இரண்டு விருதுகள்! இரண்டு பதங்கங்கள்! இரட்டை சந்தோஷம்!


நன்றி தமிழ்மணம்! நன்றி நண்பர்களே!
நம் படைப்புகளை உலகம் அறியத் திரட்டித் தருவதோடு நின்று விடாமல் வருட முடிவில் போட்டியும் நடத்தி விருதுகள் வழங்கி வரும் தமிழ்மணத்தின் மகத்தான சேவைக்கு வணக்கங்கள்! இந்த வருடமும் திருவிழா போல நடந்து முடிந்த போட்டியின் முடிவுகள்
இங்கே!
வாக்களித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
ஏனைய பிரிவுகளில் பரிசு பெற்ற மற்றவருக்கும் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
சமூகம் பிரிவில் நான் பெற்றிருக்கும் முதல் இடம் சற்றும் எதிரே பாராதது. அப்பதிவில் சொல்லப்பட்டவை பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்றே போட்டிக்குப் பரிந்துரைத்திருந்தேன்.
ஒருவர் எழுதியதை வாசிக்கையில் அது சம்பந்தமாக மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர் பதிய.. இன்னும் பலர் தொடர.. என்பது வலையுலகில் நிலவும் ஆரோக்கியமான சூழல். தொடர் பதிவுகளின் நோக்கமும் கூட அதுவேதான், அழைப்பாக வருகையில் பலவற்றை என் வரையில் பகிர்ந்திட குறிப்பாக எதுவுமில்லாத பட்சத்தில் அன்புடன் நான் மறுத்து விட்டிருந்தாலும்.
சர்வேசனின் ‘உதவும் கரங்கள்-ஒரு விசிட்’ பதிவினைத் தொடர்ந்து நான் வெளிப்படுத்த விளைந்த எண்ணங்களே இப்பதிவு. அவருக்கு என் நன்றிகள். அவரது பதிவையும், என்னைத் தொடர்ந்து ஜீவன், ரம்யா ஆகியோர் எழுதிய பதிவுகளையும் நான் அங்கே தந்திருந்த சுட்டிகளின் மூலமாகப் பலரும் வாசிக்க வாய்த்திருக்குமேயானால் அதுவே மிகுந்த மனநிறைவு!
ஹி..! பெரிய வல்லுநராக இல்லாவிட்டாலும் ஆர்வத்துடனும் சிரத்தையுடனும் தொடர்ந்து செய்யும் செயல்கள் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ஈட்டித் தரும் அங்கீகாரம் என்பதற்கான அத்தாட்சி காட்சிப் படைப்பில் கிடைத்திருக்கும் வெற்றி. இந்த விருதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! PiT குழுவினருக்கே இதை சமர்ப்பிக்கிறேன்.
பதிவுலகம் நுழைந்ததில் இருந்து ஒரு மாதம் கூடத் தவறாமல் PiT போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன் இதுவரையில். நான்கு முறை முதல் சுற்றுக்குள் வந்துள்ளேன். பரிசு மட்டுமே இலக்கு என்றில்லாமல் ‘பங்களிப்பே சிறப்பு’ எனும் மனோபாவத்துடன் முடிந்தவரை எல்லாப் போட்டிகளிலும் எல்லோரும் கலந்து கொள்வோம். நிச்சயம் அது நம் திறமைகளை வெளிக் கொண்டு வரும்.
PiT குழு மாதாமாதம் விதம்விதமாய் தலைப்பைக் கொடுத்து, புகைப்படத் துறையின் மீதான நம் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து போட்டிகளை நடந்தி வருகிறது. வல்லுநரோ கத்துக்குட்டியோ எவராயினும் அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள பொறுமையாக அறிவுரைகளும் வழங்குகிறது. வாழ்க அவர்களது சேவை!
'Land Mark' தலைப்பைக் கொடுத்த நபர் குழுவிலே யாருங்க? உங்களுக்கு தனியாக ஒரு சிறப்பு நன்றி:)!
என்ன, ஒரு சின்ன மனக்குறை. முன்னரெல்லாம் போட்டித் தலைப்பு வெளியான சில நாளில் தமிழ்மணமெங்கும் PiT பதிவுகளாகவே இருக்கும். முடிவுத் தேதி நெருங்க நெருங்க திருவிழாதான். ஆனால் இப்போது படங்களை நேரடியாக சமர்ப்பித்திடும் வசதி வந்த பின் இதற்கெனப் பதிவிடுபவர்கள் எண்ணிக்கை வெகுவாகு குறைந்து விட்டது.நண்பர் கிரி, ‘நீங்கள் ஒருவர்தான் இத்தனை ஆர்வத்துடன் பதிவிடுகிறீர்கள்’ என்பார். ஆனால் முன் எப்போதையும் விட கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை 50 முதல் 70 வரை என இப்போது அதிகரித்தே இருக்கிறது. அதுவும் கடைசி மணி நேரத்தில் 30 பேர் படங்களை வந்து இணைப்பது அட்டகாசமாக இருக்கும். இவர்கள் எல்லோரிடத்திலும் நான் வைக்கும் வேண்டுகோள் பதிவாகவும் படங்களைத் தாருங்கள் என்பதே. இது பார்க்கும் இன்னும் பல பேரை ஆர்வத்துடன் கேமிராவைத் தூக்க வைக்கும்.
கடந்த நான்கு நாட்களாக குமரகத்தின் தாஜ் ரிசார்ட்டில் ஓய்வுக்காக சென்றிருந்த இடத்தில், அறிவிப்பு வெளியான அன்று வலைப்பதிவுகள் திறக்கவேயில்லை. வெற்றி பெற்றிருந்த அந்தந்த எனது பதிவுகளில் நண்பர்கள் வாழ்த்தி இட்டிருந்த பின்னூட்டங்கள் வாயிலாகவே விருதுகள் கிடைத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தாங்களே பரிசு பெற்ற சந்தோஷத்துடன் மனம் நிறைந்த வாழ்த்துக்களாகவும், மூத்த பதிவர்களின் ஆசிகளுடனும் வந்து குவிந்த தனி மடல்களும் குறுஞ்செய்திகளும் நெகிழ வைத்தன. ‘ஹைய்யா.., ராமலக்ஷ்மி மேடம் ஜெயிச்சிட்டாங்க..’ போன்றதான பின்னூட்டங்கள் இன்னும் நெகிழ்வு.
சில மாதங்களுக்கு முன்னர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள், ஏற்பட்ட சில பக்கவிளைவுகளால் உடல்நலக் குறைவு, இன்னும் தொடரும் மருந்துகள் என மனதும் உடலும் சற்றே சோர்ந்திருந்த வேளையில் சமீபகாலமாகத் தொடர்ந்து கிடைத்து வரும் சில அங்கீகாரங்கள் நிஜமாகவே என்னை உற்சாகப் படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
அதிலும் தமிழ்மணம் விருதென்பது வருடம் முழுவதும் கூடவே வந்த தோழமைகள் சுற்றிச் சூழ நின்று கைதட்ட, தாயின் பரிவோடு திறமையைத் தட்டிக் கொடுக்கும் தலைமையாசிரியரிடமிருந்து பரிசு வாங்குவது போன்றதான சின்ன வயது சந்தோஷம். குழந்தையின் குதூகலம். பதிவருக்கே உரித்தான பரவசம்:)!
எப்போதுமே அதிக எண்ணிக்கையில் பதிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, கடந்த சில மாதங்களாக அதிகம் எழுதவுமில்லை. வழக்கமாக செல்லும் வலைப்பூக்கள் பலவற்றிற்கு தொடர்ந்து செல்லவும் இயலவில்லை. இப்போது தேறி தெம்பாகி வரும் வேளையில் ‘எழுது இன்னும்’ என இழுத்துப் பிடித்து தந்துள்ளீர்கள் ஒன்றிற்கு இரண்டாகப் பதக்கங்கள்!
தனிமடலில் வாழ்த்தும் போதே ‘போக வேண்டிய பயணம் இன்னும் இருக்கிறது’ என அக்கறையுடன் நினைவுறுத்தும் உங்கள் போன்ற நட்புகள் கூடவே வருகையில்.. என்ன சொல்ல.. எப்படி சொல்ல?
எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றி!