மை மட்டுமே காரணம். விரிவாகச் செய்ய நினைத்ததில், ஒருநாளைக்கு பத்து பதினைந்து பதிவர்கள் எனத் திட்டமிட்டிருந்ததை செயல்படுத்த இயலவில்லை.

என் வாசிப்பு வட்டதுள் வந்த புதியவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்றாலும்.. மேலும் பலரையும், பிரமிக்க வைத்த இடுகைகளைத் தந்த பதிவர்கள் எத்தனையோ பேரினையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பினை சீனா சாரிடம் கேட்டுப் பெற்று இங்கே பகிர்ந்திட முயன்றிடுவேன்.

பல நல்ல இடுகைகளை உங்கள் முன் வைத்த மன நிறைவுடனும், சில பதிவர்களை இதன் மூலமாக ‘அறிய வந்திருப்பதாகவும் இனித் தொடருவதாகவும்’ வந்திருக்கும் பின்னூட்டங்களால் கிடைத்த திருப்தியுடனும், வாய்ப்பளித்த சீனா சாருக்கும், வரவேற்றுப் பதிவிட்ட முத்துலெட்சுமிக்கும், என்னை இதுகாலமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய கீழ்வரும் அத்தனை நண்பர்களுக்கும்
தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா,ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் ,சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன் , மோகன் குமார்
[அறிமுகமான பதிவுகளின் இணைப்புடனே தொகுத்திருப்பதில்,
எவர் பெயரேனும் விடுபட்டிருப்பின் அது என் கவனக்குறைவே, மன்னியுங்கள்.]

ஒருவாரமும் பதிவுகளைப் படித்துக் கருத்து கூறியவருக்கும்

என் மனமார்ந்த நன்றி!
***

சனி, 12 மார்ச், 2011

‘நன்றே செய் இன்றே செய்’ - இன்றைய வலைச்சரத்தில்..

  • ‘வறண்ட பிரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கேத் திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியில் 68 வயதான ஸ்ரீதரன், துணை நிற்கும் கற்பகம், ஸ்ரீராம்.’ பாராட்டுகிறார் மண்ணை நேசிக்கும் இம்மாந்தரை.
  • “பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது” கேட்கிறார்.
  • “ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர், அசத்தல்.” நெகிழ்கிறார்.
யார்?

  • இயற்கையின் மீதான அளவற்ற நேசத்தால், உலக நலன் மேல் கொண்ட உள்ளார்ந்த அக்கறையினால், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் பாராட்டுக்குரிய மனிதர்.
  • வெட்டப்பட இருந்த ஐம்பத்து ஐந்து வயது மரத்தை, அரசிடம் முறையிட்டுக் காப்பாற்றிய சிறுவன் அருண்குமாரையும் நண்பர்களையும் கொண்டாடுகிறார். அவனைப் பாராட்ட நம்மையும் அழைக்கிறார்.
யார்?

  • “ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்...”
  • “கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.”
  • எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம் வாழ்க்கை முழுவதையும் மண்ணுக்கு அர்ப்பணித்து, தம் பிள்ளைகளாய் நேசித்து, மரங்களை வளர்ந்த மாமனிதர்களை.. கோடியில் இருவராய்க் கொண்டாடி விழா எடுத்தவர்.
யார்?
  • வீட்டருகே இருக்கும் பூங்காவில் வேப்பங்கன்றை நட்டு, அனுதினம் மாலை மறக்காமல் நீர் வார்த்து, நாளைய உலகுக்காக மரம் வளர்த்து வரும் இளங்கன்று, நம்பிக்கை நாற்று.
யார்?


பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



Surveysan-அழிப்பவன் அல்ல அளப்பவன்!
இவரைப் பற்றிய அறிமுகம்‘பதிவுலகில் நானு-Q & A’ இதிலேயே கிடைத்து விடும், இவரே தந்திருக்கும் சுட்டிகளைப் பிடித்துச் சென்றால்! இப்போதுதான் கவனிக்கிறேன், அதில் தன் எழுத்தை “இதுவரைக்கும், யாரும், ஆகாககாகான்னு பாராட்டியதா ஞாபகம் இல்லை” என சொல்லியிருப்பதை:)!


இரண்டு வருடங்களுக்கு முன்னரே என் பதிவொன்றில், “தன் எழுத்துக்களால் ஒரு உத்வேகத்தைத் தந்தவர் சர்வேசன். எனது சமூகக் கவிதைகள் பலவற்றிற்கான பொறியினை இவரது பதிவுகளிலிருந்து பெற்றேன். சர்வேசன்-ஆக்கியவன்[அப்போது ‘ஆக்கியவன்’தான்] அல்ல அளப்பவன் என்கிற இவரது வலைப்பூ "surveys about anything and everything in Tamil for the Tamil" என்றே சொல்கிறது. சமூகத்தைப் பற்றி சகலதையும் அலசும் இவரது எழுத்துக்களில் காணப்படும் வீச்சும், பேச்சு வழக்கிலே எழுதும் ஸ்டைலும் பிடிக்கிறது எனக்கு. முத்துச்சரத்தின் ப்ரொஃபைல் படம் இவர் எடுத்ததே. என் வலைப்பூவுக்குப் பொருத்தமாய் இருக்குமே என்றதுமே தந்து விட்டார். எதற்கு நன்றி சொன்னாலும் ‘தன்யனானேன்’ என்றிடுவார் தன்னடக்கத்துடன்.”

இப்படிக் குறிப்பிட்டிருந்தது ‘ஆகாககாகா’ வகையிலே அடங்காத வருத்தத்துடன் வலைச்சர வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன், பல நல்ல விஷயங்களைத் தன் முகம் காட்டாமல் பகிர்ந்தும், செய்தும் வருபவரை முன்னிலைப் படுத்தும் ஆவலில்.

எதைச்சொல்ல எதைவிட எனும் அளவுக்கு இரண்டரை ஆண்டுகால வாசிப்பில் சமூக அக்கறையுடனான பதிவுகள் பல இருப்பினும் ஒருசிலவற்றை மட்டும் இங்கே முன் வைக்கிறேன்.

சென்னை விசிட் - உதவும் கரங்கள்:“மலர்வனம்னு ஒரு வயதானவர்களுக்கான முகாமும், அதே காம்ப்ளெக்ஸில், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு மையமும், சற்று தள்ளி இன்னொரு கட்டிடத்தில், குழந்தைகள், சிறுவர்கள் மையமும், உதவும் கரங்களே நடத்தும் பள்ளியும் கண்டு வந்தோம்.

