ஞாயிறு, 30 ஜனவரி, 2011

அரசுக்கு ஓர் கடிதம்


இலவசங்களால் வலைபின்னி
வாக்குறுதிகளால் தூண்டிலிட்டு
தேர்தல் தோணியிலே
வெற்றிமீன் பிடிப்பவருக்கும்

கூட்டணியெனும் வலைபின்னி
மத்தியமந்திரி எனும் தூண்டிலிட்டு
அதே தோணியில்
தொகுதிமீன் பிடிப்பவருக்கும்

உயிரைப் பணயம் வைத்து
வயிற்றைப் பிழைப்புக்கென்று
ஆழ்கடலில் வலைவீசி
வாழ்வோடு போராடுபவர்
வலிகள் புரிவதில்லை

இயற்கை சீறிடுமோ
என்பதுடன்
தோட்டாக்கள் துளைத்திடுமோ
எனவும்
தவியாய் தவித்தபடி
கரையில் கண்ணீருடன்
காத்திருக்கும் உற்றவரின்
வேதனைகள் பொருட்டில்லை

இன்று..

கணக்கற்ற இனக் கொலைகள்
கடலுக்குள் தினம் நடக்க
பிணக்கம் வேண்டாம் அரசுடனென
ஊடகங்கள் மூடி மறைக்க

வந்தாலும் வரக்கூடும்
நாளை விளம்பரங்கள்
அழகான மீன் படத்துடன்
முத்தான எழுத்துக்களில்
சிறுமி கொடுக்கும் கடிதம்

‘அன்புள்ள முதல்வருக்கு
ஆனந்தி எழுதுவது..
ஐந்து லட்சத்துக்கு நன்றி!’
***

நாம் கொடுப்போம் வாரீர்
மனுக்கடிதம் நாட்டின் பிரதமருக்கு!
***

  • http://www.petitiononline.com/TNfisher/ மனுவில் கையெழுத்திட்ட 773-வது நபர்தான் நான் நேற்று. ஒரு இலட்சம் பேர்களின் கையெழுத்துக்கள் சேர்ந்தால் மீனவரின் தலையெழுத்தை மாற்றி அமைக்க உரியவரை அணுக முடியும் எனும் நம்பிக்கையுடன் தொடங்கப் பட்டிருக்கும் ஒரு கூட்டு முயற்சி இது. இணைந்திடுங்கள் குரல் கொடுக்க!

வெள்ளி, 28 ஜனவரி, 2011

2011 பெங்களூரு குடியரசு தின மலர் கண்காட்சி புகைப்படங்கள் - ( Bangalore Lalbagh Flower Show )

வ்வொரு வருடமும் போலவே இலட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று ஜனவரி 19 முதல் குடியரசு தினம் வரையிலாக நடந்து முடிந்தது பெங்களூரு மலர்க் கண்காட்சி.

1.வரவேற்கிறது லால்பாக்

2.அன்றைய இன்றைய தொடக்கங்கள்இந்த வருட மையக் கரு ‘அன்றைய பெங்களூருவின் தொடக்கமும், இன்றைய பெங்களூருவின் தொடக்கமும்’.

பெங்களூரின் நான்கு எல்லைகளையும் (இப்போது அவற்றைத் தாண்டி நகரம் வெகுதூரம் விரிந்து விட்டிருப்பது வேறு விஷயம்) வரையறுக்கும் விதமாக கெம்பகெளடா மண்டபங்கள் 1537 ஆம் ஆண்டு கெம்பகெளடா எனும் வீரனால் கட்டப் பட்டது. ஒன்று லால்பாக்கிலிருக்கும் பாறையொன்றின் மேலுள்ளது.

ஒரே தோற்றத்தில் அமைந்த மற்ற மூன்று மண்டபங்கள் முறையே கெம்பம்புத்தி ஏரி, அல்சூர் ஏரி, மேக்ரி சர்கிள் இவற்றின் அருகே அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒற்றைப் பாறையைக் குடைந்து செய்யப் பட்டவை என்பதுவும் இவற்றின் சிறப்பு.

(பதிவின் முடிவில், நான்கில் இரண்டு மண்டபங்களின் படங்கள்.)

சரி, இன்றைய பெங்களூரின் தொடக்கம்? ஆம் வேறென்ன மெட்ரோதான். ஆக இவ்விரண்டுமே பார்வையாளர்களைக் கவரும் முக்கிய அம்சங்களாக அமைந்திருந்தன.

3.மெட்ரோ
இயற்கையைப் போற்றும் லால்பாக்கில் மெட்ரோவுக்கான ஆராதனை மேலே. இதன் வரவுக்காக பெங்களூர் இழந்த மரங்கள் ஆயிரக்கணக்கில். நகரங்களின் வளர்ச்சி என வருகையில் ‘தவிர்க்க முடியாதவை’ என்கிறார்கள். ஆகையாலே இப்போது கோடையில் தகிக்கிறது பெங்களூரு. காரணமாக இழந்த மரங்களே கை காட்டப் படுகின்றன.

நிலவுகிற இதமான தட்பவெப்பத்தால் 2009-10 ஆண்டில் சுமார் ஐந்தரை கோடி ரூபாய்க்கு அலங்கார மலர்களை பிற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து நாட்டில் முன்னணியில் இருக்கிறதாம் ‘பெங்களூரு இன்டர்நேஷனல் ஃப்ளவர் ஆக்ஷன் நிறுவன‌ம்’. இதில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் எண்ணற்றோர். இதமான தட்பவெப்பம் இனி கனவாகிப் போகுமோ? மெட்ரோ திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை இழக்கவிருக்கும் மரங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ, தெரியாது.

பெங்களூர் எம் ஜி ரோடு, விதான் செளதா சாலை போன்ற பல முக்கிய இடங்கள் பழைய கம்பீரத்தை மெட்ரோ வரவினால் இழந்து விட்ட சூழலிலும், அதில் பயணிக்க மக்களிடையே ஒரு பரவசமான காத்திருப்பு நிலவுவதை மறுப்பதற்கில்லை. பாருங்கள் இங்கே, விட்டால் இந்த மலர் மெட்ரோவிலேயே ஏறி விடுவார்கள் போலிருக்கிறது.

4.இப்போ வருமோ எப்ப வருமோ
இதைப் படமாக்கிக் கொண்டிருந்த அதே ஞாயிறு ஜனவரி 23 மாலையில்தான் எம் ஜி ரோடில் நிஜ மெட்ரோவின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இயங்க ஆரம்பிக்க இன்னும் ஒருசில மாதங்கள் பிடிக்கலாம் என்கிறார்கள்.

5.மலர் வனம்

6.சிறப்பு விருந்தினராய் தேசியப் பறவைகள்

7.அலங்கார வளைவு

8. க்ளிக் க்ளிக்
காய்கள் பழங்களால் பல்வேறு அலங்கார வடிவங்கள்!
படமாக்கி மகிழும் பொது ஜனங்கள்!


9. பல்லைக் காட்டும் பரங்கிக்காய்

10. பெட்டூனியா மலர்களும் டிமோத்தி காக்டஸும்

11. பூங்குன்று

12.கண்ணாடி அரங்கைச் சுற்றி அலை மோதும் ஜனத்திரள்
ங்கே தெரிவது அரங்கிலிருந்து வெளியேறும் வழி. நேர் பின்புற வாசலே நுழையும் வழி. ஏறத்தாழ முக்கால் கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னரே நுழைய இயன்றது. ஞாயிறு மாலை ஆயிற்றே. கூட்டத்திற்கு கேட்கவா வேண்டும்?!

கடந்தவருடம் குடியரசு தினத்தன்றே சென்றிருந்தேன். அன்றைய கூட்டத்துக்கு எவ்வளவோ தேவலாம். அன்று கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகளில் பள்ளி மாணக்கர் உட்பட பல்லாயிரக் கணக்கானவர்கள் வந்திருந்தனர்.

ஆனால் பெங்களூர் பந்த்தினால் கடந்த சனிக்கிழமை அன்று காலியாக இருந்ததாம் வரலாறு காணாத அதிசயமாய். அதுவே திரு. ஸ்ரீனிவாஸ் மற்றும் திரு.கிருஷ்ணமூர்த்தி போன்ற வயதானவர்களுக்கு குஷியாகி விட்டதாம். 460 ஏக்கர் தோட்டத்தை கூட்டமில்லாத சூழலில் ரசிக்க முடிந்ததெனப் பேட்டியளித்திருந்தார்கள். டொர்னட்டோவில் வசிக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு வருடமும் தவறாமல் மலர்கண்காட்சியைக் காண இந்தியா வருவதாகக் குறிப்பிட்டிருந்தது சுவாரஸ்யம்.
13. அக்கறை




ஆம், இப்படியான ஆசையுடன் எத்தனை பெரியவர்கள்? நாங்கள் காரை பார்க் செய்யும் போது இளைஞர் ஒருவர் தன் காரில் இருந்து மடக்கு சக்கர நாற்காலியை இறக்கிக் கொண்டிருந்தார். மைதானத்தினுள் ஆறேழு நாற்காலிகளைப் பார்க்க முடிந்தது. அந்தக் கூட்டத்திலும் வீட்டுப்பெரியவர்களை அக்கறையுடன் அழைத்து வந்து கண்காட்சியை ரசிக்க வைக்கிற இன்றைய தலைமுறையைக் காண்கையில் நெகிழ்வும் மகிழ்ச்சியும்.

அரங்கின் வெளியில் சிறுசிறு பிரிவுகளாய் தோட்டங்கள். தொட்டிகளிலே விதவிதமான மலர்கள் செடிகள் ரசிப்பதற்கும் விற்பனைக்கும். தனிமலர்கள் சில உங்கள் பார்வைக்கு:

14.ரோசாப்பூ


15. செகப்பூ

16. சிலிர்ப்பூ

17. மலர்ச்சி

18.குளிர்ச்சி

19. மனம் வருடும் இளம் வண்ணம்

20. குன்றின் மேல்.. மேற்கு எல்லைசில்அவுட் மரங்களின் பின்னால் ஒளிர்வதே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த லால்பாக் கெம்பகெளடா மண்டபம். இது நகரின் அன்றைய 'மேற்கு' எல்லை வரையறுப்பது என்றே எண்ணுகிறேன்.


வீட்டுக்கு வந்து மற்ற மூன்று மண்டபங்களும் எங்கே உள்ளன இணையத்தில் தேடிய போதுதான் அறிய வந்தேன் ஒன்று எங்கள் வீட்டுக்கு வெகு அருகாமையிலேயே ஐந்து நிமிடப் பயணத்தில் இருப்பதை. இணையத்தில் அதன் படம் கிடைத்தாலும் நேரில் சென்று நானே எடுத்துப் பதிய வேண்டுமெனும் ஆவலில் கிளம்பி விட்டேன் நேற்று மாலை, காமிராவும் கையுமாக அந்தப் பூங்காவை நோக்கி...

21. ரமண மகிரிஷி பூங்கா
மேக்ரி சர்கிள் அருகே பாலஸ் க்ரவுண்டின் எதிர்ப்புறம் அமைந்துள்ளது இப்பூங்கா. வாரநாள் ஆகையால் கூட்டமில்லை. வெகு நேர்த்தியாகப் பரமாரிக்கப் பட்டு வருவது நுழைந்ததுமே தெரிகிறது. அன்றைய பெங்களூரின் வடக்கு எல்லையை வரையறுக்க எழுந்த மண்டபத்தையும் பூங்காவையும் குடியரசு தினத்துக்காகச் சிறப்பாக அலங்கரித்திருந்தார்கள்.

22. ரம்மியமாய் வடக்கு எல்லை

மாலைச் சூரியனின் சாய்ந்த ஒளிக்கற்றைகள் மண்டபத்தையும் மலர்களையும் குளிப்பாட்டும் ரம்மியக் காட்சி.

இதோ அடுத்தடுத்து உங்களுக்காக அசலும் நகலும் ஒரே கோணத்தில்...,

23.மலர்கள் சூழ நிஜ மண்டபம்
24. மலராலேயே கண்காட்சி மண்டபம்


(இப்பதிவிலுள்ள படங்களை நகல் எடுத்து பிற தளங்களுக்குக் கொடுப்பதையோ, தங்கள் தளங்களில் வெளியிடுவதையோ தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)


கடந்த வருட கண்காட்சிப் பதிவு இங்கே.

விழிகளுக்கு கிடைத்த விருந்தில் பிடித்ததென எதுவும்..?

செவ்வாய், 25 ஜனவரி, 2011

மாறாத ஓர் உணர்வு! - குடியரசு தின வாழ்த்துக்கள்!


ஊழலற்ற அரசின் ஆட்சி
எகிறாத விலைவாசி
சாமான்ய இந்தியனின்
நிறைவேறாக் கனவுகள்

நம்பிக்கையுடன் நகர்வது
பழகிப்போன ஒன்றாகி..

எப்போதும் போலவே
குடியரசு தினக் கொண்டாட்டங்களை
கொடியேற்றம் அணிவகுப்பு
தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை

எதிர்பார்த்து..
நாளைய தினம்!

எத்தனை கோபம் எத்தனை வருத்தம்
எத்தனை எத்தனை இருப்பினும்

நாடு நம் நாடு
என்பது மட்டும்
மாறாத ஓர் உணர்வாய்..!

வாழ்க பாரதம்!

குடியரசு தின வாழ்த்துக்கள்!
***

படத்தில்: பெங்களூரு விதான் செளதா

வெள்ளி, 21 ஜனவரி, 2011

வெயில் தின்ற மழை-நிலாரசிகனின் கவிதைத் தொகுப்பு- என் பார்வையில்..


நிலாரசிகன் பக்கங்கள் வலைப்பூவுக்கு அடிக்கடி செல்பவரா நீங்கள்? வலைப்பூ தலைப்பின் கீழ் அவர் வேண்டும் வரமாய் அமைந்த வரிகளை வாசித்ததுண்டா நீங்கள்?
[வேண்டும் வரம்]- ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!

கவனியுங்கள். இவர் வேண்டுவது வரங்கள் அன்று. வரம். ஒரே ஒரு வரம்.

புது இடுகைகளை வாசிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இவ்வரிகளையும் வாசித்து வருவது வாடிக்கையாகி விட்டது. முதல் முறை அந்தக் கடைசி வரியில் ஸ்தம்பித்த மனது, அடுத்தடுத்த முறைகளில் ‘எனக்கும் வேண்டும் அப்படியொரு மனசு’ என சொல்லிப் பார்த்து, பிறகு இந்த பக்குவம் நமக்கு சாத்தியமில்லை என்ற முடிவுடன் வியந்து விலகி ஓடி வந்து விடுகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார். இவர் வேண்டும் வரம் போதும் இவரது கவிதை தொகுப்பு எப்படியானதாக இருக்கக் கூடுமென்பதைச் சொல்ல.

ற்றை மரம் உதிர்த்த பூக்குவியலின் மத்தியில் 'தனி'த்திருக்கும் இளைஞனின் படமொன்றும், வேண்டும் வரத்துக்கு அருகில்.

தனிமை என்பது துயரா இனிமையா, வரமா சாபமா, மனிதனுக்கான தேவைகளுள் ஒன்றா, ஆத்மாவின் தேடலா எனும் பல கேள்விகளை அதிர்வுடன் எழுப்பியபடி நகருகின்றன பல கவிதைகள் இத்தொகுப்பில்:
குழந்தையாதலின் சாத்தியங்கள் ஏதுமற்ற
இரவொன்றில் உனக்கொரு
உடைந்த பொம்மையைப் பரிசளித்து
சிரிக்கின்றது காலம்.
மென்காற்றில் சிதறும் சாரலில்
நனைந்தபடி தனித்தழுகிறாய்
நீ


சில கவிதைகள் நம்பிக்கையை விதைப்பவையாகப் புதுப் பரிமாணம் காண்பிக்கின்றன:
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்


நிராகரிப்பின் வலி பேசும் கவிதைகளிலிருந்து பிசுப்பிசுப்பாய் வந்து ஒட்டிக் கொள்கிறது ஈரம், பக்கம் திருப்பும் விரல்களில்:
எவ்வளவு முயன்றும்
நினைவில் மலராத
கனவென மரணிக்கின்றன
என் ப்ரியங்கள்.


யற்கையுடன் ஒன்றியதானதொரு கனவுலகுக்குள் நம்மை இட்டுச் செல்கின்றன பல கவிதைகள்.சிறுமிகளும் தேவதைகளும், மழையும் நட்சத்திரங்களும், விலங்குகளும் பறவைகளுமே அங்கே கவிஞரை கனிவுடன் மகிழ்விப்பவையாக உள்ளன:
பறவைகளின் எச்சம்
மண் தொட இயலா
அடர்வனத்தில்
உலவுகிறார்கள் சிறுமிகள்.
அவர்களது பாதச்சுவடுகளில்
தேங்கி நிற்கும் நீரைப்
பருகி மகிழ்கின்றன விலங்குகள்.
இருள் நிறைந்த அவ்வனத்தில்
பொழிந்துகொண்டே இருக்கிறது
மழை..


சாதிக்கும் வேகமாய் ‘கனவுகள் தகர்தெறிந்து’ கவிதை:
“வீழ்ந்து கிடத்தலைவிட
பறந்து சாதலே பெரிதென
உணர்த்தின
சவப்பெட்டிக்குள் காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்”

ஊர்ந்து செல்லும் கால்கள் இழந்த கிழவனொருவனுக்குக் காட்டும் கருணையாய் இவ்வரிகள்:
கற்கள் எழுப்பும் அலைகளில்
மெல்லக் கால் முளைத்துப்
பால்யத்திற்குள் நுழைகிறான்.
தாய்மையின் சாயலுடன் மிதந்தபடி நகர்கிறது
அந்நதி.


மனித வாழ்வின் நிலையற்ற சுகம் பற்றி இதைவிட அழகாக சொல்ல இயலுமா தெரியவில்லை:
நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக் கொண்டன
இரு மீன்கள்.
குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன.
உரையாடல் முடியும் முன்பே
நின்றுபோனது அனைத்தும்.
மெளனசுகத்துடன் சிரித்துக்கொண்டது
வெண்ணிலா.


னம் வருடுகின்றன ‘இந்தக் கவிதை’,‘சிறுவனின் மணல்வீட்டை’.

வாழ்வின் மிகப் பெரும்’ எழுதுகிறது மனிதனின் கோரமான மறுபக்கத்தை, சிறு சுயசரிதையாய்.

அனல் நிறைந்த கோடையில்’வெயில் தின்ற மழையாக, உலகத்தால் கருணை மறுக்கப்படும் மாந்தரின் நிலைமையை வலிமையாகச் சொல்லுகிற தலைப்புக் கவிதை.

மேலே சொன்னவை போகவும் அறுபது அற்புதமான கவிதைகள் நிறைந்த பயணத்தில் என்னை நின்று சிலகணங்கள் பிரமிக்க வைத்தவற்றில் மேலும் குறிப்பிடத் தக்கவை:தனிமையின் இசையில், இரவிலும் பகலிலும், காற்றுப்புகாத கண்ணாடிச்சுவரின், முதலில் அது நத்தை என்றே, நீங்கள் இறந்து போவீர்கள், தவிர்த்தலையும் ரசனையுடன், நான் தனித்திருக்கும் உலகில், இந்த வலியை யாரிடம், நான்கு சுவர்களுக்குள்.

ஒவ்வொன்றுமே ஆழ்ந்த அர்த்தங்களுடன் பாசாங்கற்ற உணர்வுகளின் வெளிப்பாடாக, மனதுக்கு நிறைவான ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தந்து மிளிர்கின்றன.

நவீனக் கவிதைகளின் பாணி முழுமையாக வசப்படாத எனக்கு சில கவிதைகள் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்பதையும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறேன். அதே நேரம் அவற்றை வசப்படுத்தும் ஆவலை அதிகரிப்பதாகவும் உள்ளன.

வெயில் தின்ற மழை’ இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

வாழ்க்கையை கவிதையாகவே வாழும் மென்னுணர்வு வாய்க்கப் பெற்றதாலேயே முப்பது வயதுக்குள் இது சாத்தியப்பட்டிருக்கிறது. தனிமையை, புறக்கணிப்பை, துயரை, தோல்வியை, மகிழ்ச்சியை, வெற்றியை பகிர்ந்திடும் தாய்மடியாகக் கவிதையை இவர் கருதியிருப்பது புரிய வருகையில் 'தொடர்ந்து தொகுப்புகள்' என்பது அத்தனை வியப்பாக இல்லை.

வாழ்த்துக்கள் நிலாரசிகன்.
***

“வெயில் தின்ற மழை”
விலை ரூ:50. பக்கங்கள்: 72. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: - அனைத்து முன்னணி நூல் நிலையங்களிலும்(டிஸ்கவரி புக் பேலஸ்,நியு புக் லேண்ட்ஸ்,லேண்ட் மார்க்)

இணையத்தில் வாங்கிட இங்கே http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=161 செல்லலாம்.
*** *** ***


  • 15 ஜனவரி 2011 பொங்கல் அன்று மலர்ந்துள்ள அதீதம் புதிய இணைய இதழில் வெளிவந்துள்ள புத்தக அறிமுகம். நன்றி அதீதம்!
தள முகப்பில்..
***

***


***

புதன், 19 ஜனவரி, 2011

ஒளி வட்டம்


மாற்றுத் திறனாளிகள் கொண்டாடினர்
கடவுளென்று அவனை
தம் துயரங்களை
விருதுக்குரிய வெற்றிப் படமாக்கி
உலகறியப் பதிந்ததற்காக!

அவன் தலைக்குப் பின்
சுழலத் தொடங்கியிருந்த
ஒளிவட்டத்தை நெருங்க முடியாமல்
விழுந்து மடிந்து கொண்டிருந்தன
விட்டில் பூச்சிகளாய்..

படமெங்கும்
தத்ரூபமாய் நடித்து ஒத்துழைத்த
மாற்றுத் திறனாளிகள்
சம்பளப் பாக்கிக் கோரி
அனுப்பிக் கொண்டிருந்த
விண்ணப்பங்கள்!
***

படம்: இணையத்திலிருந்து..

18 ஜனவரி 2011, கீற்று இணைய இதழில்..

செவ்வாய், 18 ஜனவரி, 2011

பயங்கள்


பூனைக்குப் பயந்து
புதருக்குள் ஒளிந்த
எலியினைக் கண்டு
இரக்கம் கொண்டு
புசுபுசுப் பூனையாகிட
வழங்கினார் ஆசியை
வனத்திலிருந்த முனி.

புதுப்பிறவி எடுத்ததுமே
நடுநடுங்கத் தொடங்கியது
நாயினிடம் மாட்டினால்
என்னாவேன் என்று.
இதென்ன வம்பாயிற்று
சரி, போனால் போகட்டுமென்று
நாயாகும் வரம் தந்தார்.

வாலினை மடக்கி
நாலுகால் பாய்ச்சலில்
நாக்குத்தள்ள மூச்சிரைக்க
ஓடலாயிற்று-
எங்கோ தொலைவில்
உலாத்தும் புலிகள்
கண்ணில் பட்டாலே.

இனியாவது துணிவாக
வாழட்டும் கம்பீரமாக-
பொங்கும் கருணையுடன்
புலியாக்கிப் பார்த்துப்
புளங்காகிதம் அடைந்தார்.
'வேடன் பார்த்தால்
வேறு வினையே
வேண்டாம்'
வெருண்டு நின்றது
விலங்கு இப்போது.

‘புலியாகும் புண்ணியம்
கிடைத்தாலும் எலியின்
இதயத்துடனேதான்
இருப்பேன் என்கிறநீ
எலியாகவேதான்
மாறிப் போ!’
வரங்களைத் திரும்ப
வாங்கிக் கொண்டு
தன் தவத்திலே
மூழ்கிப் போனார் முனி.

*** *** ***

படம்: இணையத்திலிருந்து...

சனி, 15 ஜனவரி, 2011

பொங்கல் பரிசுகள்-தமிழ்மணம் விருது 2010-அதீதம் இணைய இதழ்

வெள்ளிப் பதக்கம்


காட்சிப் படைப்புகள் பிரிவில்
‘ஏரிக்கரைப் பூங்காற்றே-PiT’ பதிவுக்கு!

புகைப்படப் பிரிவில் கிடைத்த பரிசுக்கு நான் எடுத்த புகைப்படத்தாலேயே சொல்லி விட்டுள்ளேன் நன்றி:)!


வாக்களித்த அத்தனை நண்பர்களின் அன்புக்கும் நன்றி!
நடுவர் குழுவுக்கும் நன்றி!

வெற்றி பெற்ற சக பதிவர் யாவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

விருதுகள் நம்மை மேலும் உற்சாகமாய் தொடரச் செய்யும் உந்து சக்திகள்!
பல சேவைகளுடன், விருதுகளையும் தந்து பதிவர்களுக்கு ஊக்கம் தந்து வரும்
தமிழ்மணத்துக்கு
சொல்லுவோம் நன்றிகள்!

விருது விவரங்களுக்கு செல்லுங்கள் இங்கே.

அதீதம்

பதிவர்கள் நம் அனைவருக்குமான பொங்கல் பரிசாக, இன்றைய தினத்தில் புதிதாக மலர்ந்துள்ளது ‘அதீதம்’ இணைய இதழ். முகப்பில் எனது கட்டுரையும் [நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’ புத்தக அறிமுகம்] எனக்கான இன்னொரு பொங்கல் பரிசாக:)! நன்றி அதீதம்!

சிறப்பான உள்ளடக்கம், வடிவத்துடன் தொடங்கப்பட்டுள்ள இவ்விதழ் படைப்பாளிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைய இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

நாம் நன்கறிந்த நிலாரசிகன், உழவன், அனுஜன்யா, தேனம்மை, ரிஷான் ஷெரீஃப்,விநாயகமுருகன், லதாமகன் ஆகியோரின் கவிதைகள்; ஷைலஜா, சந்தனமுல்லை ஆகியோரின் கட்டுரைகள்; வித்யா, கார்த்திகா வாசுதேவன், அமைதிச்சாரல், வெண்பூ ஆகியோரின் சிறுகதைகள்; நந்து, ஜீவ்ஸ் இருவர் எடுத்த புகைப்படங்கள் என அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளது அதீதம்!

‘வலையோசை’யில் பதிவர்களின் கீச்சுக் குறள்களுடன் பதிவர் அறிமுகமும்! ‘சினிமா’வும் உண்டு.

படைப்பாளிகளுக்கென்றே பிரத்தியேகமான இதழாக ஆரம்பமாகியுள்ள ‘அதீதம்’ பதிவர்கள் நம்முடன் கைகோர்த்திருப்பது இனியதொரு ஆரம்பம். சென்று பாருங்கள் இங்கே.



பொங்கல் வாழ்த்து!


கதிரவன் கருணை வைக்க

மாதம் மும்மாரிப் பொழிய
நானிலம் செழிக்க
எங்கும் சுபிட்சம் நிலவ

எல்லோரது இல்லங்களிலும்
பொங்குக பொங்கல்!

அனைவருக்கும்
இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!
***

வியாழன், 13 ஜனவரி, 2011

கண்ணெதிரே.. முகங்கள்.. படங்கள்-ஜனவரி PiT

“புன்னகை , சோகம், குழந்தை, பெரியவர்கள், இப்படி முகம் எந்த மாதிரி வேண்டுமானாலும் இருக்கலாம்.. முடிந்த அளவு முகம் தெளிவாக இருக்கட்டும்..” என்கிற அறிவிப்பு இங்கே.

இதுவரையிலும் போட்டியில் கலந்து கொண்டுள்ள திருமுகங்களைக் காணச் செல்லுங்கள் இங்கே!

தொடர் ஓட்டத்தில்.. இருத்தலின் அடையாளமாய்.. முதல் நான்கு படங்களில் ஒன்றைப் போட்டிக்குத் தர எண்ணியுள்ளேன். [படங்கள் இரண்டும் மூன்றும் கூட வலைப்பூவில் பதியாத படங்களே, அதே நபர்களை வேறு கோணத்தில் நீங்கள் பார்த்திருப்பினும்..]

நேரமிருப்பவர் பிடித்த படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்:)!


1.முதுமை வரைந்த சித்திரம்

2.மூப்பு தீட்டிய ஓவியம்


கண்ணெதிரே..

காலம் தீட்டிய சித்திரங்களாய்
முதுமையின் விளிம்பில்
இரண்டு முகங்கள்

தளர்வில் முழுதாய்
திறக்க இயலா விழிகள்

தொலைத்த இளமையில்
நரைத்து விட்ட முடிகள்

தோலின் சுருக்கங்களில்
வாழ்வின் அனுபவங்கள்

எல்லோரும் எய்துவோம்
ஓர் நாள் இந்நிலையை..

கற்க வேண்டிய பாடமாய்
கண்ணெதிரே முதியவர்கள்!!!
***



3.விழுதும் தளிரும்


முன்னொரு சமயம் பொம்மைகளோ விலங்குகளோ போட்டித் தலைப்பாக இருந்த வேளையில் “ஒரு மனுசப் பயலுவ மூஞ்சி கூட படத்துல தெரியப்படாது ஆமா” என [நானில்லைங்கோ] நடுவர் கூறியிருந்தார். ஆனால் இப்போது மாண்புமிகு விலங்குகள் 'முகம்' தெரியக் கூடாது என சொல்லவேயில்லை என்பதால் அவற்றையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொண்டு விட்டுள்ளேன்:)!

4.இரண்டு முகங்கள் இரண்டு உணர்வுகள்

பாரம் சுமக்கும் சோகத்தில்
கடிவாளத்துள் குதிரை முகம்

சவாரி போகும் குதூகலத்தில்
மினுங்கும் குழந்தை முகம்
***

5.பேசும் கண்

‘காசு எம்புட்டுக் கிடைக்கும்’
கண்மூடிக் கணக்குப்
போடும் பாகன்!

பிரமாண்ட உருவத்தின்
பெரும் வேதனை பேசுகின்ற
ஒற்றைச் சிறு கண்!
***

6.‘வயிறு நிரம்புச்சா தாயீ?’

#வாஞ்சை


7.‘வாழ்க்கை ஒரு சக்கரமாமே?’

#டவுட்டு

8.“நினைப்புல இருக்கா
டார்வின் த்யரி?”

#சவுண்டு


9.“ஆ.. ராசா..!!!”

‘இனிமேலே இந்த வேடம் போடக் கூடாதுடா சாமி’!!!
#டெசிஷன்

வியாபாரம்

10.பொரி பொரி..


11.கடல கடல..


12.‘அடடா வட போச்சே’

கடையை விரிக்க வேறிடம் பார்த்து
நடையைக் கட்டும் பெரியவர்.


பிள்ளை பொன் வண்டுகள்!!!

13.மகிழ்ச்சி நம் கையில்..


14a.இணைபிரியா தோழர்கள்


14b.அன்புச் சகோதரிகள்



15.விழி வண்ணமாய்..



16.கலை அன்னமாய்



17.முழு மதியாய்..



18.இளந்தென்றலாய்..




19.வான் நிலவாய்..



20.வளர் பிறையாய்..

இனிக்கும் கரும்புகளாய்..
மழலைச் செல்வங்கள்!!



பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin