
அடிக்கடி கனவில் வந்தான் அந்தச் சிறுவன்
அழகான பெரிய வட்டக் கண்கள்
சிரிக்கும் போது
மேல் வரிசையின் முன்னிரெண்டு பற்கள் மட்டும்
மாட்டுப்பல் போல பெரிசாய்
கொஞ்சமே கொஞ்சம் தூக்கினாற் போல்
ஆனாலும் தெத்துப்பல் என்று சொல்ல முடியாது
கிட்டிப்புள்ளில் கில்லாடி
கோலிக் குண்டைச் சுண்டி விட்டால்
தப்பாது வைத்த குறி
மகுடிக்கு ஆடும் பாம்பைப்போல் கிறங்கிச் சுற்றும்
அவன் சாட்டைக்குப் பம்பரம்
காற்றைக் கிழித்து உயர உயரப் பறக்கும்
களத்துமேட்டில் அவன் பிடித்து நிற்கும் காற்றாடி
எனக்குச் சுட்டுப் போட்டாலும்
வராத வித்தைகளை
ஊதித்தள்ளி உவகை தந்தான்
மிகப் பரிச்சயமான முகமாய்
ஆனால் யாரென்று அறிய முடியாமல்
என் கனவுகளை நிறைத்திருந்தான்
ஒருஅதிகாலையில்,
கம்மாக் கரையிலிருந்து கொஞ்சமும் தயங்காமல்
டைவ் அடித்து நீருக்குள் குதித்தவன்
தம் பிடித்து வெளியில் வராமல்
போக்குக் காட்டியபோது
பதைத்து வியர்த்து விழித்தேன்
‘இனி கனவில் வரவே மாட்டானோ’
அழுத்தும் அலுவலக வேலைகளுக்கு நடுவிலும்
அலைக்கழித்தது அவன் சிரித்த முகம்
இரவு இரயிலடியில்
என்னைப் பெயர் சொல்லியழைத்த
ஒரு கிராமத்துப் பெரியவர்
தன்னைத் தூரத்து உறவென்று
அறிமுகம் செய்து கொண்டபோது
ஆச்சரியமாய்ப் பார்த்தேன்
வெள்ளந்தி மனிதர்,
‘சின்னதுல பார்த்ததுதான்
ஆனாலும் செல்லுல சிரிச்சுப் பேசிகிட்டே
எதுக்க நீ வந்தப்ப
முட்டைக் கண்ணும் அந்த
முன்னிரெண்டு மாட்டுப்பல்லும்
காட்டிக் கொடுத்துச்சுப்பா’ என்றார்!
*** *** ***
படம் நன்றி: உயிரோசை