தொண்டைக் குழிக்குள்ள ஒரு பெரிய உருண்டை வந்து அடச்சுக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு. குறிப்பா, அந்த மனநிலை சரியில்லா ஆட்களையும், அவர்களைப் பராமரிக்கும் வாலண்ட்டியர்ஸும் பாத்தா ஒரு நிமிஷம், வாழ்க்கையே சூன்யம் ஆன மாதிரி ஆயிடுது.

சும்மா சொல்லக்கூடாது,
ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர்,அசத்தல்.

ஒரு போட்டியை அறிவிக்கும் போது சர்வேசன், வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை போக அவர்களது பெயரிலேயே உதவும் கரங்களுக்கு ஒரு தொகையை அனுப்ப முன்வந்தது பாராட்டுக்குரிய மகிழ்வான விஷயமென்றால், வெற்றி பெற்றவர் தமக்கான தொகையையும் சேர்த்து உதவும் கரங்களுக்கு வழங்கிட முன் வந்தது மேலும் நெகிழ்வு. நல்ல உணர்வுகளை எழுத்திலும் செயலிலும் பரப்பும் அவருக்கு வைப்போம் ஒரு சல்யூட்.

லஞ்சப் பெருச்சாளிகள்... தொடரும் எரிச்சல் :பெட்டிஷனை கூட பூர்த்தி செய்ய முடியாத,பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது?

படிச்ச நாமதான், சுலபவழி தரும் சுகத்தில், திக்கு முக்காடிப் போகி, ஓரடி முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் நாட்டை, பத்தடி ரிவர்ஸில் இழுத்து துரு பிடிக்க வைக்கிறோம்.

கற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி?
68 வயதான ஸ்ரீதரன்... 17 ஏக்கர் வறண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.”

“மும்பையைச் சேர்ந்த கற்பகமும், ஸ்ரீராமும், இவருக்கு உறுதுணையாக இருந்து, PointReturnல் காடு வளர்க்க, முழுநேரமும் தங்களை இணைத்துக் கொள்கிறார்களாம். இருவரும் முப்பதுகளில் இருப்பவர்கள்.
ஐஐடி யில் முதுகலைப் பட்டம் பெற்று, கன்னாபின்னா என்று சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்.

நன்றே செய் இன்றே செய்
:“வெற்றிகரமாய் போயிக்கிட்டு இருக்காங்க; இயற்கை விவசாயம்; எண்ணை உற்பத்தி; ராகி பயிரிட்டு; குளம் வெட்டி அல்லி வளர்த்து, வீடு கட்டி,மனிதக் கழிவையும் புனிதமாக்கி, இவங்க பயணம், சூப்பரா போயிக்கிட்டே இருக்கு;

மேற்கண்ட பயணத்தின் ஒவ்வொருபடியைப் பற்றிய படங்களுடன் விரிவான விவரங்களுக்கான சுட்டிகளைத் தேடி வழங்கியிருக்கிறார் சர்வேசன்.

இந்த மாதிரி இயக்கங்களுக்கு சொற்ப நேரத்தை செலவிடுவது, திருப்திகரமான பொழுது போக்காய் அமைவதோடு மட்டும் அல்லாமல், சொந்த வாழ்க்கையில், நம்மை அறியாமல் ஒரு பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யும்...சென்னை/செங்கல்பட்டு வாசிகள், DV ஸ்ரீதரனை தொடர்புகொண்டு, தன்னார்வலராக விருப்பம் தெரிவித்தால், இருகரம் நீட்டி ஆரத் தழுவி வரவேற்பார்.” எனத் தொடர்பு விவரங்களைத் தந்துள்ளார்.

அத்துடன் நின்றிடாமல், மண்ணை நேசிக்கும் அம்மாந்தரிடம் பதிமூன்று கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றுப் பதிந்துள்ளார் இங்கே: கற்பகம், ஸ்ரீராம், DV ஸ்ரீதரனின் பதில்கள்.
***

இவரது கலகலப்பான எழுத்துக்கு, [அறிமுகப் பதிவில் இருப்பினும் நீங்கள் தவற விடக் கூடாதென], மகளிர் தின வாரத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பெண்களை நம்பவே நம்பாதே, ‘அநியாயத்துக்கும் அருமையா எழுதி’யிருப்பதாக அங்கேயே பாராட்டியிருப்பதாலும்:)!
‘மண், மரம், மழை, மனிதன்.’திரு வின்சென்ட்
இயற்கையின் மீதான அளவற்ற நேசத்தால், உலக நலன் மேல் கொண்ட உள்ளார்ந்த அக்கறையினால், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் பாராட்டுக்குரிய மாமனிதர்,நமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அந்நிய நாட்டுத் தாவரங்கள்.

சென்னை அண்ணாநகர் ‘நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம்’ மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற பலவற்றிற்கும் அறிவிக்கும் ஒருநாள் பயிற்சிகளைப் பற்றியதான உடனுக்குடன் அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும். “பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது....உங்களது வாழ்த்துக்களை திரு. அருண்குமாருக்கு தெரிவிக்கவிக்க விரும்பினால் அவரது தந்தையின் அலைபேசி எண் தருகிறேன். வாழ்த்தி விடுங்கள். ஊக்கமும் உற்சாகமும் அக்குழந்தைகளை மேலும் பல அரிய செயல்கள் செய்ய உதவும். ப. தண்டபாணி : 94420-15060” என்று கேட்டுக் கொள்வதுடன், அவர்களை நேரில் சென்று பார்த்துப் பாராட்டி மரத்தின் அருகே நின்று புகைப்படங்களும் எடுத்து வெளியிட்டுள்ளார் இங்கே.

பெங்களூரில் மெட்ரோவுக்காக பலநூறு வயதான ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதை வேதனையுடன், கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பல இலட்சம் மக்களில் நானும்தான் அடக்கம்:(! இந்த வயதில் நின்று சாதித்த அந்தச் சிறுவனுக்கு நம் வாழ்த்துக்கள்!

தண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு, கடந்த வருடம் தண்ணீர் தினத்துக்காக இவர் விடுத்த அழைப்பினை ஏற்று எழுதப்பட்டவை யாவும். அனைத்து சுட்டிகளிலும் சென்று படித்துப் பயன் பெறுங்கள்.

இந்தவருட "உலகநீர்" நாள் சின்னத்தை
அனைவரும் வலைப்பூவில் இணைத்திடக் கேட்டுக் கொண்டுள்ளார். நான் செய்து விட்டேன். அப்போ நீங்க?


‘கசியும் மெளனம்’ ஈரோடு கதிர்
56 வயதான திரு. நாகராஜன், 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.

74 வயதைத் தாண்டிக் கொண்டிருந்த திரு. அய்யாச்சாமி அவர்கள் ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்... சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள்

கோடியில் இருவராய்
இவர்களை அறிமுகப்படுத்திய கதிர் , “ இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை....அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.” எனும் உத்வேகத்துடன் செயல்பட்டு எடுத்தார் மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா!

கடந்த வாரம் திரு அய்யாச்சாமி, 3000 பிள்ளைகளின் தந்தை, இயற்கையின் அன்னையின் பிரியத்துக்குரிய மைந்தர் காலமானார். “அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில் அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஆம், அந்த சுவாச மூச்சு தெற்கிருந்தே வடக்கே, பின் மேற்கே கிழக்கே என உலகெங்கும் பயணப்பட்டு எங்கெங்கும் இயற்கையைக் காக்கும் சக்தியாய், இயற்கையைப் போற்றும் சந்ததிகளுக்கு உறுதுணையாய் இருப்பது நிச்சயம். அதற்கான சான்றாக....இதோ இந்தச் சிறுவன்.
‘ட்விங்கிள் ட்விங்கிள்’(லிட்டில் ஸ்டார்)சபரி
வீட்டருகே இருக்கும் பூங்காவில் வேப்பங்கன்றை நட்டு, அனுதினம் மாலை பள்ளி விட்டு வந்ததும், தமக்கையின் உதவியுடன் மறக்காமல் நீர் வார்த்து, நாளைய உலகுக்காக மரம் வளர்த்து வரும் இளம் நட்சத்திரம் சபரியை வாழ்த்துவோம், One Boy One Tree!

மண்ணை மரங்களை மனிதர்களை நேசிப்போம்.
இயற்கையைப் போற்றுவோம்.
***

வெள்ளி, 11 மார்ச், 2011

‘எழுதப் பிடிக்குமென்றால்..’-இன்றைய வலைச்சரத்தில்..

  • இன்றைய ஆனந்த விகடனில், சொல்வனத்தின் நட்சத்திரம். வாழ்த்துக்கள் இவருக்கல்ல, இவரது வயல் வெளியில் அறுவடைக்குக் காத்திருக்கின்ற செழிப்பான கவிக் கதிர்களை தொகுப்பாக்க எந்த பதிப்பகம் முந்திக் கொள்ளப் போகிறதோ, அவர்களுக்கு!
  • எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டேயிருங்கள்’ என எழுதிக் கொண்டே இருப்பவரின் எழுத்திலிருந்து... “உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை.
  • வாங்க முன்னேறி பார்க்கலாம்’ கூப்பிடுகிறார் சட்ட வல்லுநர்.
  • ஐந்தறிவு ஜீவனுக்கும் உண்டு, மனசென்ற ஒன்று. காண்பிக்கிறார் நமக்கு.
  • தேசம் விட்டு தேசம் சென்றாலும் 'மனசு' மொத்தத்தையும் பிறந்த வளர்ந்த கிராமத்திலேயே விட்டு வைத்திருப்பவர்.
  • கருப்பையின் உள்ளிருக்கும் பெண்சிசுவின் கதறலை உலகுக்குக் கேட்கச் செய்தவர்.

யார் யார் இவர்கள்?
அறிய வாருங்கள்!
பேசும் எழுத்துக்கள் - வலைச்சரம் வெள்ளி
***




பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



உழவனின் “நெற்குவியல்”
உழவுக் குடும்பத்தில் பிறந்து, வயல்வெளியில் சுற்றித் திரிந்து, மாடுகன்றுகளோடும் தலையசைக்கும் நாற்றுகளோடும் பழகிச் சிலிர்த்து, கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசமெனும் உரத்தில் மரமாகி, காலத்தின் கட்டாயத்தில் பட்டணத்தில் நடப்பட்டவர். 'உழந்தும் உழவே தலை’ என வாழ முடியாத ஏக்கத்தை ஓரளவேனும் ஈடு செய்ய, குற்ற உணர்வை சற்றேனும் போக்கிக் கொள்ள ‘உழவன்’ என்ற பெயரில் எழுதி வந்தாலும் ‘உழத் தவறியவன்’ என நேர்மையாகத் தனை விளித்துக் கொள்கிறார் வலைப்பூவின் முகப்பினிலே. கிராமத்து நினைவுகளாய் எங்க ஊரு பொங்கலு.

வளர்ந்து வரும் இளங்கவிஞர். இணைய இதழ்களிலும், ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகளிலும் இவர் கவிதைகள் வெளியாகி வருகின்றன. எளிமையான வார்த்தைகளில் அழுத்தமான கவிதைகள் என்பது இவரது சிறப்பு. மனதில் நின்ற பல கவிதைகளில் ஒன்றிலிருந்து..
“..பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.


ஆவல் அதிகரிக்கிறதா? மீதி வரிகளுக்கு, சாரை சாரையாய்..

மகள் அகமதி இவருக்குத் தந்த கவிதைகள் யாவுமே ரசனைக்குரிய நிறைமதியாய்..,மன்னிக்கவும் [இன்றைய ஆனந்த விகடனில்..].

உரையாடல் போட்டிக்காக இவர் எழுதிய (சின்னஞ்)சிறுகதை ‘பசி’ பலரால் பேசப்பட்ட ஒன்று.

அனுபவக் கட்டுரைகள், அரசியல் அலசல்களோடு நையாண்டியும் நன்றாக வரும்:‘ஆ...ராசா வர்றான்… செம்ப எடுத்து உள்ள வை

சுற்றுப்புற சூழலில் இவர் காட்டிய அக்கறை புதிய தலைமுறையில் சிறப்புக் கவனத்துடன் பிரசுரமானது.

உழவனின் வயல் வெளியில் அறுவடைக்குக் காத்திருக்கின்ற செழிப்பான கவிக் கதிர்களை தொகுப்பாக்க எந்த பதிப்பகம் முந்திக் கொள்ளப் போகிறதோ, அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!


நீலகண்டனின் எழுத்துக்கள்
பத்திரிகை, இணைய இதழ்களில் எழுதுபவர் என்றாலும், மிகச் சமீபமாக ஒருமாத காலத்துக்குள்ளாகதான் இவர் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம். பத்திரிகையில் வந்தஅருமையான ஒரு கவிதையால் பெயர் கவனத்தில் நிற்க, மறுநாள் இணையத்தில் தற்செயலாக அதே பெயர் தென்பட, நுழைந்தேன் இவர் தளத்துள். பேசட்டும் அவர் எழுத்தே.‘அப்பாவின் குடை’யிலிருந்து சில வரிகள்:
சரி செய்ய முடியுமா என்று
குடைக்காரனிடம் கேட்டேன்.
சரி செய்து விடலாம்
என்றவன் சரி செய்து
கொண்டே அப்பா
எப்படி இருக்கிறார் என்றான்.
அப்பாவைக் காப்பாற்ற
முடியவில்லை என்றேன்
வருத்தத்துடன்.
அப்படியா....அதான்
அப்பாவைக் காணவில்லை...
என்றவன் சரி செய்த
குடையை விரித்தான்.
விரித்த கருங்குடைக்குள்
அப்பாவிற்கே உரிய
சிரிப்பு மழை
இடி முழக்கமாய்.....


அப்பாவின் குரல் மட்டுமா, விரியும் இவரது ஒவ்வொரு கவிக்குடைக்குள்ளும் இடிமுழக்கங்கள்தாம். மனிதர்களைப் பற்றியதான அவதானிப்பு இந்தக் கவிதையில் வியக்க வைக்கிறது, சுயநலத்தின் சுற்றுப்பாதை. இவரது ‘எழுத்தின் சாரம்இப்பதிவின் கடைசிப் பத்திக்கும் சாரம்.

மத நல்லிணக்கம், மனித நேயம், மரங்களின் மேலான பாசம் எல்லாம் பேசும் சிறுகதை ‘இந்த வேம்புகள் கசப்பதில்லை’:"உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்."
‘வீடு திரும்பல்’ மோகன் குமார்
சட்ட வல்லுநர். அன்றாட நடப்புகளை வாரம் ஒருமுறை வானவில்லாகத் தொகுத்து வழங்குகிறார். வாசிப்பில் அறிந்தவற்றையும் தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்தவற்றையும் மற்றவரும் பயன்பெற ‘வாங்க முன்னேறிப் பார்க்கலாம்’ [அனைத்துப் பாகங்களும் இந்த இழையில்] எனத் தொடராக எழுதி வந்துள்ளார். தொடர்ந்து எடுத்துச் செல்வார் என எதிர்பார்ப்போம்.

ஒரு குழுவாக செயல்பட்டு செய்து வரும் சமூக சேவைகளை சமீபத்தில்தான் வலைப்பூவில் பகிர்ந்து கொண்டுள்ளார்: அரசுப் பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி: “அருள் பேசி முடித்து விட்டு சென்றதும் நான் உடனே கை குடுத்து பாராட்ட போக, நான் வருவது தெரியாமல் அவன் போய் கொண்டே இருந்தான். அவன் பின்னால் நான் சென்று கொண்டே இருக்க, அவன் பாட்டுக்கு நடக்க, பள்ளியே " ஓஒ ..அருள் " என்று அலறியது. அருள் முதுகில் தட்டி கூப்பிட்டு கட்டி பிடித்து நான் பாராட்ட மாணவர்களுக்கு அவர்களை பாராட்டியது போல் மகிழ்ச்சி ஆரவாரம்..” இது போன்ற பகிர்வுகள் மற்றவருக்குத் தூண்டுதலாக அமையும் என்பது ஒருபுறமிருக்க, அவரது முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கவும், தேவையில் இருப்பவருக்கு உதவிக் கரம் நீட்டவும் பலரும் முன் வந்திருப்பது நெகிழ்வுக்குரியது.

தொலைக்காட்சி கலந்துரையாடல்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுபவர். அவ்வப்போது கவிதைகளையும் பகிர்ந்து கொள்ளுகிறார், சுயம்.
எங்கள் ப்ளாக்
ஐந்து பேர் குழுவாக எழுதி வருகிறார்கள். இது 'உங்கள் ப்ளாக்' என அவ்வப்போது போட்டிகள்,கேள்விகளை முன் வைக்கிறார்கள். வாசகர்களும் ‘ஆம், நம்ம ப்ளாக்’ என உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள். 87 வாரங்களாக, ஞாயிறு தோறும் வித்தியாசமான, ரசனைக்குரிய புகைப்படம் ஒன்றைத் தெரிவு செய்து, தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீராம் எழுதிய நாய்மனம்-1, நாய்மனம்-2 : “நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல மறந்து போகும் என்று எண்ணியிருந்ததும் நடக்கவில்லை. தண்ணீர் என்றாலே ப்ரௌனிக்கு பயம் குளிக்க வரமாட்டேன் என்று அடம் பிடித்து தரையைத் தேய்த்துக் கொண்டே வருவாள். ஆனால் குளிக்கும்போது சமர்த்தாக இருப்பாள். தண்ணீர்க் குவளை அல்லது பாட்டிலை அவள் கண்ணில் காட்டினால் போதும் சென்று ஓரமாகப் பதுங்கி விடுவாள். அப்படிப் பட்டவள் அடித்துப் பெய்யும் மழையில் என்ன செய்கிறாளோ என்று மனைவி கவலைப் பட்டாள்.
‘மனசு’ சே.குமார்
தேசம் விட்டு தேசம் சென்றாலும் 'மனசு' மொத்தத்தையும் பிறந்த வளர்ந்த கிராமத்திலேயே விட்டு வைத்திருப்பவர்.கிராமத்து நினைவுகளாய், தீபாவளியும் பட்டாசும்..!, மழைக்காலம்:. “சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான்... அதற்கு காரணம் நிறைய.... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப்பையை பள்ளியில் வைத்துவிட்டு கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம், மழை பெய்து விட்டபின் லேசான தூரலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதை தவிர்க்கலாம்... இப்படி நிறைய...பள்ளியில் இருந்து வரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் புத்தகப்பையும் இருக்காதல்லவா... ஓடும் நீரின் குறுக்கே அணை கட்டி, செங்கல் கற்களை வைத்து பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு.

கிராமத்தில் வாழ்ந்த காலக்கட்டத்தை இவர் சிறுகதைகளாய் தொடர்ந்து பதிவு செய்து வரும் விதம் பாராட்டுக்குரியது: கருத்தபசு, அப்பா சேர்.
‘எண்ணங்கள் இனியவை’ ஜீவ்ஸ்
இவரை புகைப்பட வல்லுநராக மட்டுமே ஒருசிலர் அறிந்திருக்கின்றனர் என்பதை கவிதை கதைகளை தன் வலைப்பூவில் பதியும் போது ‘அட இதெல்லாம் கூட எழுதுவீர்களா?’ என்று வரும் பின்னூட்டங்கள் நிரூபிக்கும். மரத்தடி குழுமத்தில் கவிதைகள், வெண்பாக்கள், சிறுகதைகள் என மின்னியவர். 2006-ல் ஆரம்பித்த வலைப்பூவுக்குச் சரியாக ஐந்தாண்டுகள் நிறைவுற்றிருக்க, மொத்தம் 74 இடுகைகளே. எழுதும் படைப்புகளை குழுமங்களிலும், இப்போது கூகுள் buzz-லும் பகிர்வதோடு நிறுத்தி விடுகிறார். வலைப்பூ என்பது ஒருவரது படைப்புகளுக்கான சேமிப்பிடம் என்பதை உணர்ந்து, சமீபத்தில் அதீதம் இதழில் நல்ல வரவேற்பைப் பெற்ற சக்கிரவியூகம் பாகம்:1 , பாகம்:2 சிறுகதை உட்பட, விட்டுப்போனவைகளை தொடர்ந்து வலைப்பூவில் பதிய அழைக்கிறேன் இவரை. சிறுகதைகள்:உறவுகள், ஒரு மெளனத்தில் அலறல்:
அன்று உத்தரையின்
கருக் கொல்ல எய்தது
ஓர் அஸ்திரம்தான்.
இன்று எங்களின் உயிர் கொள்ள
எய்யப்படும் அஸ்திரங்கள் தாம்
எண்ணற்றவை.
” கருப்பையின் உள்ளிருக்கும் பெண்சிசுவின் கதறல்!

கவிதைக்கு, தவறுகள்.

[கோரிக்கையை ஏற்று உடனடியாக செயல்பட்டிருக்கும் ஜீவ்ஸுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்:)!]

‘திரும்பி வாங்க!’
ருமையான பதிவுகளைத் தந்து கொண்டிருந்த பலர் இப்போது நீண்ட விடுப்பில். ஆதங்கத்துடன் விடுக்கிறேன் அவர்களுக்கு அழைப்பு. அமித்து அம்மா, புதுவண்டு[தாய்மைக்காக எடுத்த விடுப்பு. வாசகர்களை வாடவிடாமல் ஆரம்பியுங்களேன் அமித்து தம்பியைப் பற்றியும், நாதனின் தங்கையைப் பற்றியுமான அப்டேட்ஸுடன்:)!], அனுஜன்யா, சதங்கா [சகலகலா வல்லவராக சமையல், சித்திரம் உட்பட கதை, கவிதைகளில் அசத்தியவர்];தமிழ் பிரியன் கதை எழுதும் ஆர்வம் இருக்கு, திறமை இருக்கு, ஆனா முயற்சி இல்லை:)!; ஜெஸ்வந்தி[மிகச்சிறந்த சிறுகதையாளர், என் பிரிய பபிதா பாகம் 1; பாகம் 2.].

எவரும் எதற்காகவும் எழுதுவதை விட்டு விடாதீர்கள். என் நூறாவது பதிவில் நான் வைத்த கோரிக்கை:“இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம். நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.

மீண்டும் எனக்கு நானே உரக்கச் சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கும் கேட்கட்டுமென்றுதான், எஸ்.நீலகண்டனின் எழுத்தின்சாரம் கவிதையிலிருந்து..,
“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”
***

வியாழன், 10 மார்ச், 2011

பறந்து பறந்து விதை தூவுவோம்.. - பெண்கள் சக்திச்சரம்

  • பனிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறையன்றி, மனித நேயம் மாசுப்படும் வேளையெல்லாம் அதைத் தூசு தட்டப் பூத்தபடியே இருக்கும் கவிக்குறிஞ்சி.
  • வீட்டு நடப்பு, ஊர் நடப்பு, நாட்டு நடப்பு, உலக நடப்பு என எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி திறந்து காட்டும் இவரது டிரங்குப் பெட்டி.
  • தனக்கு நீச்சல் தெரியாத நிலையிலும் தண்ணீரில் தத்தளித்த குழந்தைகளைக் காப்பாற்ற உயிர் நீத்து அணையா ஜோதியாய் அனைவர் மனதிலும் ஒளிரும் பள்ளி ஆசிரியை சுகந்தியை நினைவுகூறும் முத்தான பெண்மணி.
  • உலகில் அல்லலுறும் மக்கள் யாவருக்காகவும் அன்பை யாசிக்கும் எழுத்து. அதன் மொழிப்புலமையில் மகிழ்ந்து மயிலாகத் தோகை விரித்தாடியும், வேதனைகளில் நெகிழ்ந்து தாய்மடியாய் தாங்கியும் துணை செல்லுகிறது இவருக்கு, தமிழ்.
  • ‘நாம் தூவும் விதைகள் என்றேனும் ஒருநாள் யாருக்கேனும் இலை உதிர்க்கட்டும்... நிழல் கொடுக்கட்டும்.....பழம் கொடுக்கட்டும் பூக்கள் கொட்டட்டும்.’ நம்பிக்கை தருகிறது இவரது நட்சத்திர வார்த்தைகள்.

யார் யார் இவர்கள்?
அறிய வாருங்கள்!




பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



‘குறிஞ்சி மலர்கள்’ சுந்தரா:
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்குமாம் குறிஞ்சி மலர். மனித நேயம் மாசுப்படும் வேளையெல்லாம் அதைத் தூசு தட்டப் பூத்தபடியே இருக்கும் சுந்தராவின் கவிமலர்கள். உறவுகளின் நடுவே ஏற்படும் விரிசல்கள், மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், சமூக நலன் குறித்த ஆதங்கங்கள் வீச்சுடன் வெளிப்படுகின்றன இவர் எழுத்துக்களில். காலவதி மருந்துகளை விற்று காசு பார்த்தக் கூட்டத்தைச் சாடுகிறார் இப்படி,
“உயிரைக் கொடுத்தேனும்
நீதிகாத்த நாட்டினில்
உயிரை எடுத்தேனும்
பணம்சேர்க்கும் மனிதர்கள்...

வணிகமயமாகிவிட்ட
வாழ்க்கையின் போக்கினில்
காலாவதியாகிப்போனது
மனிதமும்கூடத்தான்... ” காலாவதி மனிதம்.
***
இன்னும் சில:வாடகை வயிறுகள், இருவகை இரவுகள், உறவுக் கயிறு,


ஹுஸைனம்மா:
வீட்டு நடப்பு, ஊர் நடப்பு, நாட்டு நடப்பு, உலக நடப்பு என எல்லாவற்றைப் பற்றியும் ‘பொழந்து கட்டும்’ ஹுஸைனம்மாவின் ‘டிரங்குப் பெட்டி’[அனைத்துப் பாகங்களும் இந்த இழையில்] பதிவுலகில் அதி பிரபலம். “நாமளும் வித்தியாசமா பேர் வைப்போம்னு மூளையக் குடைஞ்சதில கண்டுபிடிச்சதுதான் இந்த “டிரங்குப் பொட்டி” !! நாம சின்னப் புள்ளைங்களா இருந்தப்போ (இப்பவும் யூத்துதான்!!) எல்லார் வீட்டிலயும் ஒரு டிரங்குப் பொட்டி கண்டிப்பா இருந்திருக்கும். அதுல அப்பாவோட கணக்குப் பொஸ்தகம், அம்மாவோட சிறுவாடு காசு, நம்மளோட விலைமதிப்பில்லாத “சாவி கொடுத்தா கொட்டடிக்கிற குரங்கு பொம்மை”...இப்படிப் பலதும் கிடக்கும். அதேதான் இது!!” என்கிறார்.

பலரது பதிவுகளில் இவர் இடும் பின்னூட்டங்கள், கேட்கும் கேள்விகள் பளிச்சுன்னு நமக்கு ஒரு புன்னகையை வரவழைக்கும். அதே நேரம் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும். எதிலும் ஒரு அநாயசம், தனித்துவம், இது ‘தாமிரபரணித் தண்ணியக் குடிச்சு’ வளர்ந்த பலரிடம் காணக்கூடிய ஒன்று என்றால் மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது:)!

இவரது அனுபவப் பகிர்வுகளாகிய ஆறுமுகத்தாய்- பாகம் 1, பாகம்-2 என்னை மிகக் கவர்ந்தவையாகும். சிறப்பான எழுத்து நடைக்கு உதாரணமும்.
‘உப்புமடச் சந்தி’ ஹேமா

தன் ஊர் பெயர் கொண்ட ‘உப்புமடச் சந்தி’யில் ‘கதை பேச வாங்கோ’ என அன்புடனே நமை அழைத்து அளவளாவும் ஹேமா கடந்த ஆண்டைத் திரும்பிப் பார்க்கிறார், இங்கே.

தன் தாய் தேசம் தந்த பரிசாக
மனநெகிழ்வோடும் கண்ணீரோடும் இவர் ஏந்திய ஈழம் பிரிவுக்கான தமிழ்மணம் விருது 2010, இவர் அனுபவித்த.., இவர் போன்ற பல ஈழத்தமிழர்கள் அனுபவித்த வேதனைகளுக்கெல்லாம் மவுன சாட்சியாக, யாழ் மாநாட்டை மீட்ட வைத்த செம்மொழி மாநாடு. “கண் திறக்காமலே அப்பா என்னைப் பிடித்தப்படி "ஓடி வா ஓடி வா" என்றபடி ஓட முயற்சிக்கிறார்.கால் அடி எடுத்து வைக்கவே இடம் இல்லை அங்கு.அப்பாவை நான் இழுக்க என்னை அவர் இழுக்க எங்கோ ஒரு குழிக்குள் விழுந்ததாய் விளங்குகிறது.அப்பாவின் கை என்னோடுதான் இன்னமும்.சேறு அப்பிக்கொள்ள நிறையப் பேர் இருந்தோம் அந்தக் குழிக்குள்.மழையும் வெள்ளமும் சேறும் என்று முன்னமே சொல்லியிருந்தேன்.இப்போது விளங்குகிறது.அது குழியல்ல.வெள்ள வாய்க்கால்.

அப்பா அணைத்துக்கொள்கிறார்.எதுவும் சொல்லவில்லை நான்.பயமோடா தம்பி என்று கேட்டாலோ,குளிருதோ என்று கேட்டாலோ,நோகுதோ என்று கேட்டாலோ இல்லை என்றேதான் சொல்லியிருப்பேன்.மனம் முழுக்க வலி.தமிழனாய்ப் பிறந்து தாய்மொழி தமிழுக்கு விழா எடுக்கக்கூட முடியாத தேசத்திலா நாம் பிறந்திருக்கிறோம் என்று.


இந்த வலிகளில் பிறக்கும் இவரது படைப்புகள் உலகில் அல்லலுறும் மக்கள் யாவருக்காகவும் அன்பை யாசிப்பதாக உள்ளன.

இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகும் இவர் கவிதைகள் யாவும் ‘வானம் வெளித்த பின்னும்..’ வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகின்றன. இவர் மொழிப்புலமை கண்டு வியந்து மகிழும் தமிழ், எழுத்துக்களில் மயிலாகத் தோகை விரித்தும், வேதனைகளில் நெகிழ்ந்து போய் தாயாகப் பங்கெடுத்துத் தன் தோளிலே சாய்த்தும் துணை செல்கிறது.
ஹாஸ்ய ரசம் கோமா
நண்பர் வட்டம், திண்ணை இதழ்களில் ஒரேகால கட்டத்தில் நாங்கள் எழுதி வந்திருந்தாலும் இவரது முதல் படைப்பை நான் வாசித்தது ஒன்பதாவது படிக்கையில், 1979-ல், ரத்னாபாலா சிறுவர் இதழில். ‘இன்னொரு காந்தி வரவேண்டும்!” என்கிற அந்த சிறுகதை பெற்ற ஆயிரம் ரூபாய் பரிசு அந்தக் காலத்தில் உயரிய ஒரு அங்கீகாரம். அதை வலைப்பூவில் இவர் பதிந்திருக்கிறாரா எனத் தேடியபோது கிடைக்கவில்லை. தனிமடலில் கேட்டபோது, ‘அக்கட்டுரையின் கருத்து இக்காலத்துக்கு பொருந்தாதே?’ என்றார். ‘நாட்டுப் பற்றை விதைக்கும் நல்லதொரு கருத்து பொருந்தாமல் போனது காலத்தின் பிழை. நாட்டின் வருந்தத்தகு நிலை. ’ என்றேன். சம்மதித்துள்ளார் பதிவதாக. இன்றும் அந்த விதை எவர் மனதையேனும் அசைத்து, துளிர்த்துத் தளிர்விட வல்லதென்றே நம்புகிறேன். இந்த வாரத்துள் கிடைத்தால் அதன் சுட்டியை இங்கு இணைத்திடுவேன், முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரசித்த படைப்பை வலைச்சரத்தில் தொகுத்த பெருமையுடன்!

ஒருவேளை தாமதமானாலும், அவர் பதியும் போது பின்னூட்டத்தில் இணைத்திடுவேன் அதன் உரலை.

‘இன்னொரு காந்தி வரவேண்டும்’ வலைச்சரத்துக்கும் நாட்டுக்கும்!
***

இவரது டைமிங் நகைச்சுவைக்கு யாரைக்கேக்கணும்?, வாக்களித்தவன் கேள்விகளும் தமிழக அரியாசனத் தலைமையின் பதில்களும்!
***

தனக்கு நீச்சல் தெரியாத நிலையில் கூட,தண்ணீரில் தத்தளித்த ,பல குழந்தைகளைக் காப்பாற்றி ,தன் உயிர் நீத்த பள்ளி ஆசிரியை சுகந்தி”யை நினைவு கூர்ந்து தான் தேடும் பத்தாவது பெண்மணியாகவும் ஆகிறார் இங்கே முத்தான 10 பெண்மணிகள்.

வள்ளுவம் வலைப்பூவில் இவர் விதைத்து வரும் சிந்தனைளும், ஆன்மீகப் பாடல்களும், ஹாஸ்ய ரசங்களும் விரைவில் தனித்தனிப் புத்தகங்களாகத் தொகுக்கப்பட உள்ளன என்பது உங்களுக்குக் கூடுதல் தகவல். வாழ்த்துவோம் இவரை.

[கோரிக்கையை ஏற்று இன்னொரு காந்தியை வலைச்சரத்துக்கு அழைத்து வந்திருக்கும் கோமாவுக்கு நன்றியும் வணக்கங்களும்!!]

அன்புடன் அருணா
தாய்மையின் மறு உருவாய் மாணவரை வழிநடத்தும் தலைமையாசிரியை, பொறுப்பான இல்லத்தரசி, சக மனிதர் யாவரிடமும் அக்கறை காட்டும் சமூக உணர்வு கொண்டவர், மனிதரோடு மழையையும் நேசிப்பவர். எங்கே, நல்ல விஷயங்களைக் கண்டாலும் மனமும் முகமும் மலந்து நீட்டிடுவார் பூங்கொத்தை. சென்றவாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலித்த போது பகிர்ந்த படைப்புகள் யாவும் கல்வெட்டு. அதில் நிறைவுதினக் கவிதையை பறந்துபோய் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன் இந்த நட்சத்திர வார்த்தைகளில் உலகம் துளிர்ப்பது நிச்சயம் என்று:
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்

உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள் விதைகளை.....
கைக்கெட்டா தூரம் வரை விசிறியடியுங்கள் விதைகளை....

ஒரு பறவையின் நோக்கத்தோடு பறந்து பறந்து விதை தூவுங்கள்...

எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.

என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.

கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!
” நன்றி அருணா!! தூவுவோம் விதைகளை!!
***

இன்றுடன் பெண்சக்தி சிறப்புச்சரம் நிறைவுறுகிறது. 33 சதவிகிதம் தருவதற்கே யோசிக்கும் உலகினிலே, கொடுத்திடுவோம் பெருந்தன்மையுடன் ஐம்பது சதவிகிதமாய் அடுத்த மூன்று நாட்களை, ஆண் சக்திகளுக்கு:)!

புதன், 9 மார்ச், 2011

நம்பிக்கை நூற்று நனவை நெய்வோம்..- மகளிர் சிறப்புச்சரத்தில்..

  • மாற்றி நடப்பட்டாலும் முன்னேறிக் காட்டலாம் என்கிறார் பதிவுலகின் நம்பிக்கை நட்சத்திரம்.

  • நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் விருதுகள் தரும் ஊக்கத்தால் நிகழும் அற்புதத்துக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

  • ஒருசில துளிகளில் முடிந்து விடும் இவரது பதிவுகளில் நமக்கான அன்றைய தியானம்.

  • இடைவெளி விடாமல் வருடக் கணக்காய் எழுதி வரும் இவரது உத்வேகம் நமக்கொரு பாடம்.

  • நம்பிக்கை நூற்று நனவை நெய்வதாலேயே இவர் வானில் அத்தனை நட்சத்திரங்கள் பிரகாசம்.


யார் யார் இவர்கள்?

அறிய வாருங்கள்!

கனவே நனவாக..-மகளிர் சிறப்புச்சரம்-புதன்
***



பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



அமைதிச்சாரல்:
பயணக்கட்டுரை, சமையல் குறிப்புகள், கவிதைகள், புகைப்படங்கள் என எல்லாவற்றிலும் கலக்கி வரும் பதிவுலக நம்பிக்கை நட்சத்திரம். இயல்பான நகைச்சுவை இவர் கட்டுரைகளெங்கும் இழையோடும். சமீபமாக அருமையான சிறுகதைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார். அவற்றில் ஒன்று,‘பொங்கல் மகிழ்ச்சி’[லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை].கவிதை நேரமிது வலைப்பூவில் ‘முன்னேற்றம்’ பற்றி சொல்லியிருப்பதில் எனக்குப் பிடித்தமான சிலவரிகள்:
ஆசைக்கும் அறிவுக்குமான போட்டிக்களத்தில்
வாய்ப்புகள் ஜெயித்துவிட
விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்..
பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.


‘சமைத்து அசத்தலாம்’ ஆசியா ஓமர்
பதிவுலகில் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் விருதுகளின் ஊக்கத்தால் நிகழும் அற்புதத்துக்கு இவர் சிறந்த உதாரணம். நண்பர் அஹமது இர்ஷாத் கொடுத்த 'சிறந்த எழுத்தாளர்' விருதே தன்னைச் சிறுகதை முயற்சியில் இறங்க வைத்ததாகக் குறிப்பிடுகிறார். அப்படியாக இவர் எழுதிய முதல் சிறுகதை தமிழ்மணம் விருது 2010 மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று ஜொலிக்கிறது.
எம்மா: “அப்பப்ப கண்ணை திறந்து, எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்திட்டு கண்ணை மூடிக்கொள்ளுவார், இப்படியாய் ஒரு நாள் முழுவதும் கழிந்தது, சொந்தக்காரங்க எல்லாம் இந்த கிழவனுக்கு வேலை இல்லை,நல்ல திடமாக இருந்திட்டு எல்லாரையும் எங்கேயும் அசைய விடமாட்டேங்கிறார் பாரேன்னு ஒவ்வொருவராக அவரவர் வீடு செல்ல ஆரம்பித்து விட்டனர்..

தமிழ்மணம் விருது தந்திருக்கும் ஊக்கத்தால் மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துவோம்.
***
சமையல் செய்முறைகளை ஒவ்வொரு பருவத்திலும் படமெடுத்து வழங்குவது இவரது தனிச் சிறப்பு. சமீபத்தில் தன் வலைப்பூவின் ‘ஒரு வருட நிறைவு’க்காக வழங்கிய இனிப்பு இங்கே.
***
மனநலம் உடல்நலம் குறைந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் இருந்த அனுபவங்களை மூன்று பாகங்களாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் ‘சின்னஞ் சிறிய உலகம்’.
***
‘நினைவின் விளிம்பில்’ கவிநயா:
‘திண்ணை’, மற்றும் மாலனின் ‘திசைகள்’ இணைய இதழ்களில் எழுதி வந்தவர், இணையக் குழுமங்களில் தொடர்ந்து பின்னர் நம் ‘நினைவின் விளிம்பில்’ என்றும் நிற்கக் கூடிய படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் வாசிக்கக் கிடைக்கும் இவரது பதிவுகள் எனக்கு. ஒருசில துளிகளே அப்பதிவினில் கழித்திருந்தாலும், அன்றைக்கான தியானத்தை முடித்த நிறைவைத் தரும் பல படைப்புகள்.

ஜலதோஷமும் சந்தோஷமும்
:. “பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.

உங்களுக்கு எத்தனை அம்மா?
: “அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும்.

மறக்கத் தெரியுமா?:“நினைக்கத் தெரிந்த மனசுக்கு மறக்கவும் தெரியும். நாமதான் அதுக்கு சொல்லிக் குடுக்கறதில்லை!

கவிதைகள்: நம்பிக்கை, அமைதி, சரணாகதி.

சிறுகதைகள்: ரயில் பயணம், யாருக்குத் தெரியும்?

‘எண்ணிய முடிதல் வேண்டும்’ ஷைலஜா:
தேர்ந்த எழுத்தாளர். 230-கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்களைப் படைத்த இவர் சிறந்த கட்டுரையாளரும். வானொலி மற்றும் (ராஜ்) தொலைக் காட்சிக்காக நாடகங்களும் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். விளம்பரங்களுக்குக் குரல் கொடுக்கிறார். சிறந்த இல்லத்தரசியாய் பரிமளித்தபடி பல ஆண்டுகளாக இடைவெளி விடாமல் எழுதி வருவது போற்றவும் நாம் கற்றுக் கொள்ளவும் வேண்டிய ஒன்று. பிற எழுத்தாளர்களின் படைப்புகளுடன் இரண்டு தொகுப்புகள் வந்திருப்பினும், சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது ‘அவனும் இவனும்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

இவரது நகைச்சுவை உணர்வுக்குச் சிறந்த சான்றாக சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!
***
அணை திறந்த வெள்ளமென இவர் பிறந்த ஸ்ரீரங்கத்துக் காவேரி துள்ளி வரும் அழகில் வார்த்தைகள் பெருக்கெடுத்து ஓட, சொல்லியிருக்கிறார் உருக்கமாய் இக்கவிதையிலே பெண்படும் பாட்டினை.., ஆத்தா ஒன் சீலதான்:“ஆத்தா ஒன் சீலைதான்
காத்தாக அணைச்சிருக்கு
தறியிலே நெஞ்சது என்
உசுருலே பிணைஞ்சிருக்கு.
.......................
நாலெழுத்துப்படிச்சிருந்தா
நானும் தல நிமிந்து பேசிடுவேன்.
பயத்துல செத்துக்கிட்டு
பிடி சோறுக்கும் வழி இல்லாம்
பட்டினியில் கிடக்கும் என்னை
இடிபோல தாக்கிச்சி..

***

தசரா யானைகளின் அவஸ்தைகள் : “காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது வேதனை. தினமும் 750 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை, பயிற்சிக்குச் செல்லவேண்டும்.” தாய்மையின் கருணையுடன் இதற்கான தீர்வையும் கோரிக்கையாய் வைத்துள்ளார் பதிவின் முடிவிலே பாருங்கள்.
***
‘என் வானம்’ அமுதா:
‘என் வானம்’ வந்த கதையை இவரே சொல்லியிருக்கிறார் இங்கு.

குழலினிது யாழினிது எனும் இழையில் தன் மகள்கள் நந்தினி, யாழினியுடனான தருணங்களைத் தாய்மையின் பூரிப்புடன் பகிர்ந்து வருகிறார். அவர்களில் தன்னையே கண்டெடுக்கும் சந்தோஷத்தை உணர்த்துகிறார் நமக்கும் அற்புதமாய் இங்கே, குழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்: “கோபமும், பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில் , உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள் தானே?

ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும், குருவியும், அணிலும், பூனையும், நாயும், (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவு இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது.

சமீபத்தில் குழந்தைகளுடன் இவர் ஆமை நடை சென்ற அனுபவங்கள் சுவாரஸ்யமானவை.ஆமை நடை செல்ல ஆசையா?, சுட்டிகளுடன் ஒரு டர்ட்டில் வாக்.

நூற்று நாற்பது எழுத்து நவீன இலக்கியம் ட்வீட்ஸிலும் அசத்துகிறார் பாருங்களேன்இங்கே.

வாழ்க்கையின் வலிகளை, மனிதரின் மறுபக்கங்களை எளிய வரிகளில் சொல்லிக் கடந்து விடுகிற இவர் கவிதைகள் வாசிப்பவர் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியது.

உறுத்தல், கேள்விகள், ஊரில் வீடு, மனம், பாடம் என இவர் வானத்தில் மிளிரும் கவி நட்சத்திரங்கள் அத்தனையும் பிரகாசம்! நம்பிக்கை நூற்று நம் காயங்கள் அனைத்தையும் வருடி, மருந்தாகி, மறக்கவும் வைக்கும் இவரது அழகிய வரிகளுடனேயே இந்த மகளிர் சிறப்புச்சரத்தை நிறைவு செய்கிறேன்:

“அன்பைக் கொட்டி
உறவை வளர்த்தேன்
வெட்டிச் சென்றன
சொற்கள்

விலகி நின்று
புன்னகை செய்தேன்
காயம் வடுவாக...

ஆசையை நூற்று
கனவுகள் நெய்தேன்
கிழித்துச் சென்றது...
காலம்

நம்பிக்கை நூற்று
நனவை நெய்தேன்
கனவே நனவாக...

***

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin